டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் மிக எளிதாக 10 ஆயிரம் ரன்களை எடுப்பார் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்துள்ள நிலையில், தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. இதில் வளர்ந்து வரும் இளம் ஆட்டக்காரர் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். 235 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்சர் மற்றும் 12 பவுண்டரியுடன் 128 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இன்றைய 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை குவித்துள்ளது. கில்லின் சதம் இந்திய அணி ரன்களை குவிப்பதற்கு உதவியாக அமைந்தது. இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கில்லை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது- ஃபார்வேர்டில் குனிந்த மிக எளிதாக சுப்மன் கில் டிஃபென்ஸ் ஆடுகிறார். மிட்செல் ஸ்டார்க் வீசக் கூடிய வேகமான பந்தையும் சிரமம் இல்லாமல் அவர் எதிர்கொள்கிறார். பேட்டை மிக நேராக வைத்து அவர் ஆடும் டிஃபென்ஸ் ஆட்டக்களை பார்க்கும்போது அருமையாக இருந்தது.
பேக்ஃபுட்டை விட, ஃப்ரன்ட் ஃபுட்டில் டிஃபென்ஸ் செய்கிறார். இது நேர்த்தியான விளையாட்டு என்பதை விட, இதுதான் டெஸ்ட் ஆட்டம் என்று கூறலாம். கில்லுக்கு விளையாட வயது இருக்கிறது. உலகின் முன்னணி பந்து வீச்சாளர்களை அவர் எளிதாக எதிர்கொள்கிறார். இதே ஃபார்மில் அவர் தொடர்ந்து விளையாடினால் டெஸ்டில் அவர் மிக எளிதாக10 ஆயிரம் ரன்களை குவித்து விடுவார். இவ்வாறு அவர் கூறினார். டெஸ்ட, ஒருநாள், டி20 என 3 ஃபார்மேட் கிரிக்கெட் ஆட்டங்களில் ஒரே ஆண்டில் கில் சதம் அடித்துள்ளார். இப்படியொரு சாதனையை ஏற்கனவே 3 இந்திய பேட்ஸ்மேன்கள் செய்துள்ள நிலையில் அவர்கள் வரிசையில் கில்லும் இணைந்துள்ளார்.