மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று தனது 5 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மகளிர் ஐபிஎல் தொடரின் 12 ஆவது லீக் போட்டி மும்பை – குஜராத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஸ்னே ராணா, மும்பை அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து களத்தில் இறங்கிய மும்பை பேட்டர்களில் ஹேலி மேத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். பின்னர் இணைந்த யஸ்திகா பாட்டியா – நேட் சீவர் இணைய சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பாட்டியா 44 ரன்னும், நேட் சீவர் 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 162 ரன்கள் எடுத்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில், தொடக்க வீராங்கனை சோபியா டுங்ளே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மற்றொரு ஓபனர் சபினேனி மேகனா 16 ரன்னும், ஹர்லீன் தியோல் 22 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஸ்னே ராணா 20 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்தில் உள்ளது.