இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அசத்தலான வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஏற்கனவே இழந்த நிலையில், கடை போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 3 ஆவது ஒருநாள் போட்டி சட்டோக்ரம் மைதானத்தில் இன்று காலை 11.30 மணியளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற 3 ஆவது விக்கெட்டிற்கு ஷாண்டோ – விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இணைந்தனர். இருவரும் தொடக்கத்தில் ஏற்பட்ட விக்கெட் சரிவை சரி செய்ததுடன், பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். ஷாண்டோ 53 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முஷ்பிகுர் ரஹிம் 70 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 75 ரன்களும் எடுத்தனர். 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 246 ரன்கள் எடுத்தது.
247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் – பிலிப் சால்ட் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அணி 54 ரன்கள் எடுத்திருந்தபோது, பிலிப் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. ஜேசன் ராய் 19, ஜேம்ஸ் வின்ஸ் 38, சாம் சரன் 23, ஜோஸ் பட்லர் 26 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் கிறிஸ் வோக்ஸ் பொறுப்புடன் விளையாடி 34 ரன் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 196 ரன்கள் எடுத்து 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பவுலிங்கிலும் கலக்கிய ஷகிப் அல் ஹசன், 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒருநாள் போட்டித் தொடரையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் வியாழன் அன்று தொடங்கவுள்ளது.