சிவா பரமேஸ்வரன்
இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்தல் காலங்களில் மட்டுமின்றி அடிக்கடி நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நிலை குறித்து மக்கள் கருத்துக் கணிப்புகள் நடைபெறும். அது பொதுவாக நாட்டு மக்களின் உணர்வுகளை (Mood of the Nation) பிரதிபலிக்கின்றன என்று கூறப்படும்.
அதில் மாறுபட்ட கருத்துக்கள், ஏற்றத்தாழ்வுகள், புள்ளிவீத விகிதாசாரங்களை எப்படி கருத்துருவாக மாற்றுவது; அப்படி மாற்றப்பட்ட கருத்துரு என்ன செய்தியை சொல்கிறது என்பதில் பல கேள்விகள் உண்டு. எனினும் அதன் முடிவை அரசியல்வாதிகள், பொதுமக்கள், பொருளாதார வல்லுநர்கள் போன்ற அனைத்து தரப்பினரும் பொதுவாக ஒரு அளவுகோலாக ஏற்றுக்கொள்வார்கள்.
பல நேரங்களில் இந்த கருத்துக்கணிப்புகள் தவறாகவும் சென்று ‘மக்களின் எண்ணங்களிற்கு’ மாறாகவும் முடிவுகள் வந்துள்ளன.
முதலில் இந்த கருத்துக்கணிப்புகள் எப்படி நடைபெறுகின்றன, யாரால் நடத்தப்படுகிறது, ஏன் நடத்தப்படுகிறது என்று சில அடிப்படை கேள்விகளை புரிந்துகொள்ள வேண்டும்.
சுமார் 30 ஆண்டுகளாக அப்படியான கருத்துக்கணிப்பில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அல்லது ஒரு அமைப்பில் அதை அலசும் குழுவில் இருந்த அனுபவம் எனக்குள்ளது என்ற அடிப்படையில் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த பீடிகை இப்போது எதற்கு என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவதில் நியாயமுள்ளது. அதை நான் அறியவும் செய்வேன்.
அதற்கான காரணமும் உள்ளது. அண்மையில் இலங்கையின் முன்னணி ஆங்கில தினசரியான ‘டெய்லி மிறர்’ ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அதன் சாராமசங்களைப் பார்ப்பதற்கு முன்னர் கருத்துக்கணிப்புகளின் நோக்கம், செய்யப்படும் விதம் ஆகியவை குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
கருத்துக்கணிப்புகள் ’ஒரு உள்நோக்கம் கொண்டவை’ என்று பொதுவான ஒரு கருத்து உண்டு. அதற்கான அடிப்படைக் காரணம் அது எந்த காலத்தில் செய்யப்படுகிறது, யாரால் செய்யப்படுகிறது, அதற்கு ஏதாவது பின்புலம் உள்ளதா என்று பல பரிமாணங்கள் உள்ளன. அனைத்திலும் முக்கியமாக ஏன்- எப்போது என்ற இரு விஷயங்கள் எப்போதுமே தொக்கி நிற்கும்.
இந்த கருத்துக்கணிப்புகளில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது எவ்வளவு பேரிடம் கருத்துக் கேட்கப்படுகிறது என்பதாகும். அதாவது ஆங்கிலத்தில் ‘Sample size’ என்று கூறப்படும் விஷயம். அதை முடிவு செய்வது மிகவும் முக்கியமானது மற்றும் சிக்கலானது. அது எந்தளவிற்கு கவனமாக பிரிக்கப்பட்டு கையாளப்படுகிறதோ அந்தளவிற்கு அதன் துல்லியத்தன்மை இருக்கும். அப்படி பிரிக்கும் போது பல காரணிகள் உள்வாங்கப்படும் அல்லது உள்வாங்கப்பட வேண்டும். அதில் கிராமம்/நகர்புறம், ஆண்/பெண், படித்தவர்/படிக்காதவர் (அதாவது கல்வித் தகுதி) சமூக- பொருளாதார சூழல், வாழ்வியல் சூழல் , வயது வரம்பு போன்ற காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கும். ஆங்கிலத்தில் சொல்வதானால்: Rural/Urban, Male/Female, literate/illiterate, socio-economic status (income based), living conditions, age group etc.,
அவ்வகையில் பலவகையான காரணிகளை மக்கள் கருத்தறியும் கருத்துக்கணிப்பில் உள்வாங்கும் போது அது பரந்துபட்ட அளவில் மக்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாகக் கருதலாம் அல்லது அவ்வாறே கருதப்படுகிறது.
