வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 ஆவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 311 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் எய்டன் மார்க்ரம் 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பெர்க் நகரில் இன்று தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக டீன் எல்கர் – எய்டன் மார்க்ரம் களத்தில் இறங்கினர். இருவரும் தென்னாப்பிரிக்க அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். அணி 76 ரன்கள் எடுத்திருந்தபோது, 54 பந்தில் 42 ரன்கள் சேர்த்த டீன் எல்கர் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து இணைந்த மார்க்ரம் – டோனி டி ஜோர்ஸி இணை சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து.
இந்த இணையை பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வொய்ட் மேற்கொண்ட முயற்சிகள் உடனடியாக பலன் அளிக்கவில்லை. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 116 ரன்கள் சேர்த்தனர். அப்போது 96 ரன்னில் களத்தில் இருந்த எய்டன் மார்க்ரம் மோட்டி பந்துவீச்சில் ப்ளாக்வுட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 85 ரன்கள் எடுத்திருந்போது டோனி டி ஜோர்ஸி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் பவுமா 28 ரன்னும், ரியான் ரிக்கெல்டன் 22 ரன்னும், விளாடின் முல்டர் 12 ரன்னும் எடுத்தனர். இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 311 ரன்கள் சேர்த்துள்ளது. விக்கெட் கீப்பர் ஹென்ரிக் கிளாசன் 17 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். நாளை 2 ஆம் நாள் ஆட்டம் தொடர்கிறது.