மனம் திறக்கிறார் மனோ கணேசன்
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத்தொடர் –அத்தியாயம்-7)
- 2009ல் யுத்த வெற்றி ஆரவாரங்கள் அடங்க, மஹிந்த, கோடாபய, பொன்சேகா ஆகிய, மூன்று ஹீரோக்களில் “முதல் ஹீரோ யார்?” என்ற கேள்வி சிங்கள மக்கள் மத்தியில் எழுந்தது.
- அந்நேரம் மஹிந்தவை எதிர்த்து ரணில் போட்டியிட்டிருந்தால், பத்து இலட்சம் வாக்குகளை கூட பெற்றிருக்க முடியாது.
- எனது கேள்வி, “சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதில் தமிழ் மக்களுக்கான நிகழ்ச்சி நிரல் என்ன? என்பதாகும்.
- இன்னொரு சுவாரசிய விஷயத்தையும் அனோமா பொன்சேகா சொன்னார். அதை இங்கே எழுத முடியாது. யாரும் நேரில் கேட்டால் சொல்லலாம்.
- கொள்ளுப்பிட்டி 5ம் ஒழுங்கையில், ரணிலின் வீட்டின் பின் கதவால் நடந்து, நாம் அடுத்த வீதிக்கு வந்து, அந்த மழைபெய்யும் இரவில் இரகசிய பயணம் சென்றோம்.
- இந்த திகில் சினிமா படத்துக்கு திரைக்கதை, இயக்கம் மங்கள சமரவீர.
காலகட்டம்: 2009ல் யுத்தம் முடிய மஹிந்த, கோட்டா, பொன்சேகா மூவரையும் சிங்கள பெரும் தேசியவாதம் ஆஹா, ஓஹோ, என கொண்டாடிய ஆரவார காலம். 2010ம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் வேளை நெருங்குகிறது |
2009 ஆம் ஆண்டு கடும் யுத்தம் முடிவடைந்த, சூட்டோடு, ஜனாதிபதி தேர்தலை, நடத்தி முடிசூடா மன்னராகிவிட, மஹிந்த ராஜபக்ச தீர்மானித்தார்.
“மன்னா, மன்னாதி மன்னா” என அவரை போற்றி, பிரபல சிங்கள பாடகர்கள் பாடிய பாடல்கள் நாடு முழுக்க எதிரொலித்தன.
“எவராலும் வெல்லவே முடியாது” என்று இருந்த புலிகளை வென்று விட்டோம் என்ற பிரமிப்பில் சிங்கள மக்கள் மஹிந்தவின் பின்னால் திரண்டனர்.
மஹிந்தவை எதிர்த்து ரணில் போட்டியிட்டால் பத்து இலட்சம் வாக்குகளை கூட பெற்றிருக்க முடியாது.
அது நமக்கும் தெரியும். ரணிலுக்கும் தெரியும்.
ஐதேக பிரதி தலைவர் கரு ஜயசூரியவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்க ரணில் தயாரில்லை. அவர் வெற்றி பெற்றால் ஐதேகவும் அவருடன் போய் விடுமென ரணிலுக்கு பயம். ஆகவே கருவுக்கு “நோ”. ரணிலை எதிர்த்து எவரும் கேள்வி கேட்கவும் தயாரில்லை. எனவே பொது வேட்பாளர் தேடல்.
அப்போ எதிரணியில் பிரதானமாக நான்கு கட்சி தலைவர்கள் இருந்தோம். ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, நான் மற்றும் ரவுப் ஹக்கீம்.
தேர்தலின் போது இன்னமும் வேறு பல கட்சிகள் வந்து சேர்ந்தன. ஆனால், ஆரம்பம் நாம்தான். ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி (அப்போது தமிழ் முற்போக்கு கூட்டணி இருக்கவில்லை.!), ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ம). கடைசியாக சொன்னது மங்களவின் கட்சி.
2009 யுத்தம் முடிந்த பிறகு வெற்றி விழாவில் நாயகர்களாக மஹிந்த, கோடாபய, பொன்சேகா, மூவரையும் சிங்கள பெரும் தேசியவாதம் தூக்கி வைத்து கொண்டாடிய, ஆரவாரம் அடங்கியதும், இம் மூவரில் “முதல் ஹீரோ யார்?” என்ற கேள்வி எழுந்தது.
