மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா ஹீலி மற்றும் தேவிகா வைத்யா ஆகியோர் களத்தில் இறங்கினர். தேவிகா 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கிரன் நேவ்கிர் 17 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் இணைந்த ஹீலி – தஹிலா மெக்ராத் இணை மும்பை அணியின் பவுலிங்கை துவம்சம் செய்தது.
இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் உயர உதவினர். 1 சிக்சர் 7 பவுண்டரியுடன் 58 ரன்கள் குவித்த அலிசா ஹீலி சைகா இஷாக் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். 37 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 50 ரன்கள் சேர்த்த தஹிலா மெக்ராத் சைகா இஷாக் பவுலிங்கில் யஸ்திகா பாட்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3 ஆவது விக்கெட்டிற்கு அலிசா ஹீலி – தஹிலா மெக்ராத் இணை 82 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்துள்ளது. மும்பை தரப்பில் சைகா இஷாக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள் களத்தில் இறங்கியுள்ளனர்.