இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த முடிவை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மற்றும் 2 ஆவது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 3 ஆவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கம்பேக் கொடுத்தது.
இந்நிலையில் கடைசி மற்றும் 4 ஆவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் தாயார் மரியா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை கவனித்துக் கொள்வதற்காக கம்மின்ஸ் கடந்த மாதம் ஆஸ்திரேலிய புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஸ்டீவன் ஸ்மிதிற்கு வழங்கப்பட்ட கேப்டன் பொறுப்பு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பாட் கம்மின்ஸ் தனது குடும்பத்தினருடன் இருப்பார். அவர் 4 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார். கடைசி டெஸ்ட் போட்டியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தொடர்வார்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு பின்னர் தொடங்கவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாட் கம்மின்ஸ் பங்கேற்பாரா என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கடந்த டெஸ்டில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.