இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி பிப்ரவரி மாத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஹேரி ப்ரூக் தேர்வாகியுள்ளார். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு மாதம் தோறும் விருதுகள் வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கான விருதைப் பெறுவதற்காக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, இங்கிலாந்து அணியின் ஹேரி ப்ரூக் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் குடாகேஷ் மோட்டி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஹேரி ப்ரூக்கை பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதேபோன்று மகளிர் பிரிவில் ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்டனர் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹேரி ப்ரூக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையொட்டி அவருக்கு இந்த வருது அளிக்கப்படுகிறது.
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் ஆஷ்லே கார்டனரின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. 24 வயதாகும் வலது கை ஆட்டக்காரரான ஹேரி ப்ரூக் இங்கிலாந்து அணியில் இடம்பெற்று கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஹேரி ப்ரூக்கை இங்கிலாந்து அணி களம் இறக்கியுள்ளது. இவரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.