மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி பேட்டர்கள் விளையாடத் தொடங்கியுள்ளனர். மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து களத்தில் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க பேட்டர்கள் மெக் லேனிங் மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பெங்களூரு அணியின் பவுலர்கள் கடுமையாக திணறினர். 14.3 ஓவரில் அணியின் ஸ்கோர் 162 ரன்னாக இருந்தபோது மெக் லேனிங் 72 ரன்கள் (14 பவுண்டரி) எடுத்திருந்த நிலையில் நைட் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
லேனிங் உடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த ஷபாலி வர்மா 4 சிக்சர் 10 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த மேரிசன் கேப் மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸ் இணை தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து 223 ரன்கள் குவித்தது. மேரிசன் கேப் 39 ரன்னுடனும், ஜெமிமா ரோட்ரிகஸ் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.