“தான் முந்திவிடுவேன்” என்று அஞ்சியே, ராஜபக்சர்கள், போர் முடிந்ததும் தன்னை ஒதுக்கினார்கள் என, பொன்சேகா கூறினார்.
ராஜபக்சர்கள்-பொன்சேகா இடையிலான பனிப்போரை பயன்படுத்த எதிரணிக்குள்ளே பேச்சை மங்கள ஆரம்பித்தார்.
கொழும்பு கேம்பிரிட்ச் டெரஸில் அமைந்திருந்த எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக ரணில், மங்கள, ரவுப் மற்றும் நானும் கூடி இவ்விவகாரம் தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடினோம்.
ஒருநாள் ரவுப் ஹக்கீமின் கொள்ளுபிட்டி ஐஸ்கிரீம் இல்லத்துக்கு எம்மை பார்க்க ரகசியமாக சரத் பொன்சேகாவின் தூதுவர்கள் வந்தார்கள்.
ஒருவர், பொன்சேகாவின் மனைவி அனோமா. அடுத்தவர் பொன்சேகாவின் அப்போதைய சகபாடி சில்வா. (அவர்தான் இன்றைய ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் வந்து, 20ம் திருத்த வாக்கெடுப்பின் போது அரசு பக்கம் தாவிய டயனா கமகேயின் கணவர்).
பொன்சேகாவுக்கு தமிழ், முஸ்லிம் வாக்குகள் அவசியம் என்றும், அந்த வழிகாட்ட வேண்டும் என்றும் பொன்சேகாவின் தூதுவர்கள் கேட்டார்கள்.
இடையில் ஒரு குட்டிக்கதை.
சரத் பொன்சேகாவை பொது வேட்பாளர் ஆக்கும் தீர்மானம் பரிசீலிக்கப்படும் பொழுது அதை முதலில் எதிரணியில் பகிரங்கமாக எதிர்த்தது நான்தான். எனக்கு ஞாபகமிருக்கிறது.
எனது எதிர்ப்பை கண்ட மகிந்த அரசு குதூகலமானது. ஏனெனில் பொன்சேகா தனக்கு எதிராக போட்டியிட முடியுமா என மஹிந்த பலத்த அதிர்ச்சியடைந்திருந்தார்.
அரச ஊடகங்கள் டெயிலி நிவ்ஸ், சிலுமின, தினகரன், அரச தொலைகாட்சிகள் ” மனோ எதிர்கட்சிகளின் பானையை உடைத்து கனவை கலைத்துவிட்டார்!” என்று எனது எதிர்ப்புக்கு கூடிய பிரச்சாரம் கொடுத்தன. தமிழ் ஊடகங்களும் எனது செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க, தமிழர் மத்தியிலும் “ஏன், சரத் பொன்சேகா?” என்ற கேள்வி மெல்ல எழுந்தது.
எனது கேள்வி, “பொன்சேகாவை பொது வேட்பாளராக்குவதில், தமிழ் மக்களுக்கான நிகழ்ச்சி நிரல் என்ன?” என்பதாகும். இதற்கு பதில் இல்லாமல் பொது வேட்பாளர் தீர்மானத்திற்கு இணங்க மறுத்தேன்.
இந்நாளில் “ரவுப் ஹக்கீமின் வீட்டுக்கு போங்கள். முக்கியமான நண்பர்கள் உங்களை சந்திக்க வருகிறார்கள்” என ரணிலிடமிருந்து திடீர் செய்தி வர, அங்கு போனேன்.
எனது எதிர்ப்பு பெரிதானால், ஒட்டு மொத்த தமிழ் கட்சிகளும், அப்படியே சிந்திக்க தொடங்கினால், “பொன்சேகா திட்டம்” தோல்வியடையும் என்பதால் அச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக பின்னாளில் அறிந்தேன். நண்பர் ரவுப்பின் வீட்டில் நிகழ்ந்ததால், ரவுப்பும் இந்த சந்திப்பு திட்டத்தில் பங்காளி எனவும் அறிந்தேன்.
சரி விஷயத்துக்கு வருவோம்.
கோதாபயவும், பொன்சேகாவும் ஒன்றாகவே படித்ததாகவும், ஆரம்பம் முதல் அவர்களுக்கிடையில் முரண்பாட்டு போட்டிகள் இருந்ததாகவும், அது இப்போது முற்றி விட்டதாகவும், அனோமா எமக்கு சொன்னார்.
