(16-03-2023)
மாணவர்கள் தமது உரிமைகளுக்காக முன்னெடுத்த பல போராட்டங்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறைகள் தொடர்பான விசாரணைக்குத் தகவல் வழங்க மறுத்த பொது பாதுகாப்பு அமைச்சருக்கு அழைப்பாணை அனுப்பியதை ஏற்றுக்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பின் வாங்கியுள்ளது.
மார்ச் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனிப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடக்குவதற்காக, ‘பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்துவதற்கு’ அமைச்சர் டிரான் அலஸை அழைத்ததாக ஆணைக்குழு மார்ச் 9ஆம் திகதியன்று சிங்களத்தில் அறிவித்திருந்தது.
எனினும் நான்கு நாட்களுக்குப் பின்னர் அது அழைப்பாணை அல்ல, ‘விளக்கத்திற்கான கோரிக்கை’ என ஆங்கிலத்தில் வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
“இதற்கமைய இந்தப் போராட்டங்களை ஒடுக்க பொலிஸ் அதிகாரிகள் கடைப்பிடித்த நடைமுறைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சராகக் கடமையாற்றும் அமைச்சர் டிரான் அலஸ் கடந்த 13.03.2023 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்” என மார்ச் 9ஆம் திகதி ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் சிங்களத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆங்கிலத்தில் அறிவித்தல் ஒன்றை விடுத்து, இலங்கையில் வசிக்கும் எந்தவொரு நபரையும் சாட்சியமளிப்பதற்கும் ஆவணங்களை வழங்குவதற்கும் ஆணைக்குழுவுக்கு அழைப்பதற்கான ‘முழுமையான அதிகாரம்’ இருந்தாலும், அமைச்சர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, தனது செயலாளரின் ஊடாகச் செய்தது என்னவெனில், இலங்கை பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சரை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்து சில விளக்கங்களை வழங்குமாறு கோருவதுதான். சிங்களத்தில் வெளியிடப்பட்ட ‘அழைப்பாணை’ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆங்கிலத்தில் ‘கோரிக்கையாக’ மாற்றப்பட்டுள்ளது.
அதற்கு சவால் விடுத்த பொலிஸக்குப் பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ், விசாரணைக்காக அங்குச் செல்லப் போவதில்லை என பகிரங்கமாக அறிவித்திருந்தார். “ஊடகங்களில் வெளியாகும் பொய்யான அறிக்கைகளைத் தெளிவுபடுத்தவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என ஆங்கிலத்தில் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டிரான் அலஸை ஆணைக்குழுவிற்கு அழைப்பது தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த மார்ச் 9ஆம் திகதி சிங்கள மொழியில் வெளியிட்ட அறிவிப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்படவில்லை என்பதோடு, மார்ச் 13ஆம் திகதி ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு சிங்களத்தில் வெளியிடப்படாமல் இருப்பதையும் உறுதி செய்துள்ளது.
அந்த அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பும் இதுவரை பகிரங்கப்படுத்தப்பட வில்லை…
முன்னாள் தலைவர் அமைச்சருடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எதிர்வரும் 13ஆம் திகதி முன்னிலையாகப்போவதில்லை எனத் தீர்மானித்த பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், உரிய முறைமையின் கீழ் உரிய அழைப்பாணை விடுக்கப்படாத காரணத்தினால் அங்குச் செல்வதில்லை எனத் தீர்மானித்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
மேலும், மனித உரிமை மீறல் சம்பவமொன்றில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முதலில் செய்ய வேண்டியது, அதற்குப் பொறுப்பான அரச நிறுவனத்தின் அதிகாரிகளின் ஊடாக அறிக்கையொன்றைப் பெற்று ஆராய்வதே எனவும் மாறாக அந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரை அழைப்பதல்ல எனவும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் சட்டத்தரணியுமான பிரதிபா மஹாநாமஹேவா ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.
போராட்டங்களைக் கலைப்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு முதலில் செய்திருக்க வேண்டியது, பொது பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சரை அழைப்பது அல்ல, அதற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோருவதுதான் எனக் கலாநிதி மஹாநாமஹேவா தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்ட நாட்களில் (ஒவ்வொரு துறையும் தனித்தனியாக) போராட்டத்தைக் கட்டுப்படுத்த களத்தில் பணியாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பட்டியலை, 2023 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்புமாறு 09 மார்ச் 2023 அன்று பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பெயர் பட்டியல் கிடைக்கப்பெற்றதா என்பதை ஆணைக்குழுவோ அல்லது அதன் தலைவியும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான ரோஹினி மாரசிங்கவோ பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.