டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் 6 புள்ளிகளை இழந்து முதலிடத்தை இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த வாரம் 865 புள்ளிகள் பெற்ற அஷ்வின், சர்வதேச அளவில் டெஸ்ட் பவுலர்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தார். தற்போது அவர் பெற்றுள்ள புள்ளிகள் குறைந்தாலும், நம்பர் ஒன் என்ற இடத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் அடுத்து வரும் ஆட்டங்களில் ஆண்டர்சன் சிறப்பாக விளையாடினால் அஷ்வினை பின்னுக்கு தள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த 2 பவுலர்களுக்கும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கடும் போட்டியாளராக இருந்தார். அவர் இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது முதலிடத்திற்கான போட்டி அஷ்வின், ஆண்டர்சன், தென்னாப்பிரிக்க அணியின கசிகோ ரபாடா, ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ளது. தனது சொந்த அலுவல் காரணமாக கம்மின்ஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கசிகோ ரபாடா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 7 ஆவது இடத்தில் இருந்த அவர் 3 இடங்கள் முன்னேறி 4 ஆவது இடத்திற்கு வந்துள்ளார்.
பாட் கம்மின்ஸ் 3 ஆவது இடத்தில் இருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய நாதன் லியோன் 769 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா 2 இடங்கள் முன்னேறி 9 ஆவது இடத்திற்கு வந்துள்ளார். பேட்ஸ்மேன்களில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்திலும், ஸ்டீவன் ஸ்மித் 2 ஆவது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 3 ஆவது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆசம் 4 ஆவது இடத்திலும் உள்ளனர். 126 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இந்திய அணி 115 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் இருக்கிறது.