மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தான் விளையாடிய 5 போட்டிகளில் தோல்வியை தழுவி ஏறக்குறைய தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், அந்த அணி வலுவான உ.பி. வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தனது முதல் வெற்றியை பெங்களூரு அணி பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் அதன் ரசிகர்கள் உள்ளனர்.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஐந்திலும் தோல்வியை சந்தித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில் உள்ளது. இதன் நெட் ரன் ரேட் மைனஸ் 2.109 ஆக உள்ளது. முதல் போட்டியில் டெல்லி கேபிடல்சை எதிர்கொண்ட பெங்களூரு 60 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது போட்டியில் மும்பை அணியிடம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், குஜராத் அணியிடம் 11 ரன்கள் வித்தியாசத்திலும், உ.பி வாரியர்ஸ் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும், கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் பெங்களூரு அணி தோல்வி அடைந்துள்ளது.
இந்த அணியில் நட்சத்திர ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், சோபி டிவைன், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட் உள்ளிடோர் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் பெங்களூரு அணி திணறி வருவது அதன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று தனது 6 ஆவது லீக் ஆட்டத்தில் விளையாடும் பெங்களூரு அணி, தனது முதல் வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். மகளிர் ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே, இரவு 7.30 –க்கு ஆரம்பமாகிறது.