டிஜிட்டல் உலகிற்கு முந்தைய காலத்தில் கருத்துக்கணிப்பை நடத்துபவர்கள் பல கேள்விகள் கொண்ட ஒரு வினாத்தாளை மக்களிடையே எடுத்துச் சென்று அவர்களின் பதில்களை அதில் குறிக்கச் சொல்லி அல்லது அவர்கள் கூற இவர்கள் (சரியாக?) குறித்துக்கொள்ள பின்னர் அனைத்து படிவங்களும் ஆராயப்பட்டு அதிலுள்ள தகவல்கள் தனித்தனியாகப் பிரித்து பகுப்பாய்வு செய்யப்பட்டு இவர்கள் இப்படியாகத்தான் நினைக்கிறார்கள், எனவே முடிவு இப்படியானதாக உள்ளது என்று விளக்கி வியாக்கானம் அளித்து அதை வெளியிடுவார்கள். இதில் நேர்மை என்ற மிக முக்கியமான காரணி பல நேரங்களில் காற்றில் பறக்கவிடப்படும். தேவையானவற்றை, மக்கள் பெயரில் தாம் விரும்புவதை கணிப்பு என்ற பெயரில் வெளியிடுகிறார்கள் என்ற விமர்சனம் எப்போதும் இருந்துள்ளது, இனியும் இருக்கும்.
உதாரணமாக ஒரு விடயத்தைப் பார்ப்போம். நான் ஊடகத்துறையில் இருப்பதால் எந்த ஊடகம் முதலிடத்திலுள்ளது என்ற கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்படுமாயின், அதில் ஒரு நிறுவனம் தாமே நாட்டின் முன்னணி ஊடகம், அதிக மக்களால் பார்க்கப்படுகிறது அல்லது வாசிக்கப்படுகிறது என்று பறைசாற்றிக்கொள்ளும். ஆனால் அவர்களின் விளம்பரத்தின் கீழே மிகவும் பொடியான எழுத்துக்களில், பூதக்கண்ணாடி வைத்துக்கூட வாசிக்க இயலாத அளவில் சில தகவல்களைத் தெரிவித்திருப்பார்கள். அதை சிரமப்பட்டு படித்தால், அவர்கள் கூறியுள்ளது தவிடுபொடியாகிவிடும். ஏனென்றால், அவர்கள் தாமே முதலானவர்கள் என்று கூறியுள்ளது எப்படியிருக்கும் என்றால், நகரங்களில், ஆண்கள் மத்தியில், பட்டதாரிகளிடம், 35 வயதிற்கு உட்பட்டவர்களில், மாதம் சுமார் 2000 டொலர் சம்பாதிப்பவர்கள், சொந்த வீடு மற்றும் வாகனம் வைத்துள்ளவர்கள், ஒரேயொரு குழந்தை உள்ளவர், நாளொன்றிற்கு 10 நிமிட அளவில் செய்திகளைப் பார்ப்பவர்கள்/வாசிப்பவர்கள் என்று ஏகப்பட்ட காரணிகளின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளதாக கூறுவார்கள். ஆனால் கருத்துக் கேட்கப்பட்டவர்களில் (Sample size) இந்த அனைத்து தகுதிகளின் அடிப்படையில் எவ்வளவு பேர் இருந்தனர் என்பது தான் இதில் மறைந்துள்ள முக்கியமான விஷயம்.
அரசியல் தொடர்பிலான கருத்துக்கணிப்புகளிற்கும் இது பொருந்தும்.
சரி……இப்போது டெய்லி மிறரின் அண்மைய கருத்துக்கணிப்பிற்கு வருவோம். அந்த கருத்துக்கணிப்பில் பல துணைக் கேள்விகளிற்கு அப்பாற்பட்டு பிரதானமாக ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டிருந்தது.
“இலங்கையை இன்றைய நிலையிலிருந்து மீட்டெடுத்து, நிலைத்திருக்க கூடிய வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்ல எந்த அரசியல் கட்சித் தலைவரிடம் அதற்கான பார்வையும் திறமையும் உள்ளது”?
இந்த கேள்விக்கு நான்கு தெரிவுகளை அவர்கள் அளித்திருந்தனர்.
ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திஸாநாயக்க மற்றும் இவர்களில் யாரும் இல்லை என்பதே அந்த நான்கு தெரிவுகள்.
இதற்கான பதில்களின் அடிப்படையில், அதிகபட்சமாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 45.3% ஆதரவுடனும் , அடுத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க 35% ஆதரவுடனும் நாட்டை மீட்டெடுத்து நிலைத்திருக்க கூடிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்வார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக கேள்விப் பட்டியலில் இருந்த ரணிலைவிட யாரும் இல்லை என்பதற்கான ஆதரவே 19.3 % உள்ளது என்று அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.
