மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி. அணி வெற்றி பெற குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 202 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே 2 போட்டிகளில் பெங்களூரு அணி தோல்வியடைந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று எழுச்சி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் பெங்களுரு அணியின் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஸ்னே ரானா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க வீராங்கனை சபினேனி மேகனா 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த சோபியா டுங்ளே, ஹர்லீன் தியோல் இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது.
டுங்ளே 18 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 28 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தியோல் 45 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்தவர்களில் ஆஸ்லே கார்டனர் 19 ரன்களும், ஹேமலதா 16 ரன்களும், சதர்லேண்டு 14 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 201 ரன்கள் குவித்துள்ளது. பெங்களூரு அணி தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஹீதர் நைட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர் விளையாடி வருகின்றனர்.