சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் இந்த மைதானம், வருகின்ற 17-ம் தேதி திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இணைந்து திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அந்த கேலரிக்கு கலைஞர் கருணாநிதி ஸ்டான்ட் என பெயர் சூட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொள்வார் என கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த கேலரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை காண அதிக அளவில் ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால், இந்த கேலரி திறப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கேலரி திறந்த பிறகு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 38,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 22-ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான மூன்றவாது ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்து.