இன்னொரு சுவாரசிய விஷயத்தையும் அனோமா சொன்னார். அதை இங்கே எழுத முடியாது. யாரும் நேரில் கேட்டால் சொல்லலாம்.
எப்படியோ, பொது வேட்பாளராக, பொன்சேகா தரப்பின் ஆர்வத்தை அன்று அறிந்தேன். இவர்கள் ஏன் எம்மை பார்க்க வருகிறார்கள்?
சில நாட்களில், அந்த சுவாரசியமான சம்பவம் நடந்தது.
ஒருநாள் மாலை 7 மணி அளவில் கேம்பிரிட்ச் டெரஸ் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்த போது, ரணில் திடீரென எழுந்து “வாருங்கள்! ஒரு பயணம் செல்வோம்” என்று என்னையும், மங்களவையும், ரவுப் ஹக்கீமையும் அழைத்தார்.
கேம்பிரிட்ச் டெரசிற்கு அருகாமையிலேயே இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் 5ம் ஒழுங்கை இல்லத்திற்கு, (அதுதான் அரகல கிளர்ச்சியில் தற்போது எரிக்கப்பட்டது..!) நாம் சென்றோம்.
எங்கள் பாதுகாவல் அதிகாரிகளும், வாகனங்களும் ரணிலின் வீட்டுக்கு முன்னாள் நிற்க , நாம் உள்ளே சென்றோம். மழையிரவு.
ரணில் தனது வீட்டின், பின் வாசல் வழியாக எம்மை அழைத்து சென்றார். அங்கு ரணிலின் சகோதரரின் வீடு. அந்த வீட்டுக்குள்ளாகவும் நடந்து, அந்த வீட்டின் முன் வாசல் வழியாக, நாம் அடுத்த வீதிக்கு வந்தோம்.
அங்கு இரண்டு வாகனங்கள் தயாராக இருந்தன. ஒரு வாகனத்தில் ரணிலும், மங்களவும், அடுத்த வாகனத்தில் நானும், ஹக்கீமும் ஏறிக்கொண்டோம்.
இது எதுவும் ரணில் வீட்டின் முன்னால் நின்ற எமது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாது.
அந்த மழை நேர இரவில் ஒரு மணித்தியாலம் பயணித்து கொழும்பு நகரிற்கு தென்கிழக்கே இருக்கக்கூடிய ஒரு பிரதேசத்தில் ஒரு வீட்டுக்கு சென்றோம்.
வீட்டுக்காரர்கள் எவரும் வந்து எங்களை வரவேற்றதாக ஞாபகம் இல்லை. “திறந்திருந்த வீட்டுக்குள் ஏதோ நுழைவதை போல்”, முன்கூட்டி ஏற்பாடு செய்த முறையில் அவ்வீட்டின் மேல் மாடியிலே சென்றமர்ந்தோம்.
ஏதோ திகில் சினிமா படம் மாதிரி இருந்தது. படத்துக்கு திரைக்கதை, இயக்கம் மங்கள சமரவீரதான் என்றும் தெரிந்தது.
ஒரு பத்து நிமிசத்தில், அந்த வீட்டு வளவிற்குள் ஒரு வாகனம் சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் நாமிருந்த இடத்திற்கு, மாடிப்படிகளில் ஏறி ஒருவர் வந்தார். அவர், சரத் பொன்சேகா.
வந்தவர் முகத்திலே ஒரு பதட்டமும், பணிவும் தெரிந்தது. எம்மை கண்டு மிகவும் மரியாதையாக “Good Evening Sir” என்று சொல்லிக்கொண்டு இராணுவ பாணியில் வந்தமர்ந்தார்.
அன்றைய எதிர் கட்சி தலைவர் ரணிலுக்கு, பொன்சேகா மிகுந்த மரியாதை தந்ததை நான் கண்டேன். பின்னாளில், பொது வேட்பாளராக போட்டியிட்டு தேர்தல் பிரச்சாரம் முடியும் கட்டத்திலே இந்த மரியாதை, தலைகீழானது வேறு விஷயம்.
பொன்சேகாவை நான் அப்பொழுதுதான் முதல் முதலாக கண்டேன். பொது வேட்பாளராக பொன்சேகாவை அங்கீகரிப்பது தொடர்பில் நடைபெற்ற முதல் நேரடி சந்திப்பு அது.
