மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் அணியை மும்பை வென்றிருந்தது. இந்நிலையில் இன்று 2 போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் போட்டியில் டெல்லி அணியை பெங்களூரு அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஓபனிங் பேட்டர்கள் கேப்டன் மெக் லேனிங் மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். இந்த இணை பிரிக்க முடியாமல் பெங்களூரு அணி திணறியது. 15 ஆவது ஓவரில்தான் கேபிடல்ஸ் அணி முதல் விக்கெட்டை இழந்தது. மெக் லேனிங் 72 ரன்களும், ஷபாலி வர்மா 84 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர். அடுத்து வந்த மேரிசன் கேப் மற்றும் ஜெமிமா ரோட்ரிகசும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்த டெல்லி அணி 223 ரன்கள் எடுத்தது.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களூ அணி களத்தில் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் மந்தனா பவுண்டரிகளை விளாசி நம்பிக்கை அளித்தார். அவரது விக்கெட்டை ஆலிஸ் கேப்ஸி கைப்பற்ற அடுத்து வந்த வீராங்கனைகள் நிலையான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த தவறினர். மந்தனா 35, சோஃபி டெவின் 14, எலிஸ் பெர்ரி 31, ஹீதர் நைட் 34, மேகன் ஷூட் 30 ரன்கள் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பெங்களுரு 163 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அற்புதமாக பந்து வீசிய டெல்லி அணியின் தாரா நோரிஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.