டெய்லி மிறர் நடத்திய இந்த கருத்துக்கணிப்பிலிருந்து இரண்டு விஷயங்கள் வெளிப்படுகின்றன. முதலாவதாக நாட்டின் தலைமைத்துவம், வழிநடத்திச் செல்லக் கூடிய தகுதி, பலவிதமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டை மீட்டெடுப்பதில் ஆகிய தலைவர்கள் பட்டியலில் ராஜபக்சக்கள் யாரும் இல்லை. ’போர் நாயகன், வெற்றி வேந்தன், நாட்டை மீட்டெடுக்க மீட்பர், சிங்களவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ‘ என்று போற்றி புகழப்பட்ட மகிந்த ராஜபக்ச மீட்பர்கள் பட்டியல் இடம்பெறும் நிலையில் கூட இல்லை. அதாவது பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் கூட ராஜபக்சக்களிற்கு ஆதரவு இல்லை. அதுமட்டுமின்றி அவர்களின் அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது என்பதாகவே அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு காலத்தில் அசைக்க முடியாக இருந்த சக்தியாக இருந்த மகிந்த ராஜபக்ச இன்று செல்லாக்காசாகவுள்ளார். போருக்கு பிறகான முதல் ஜனாதிபதி தேர்தலில் கூட அவரால் 57% வாக்குகளையே பெற முடிந்தது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டனில் வின்ஸ்டன் சர்ச்சிலிற்கு ஏற்பட்ட நிலையை நினைவூட்டுகிறது.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் ஹிட்லரின் ஜெர்மனியப் படைகளை அந்தப் போரில் வெற்றிகொண்டதில் அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த சர்ச்சிலிற்கு பெரும் பங்கு இருந்தது. ஆனால் அந்த உலக மகா யுத்தம் முடிந்த பிறகு பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடைந்தது.
சரி, மகிந்தவின் அரசியல் சகாபதம் முடிந்துவிட்டதாகக் கருதினாலும், அவரால் இயக்கப்பட்டு, அவரது மொட்டுக் கட்சியின் ஆதரவில், பின் வாசல் வழியாக ஜனாதிபதியாக வந்து நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் ரணிலின் நிலைமை இன்னும் மோசம். டெய்லி மிறரின் இந்த கருத்துக்கணிப்பு ரணிலிற்கும் நாட்டில் இனி எதிர்காலம் இல்லை என்பதை கூறுகிறது. அதாவது அவரது அரசியல் வாழ்வும் அஸ்தமனமாகிறது என்பதாகவே கருத்துக்கணிப்பை புரிந்துகொள்ள முடியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கோட்டை என்று அவராகவே கூறிக்கொள்ளும் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அவரால் வெல்ல முடியவில்லை. பிறகு விகிதாசார முறையிலுள்ள ஒரு குறைபாட்டின் விளைவாக அவரது கட்சிக்கு தேசியப் பட்டியலில் ஒரேயொரு ஆசனம் கிடைக்க, அதை ஆறு மாத காலம் நிரப்பாமல் வைத்திருந்து அதை தனதாக்கிக் கொண்டவர்தான் ‘நரி’ ரணில்.
முதல் நாள் வரை ‘அரகலய’ போராட்டத்திற்கு ஆதரவளித்த அவர், ஆட்சிக்கு வந்த 24 மணி நேரங்களிற்குள் அவர்களை கோத்தாபயவை விட மோசமாக கையாண்டு பாதுகாப்பு படைகளைக் கொண்டு அடித்து நொறுக்கி ஒடுக்கியது வரலாறு. அதுமட்டுமின்றி ரணில் பொதுவாகவே சொல்வதொன்று செய்வதொன்று என்பதாகவே அரசியல் நடத்தி வந்தார். இப்போது அவரும் தனது அரசியல் வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறார், 10% மக்களின் ஆதரவு கூட அவருக்கு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
அப்படியென்றால் போட்டியில் முன்னணியிலுள்ள சஜித் பிரேமதாச அல்லது அநுர குமார திஸாநாயக்க நாட்டை மீட்டு கட்டியெழுப்பி விடுவார்களா என்றால் அதிலும் பல கேள்விகள் உள்ளன. போட்டியில் இருப்பவர்களில் மக்கள் ஆதரவு யாருக்கு கூடுதலாக உள்ளது என்பதைத் தான் கருத்துக்கணிப்பு காட்டுகிறதே தவிர, அவர்கள் இருவரும் ஆகச்சிறந்தவர்கள் என்பதற்கு எந்த சான்றும் இல்லை.
இந்த கருத்துக்கணிப்பில் மற்றொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. நாட்டின் எதிர்காலம் குறித்து சிறுபான்மை மக்கள்-அதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் கருத்து என்ன என்ற கேள்விக்கான பதில் இருப்பதாகத் தெரியவில்லை. நடைபெற்ற இந்த கருத்துக்கணிப்பில் தமிழ் மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டதா அல்லது அதிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதே நேரம் இந்த கேள்வி அவர்களிடம் கேட்கப்பட்டிருந்தால் அவர்கள் என்ன பதில் கூறியிருப்பார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலும் எனக்கும் உள்ளது. அவர்களது கருத்துக்களும் தெரிய வந்திருந்தால், அவர்கள் நாட்டின் மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளார்கள், அல்லது இணைய முற்படுகிறார்கள் என்றோ அல்லது இன்னும் அந்நியப்பட்டே இருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றும்.
நாட்டை ஆள அடுத்து யார்?
கருத்துக்கணிப்புகளில் எந்த தலைவருக்கு எவ்வளவு சதவீதம் ஆதரவு உள்ளது என்பது-தேர்தலில் அதே வீதத்திலான வாக்குகளாக மாறுமா என்பது மிகபெரும் கேளவி. அதைப் பொருத்துத்தான் மேலேயுள்ள கேள்விக்கு விடை கிடைக்கும்.