“அனைவரது ஒத்துழைப்பையும் தர முடியுமானால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தாம் தயார்” என சரத் பொன்சேகா எம்மிடம் கூறினார்.
“ஐக்கிய தேசிய கட்சி, ஒரு ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்தாமல், அந்த கட்சியை சாராத தன்னை பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமா?” என மிகவும் அப்பாவித்தனமான கேள்வியை சரத் பொன்சேகா அன்று கேட்டார்.
அது ஏன் அப்பாவிதனமான கேள்வி என்றால், கட்சி தலைவரான தான் போட்டியிட்டு படுதோல்வியடைவதில் இருந்து எப்படி தப்பித்துக்கொள்வது என்று வழிதேடிக்கொண்டு இருந்த ரணிலுக்கு, பாலில் நழுவி விழுந்த பழம்தான், பொன்சேகா.
அதை சரத் அவ்வேளையில் புரிந்து கொண்டிருக்கவில்லை.
எனினும் ரணில் அவ்வேளையில், கட்சியின் செயற்குழுவை கூட்டி ஆலோசிப்பதாக அவசரப்படாமல் அமைதியாக கூறினார்.
அதையடுத்து என்பக்கம் திரும்பி, “யுத்தத்தை வரலாற்றிடம் ஒப்படைத்துவிட்டு என்னுடன் பயணம் செய்ய தமிழ் மக்கள் தயாராகுவார்களா?” என சரத் பொன்சேகா கேட்டார்.
“தமிழ் மக்களை பொறுத்தவரையில் இன்று எல்லோருமே ஒன்றுதான். உங்களில் ஒருவர்தான் ஜனாதிபதியாக போகின்றீர்கள். அவரைவிட நீங்கள் சிறந்தவர் என்று உங்களால் நிரூபிக்க முடியுமானால், தமிழ் மக்கள் உடன்படலாம்.” என்று நானும் அவரிடம் அமைதியாக கூறினேன்.
இன்று யோசித்து பார்த்தால், அதைவிட பொருத்தமான ஒரு பதிலை நான் அவருக்கு அன்று கூறி இருக்க முடியாது என தோன்றுகிறது.
சிறிது நேரம் பேசி விட்டு, பொன்சேகா போனார்.
அவர் போய் அரை மணி கழித்து, நாம் கிளம்பி, ரணிலின் சகோதரர் வீட்டுக்கு வந்து இறங்கி, அவர் வீட்டுக்குள்ளே நடந்து, ரணிலின் வீட்டு பின் வாசல் வழியாக உள்நுழைந்து, முன் வாசல் வழியாக வெளியே வந்தோம்.
அவ்வளவு நேரமும் ரணிலின் வீட்டுக்குள்ளேதான் நாம் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம் என அப்பாவியாக நினைத்துக்கொண்டு, எமது பாதுகாவல் அதிகாரிகள், ரணில் வீட்டுக்கு முன் காத்திருந்தார்கள். எமது வாகனங்களில் ஏறி வீடுகளுக்கு போனோம்.
அடுத்த நாள், பொன்சேகா எமது பொது வேட்பாளர் என்று முடிவு செய்தோம்.
பின்குறிப்பு:
மகிந்த அந்த தேர்தலில் 57% வாக்குகளுடன்தான் வெற்றி பெற்றார். ஆனால், அவரது பெரும் எதிரி, சந்திரிக்கா 1995ல் பெற்ற 60 விகிதத்துக்கும் மேற்பட்ட வெற்றியை மகிந்த பெறவில்லை. அவர் எதிர்பார்த்த பெரும் வெற்றி கிடைக்காததால் அவர் மகிழ்ச்சியடையவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது இடையில், வெள்ளை கொடி ஏந்தி வந்த புலிகளை பற்றி ஏதோ, வாயை விட்டதினாலும் ( இந்த “வாய்” விவகாரம் பொன்சேகாவின் நிரந்தர நோய்..!), ரணிலின் முழு ஒத்துழைப்பு கிடைக்காததினாலும், பொன்சேகா தோல்வியடைந்ததார். எனினும் பொன்சேகா கணிசமான 4 மில்லியன் வாக்குகளை பெற்றார். ரணில் போட்டியிட்டு இருந்தால், இதில் ஒரு 2 மில்லியன் வாக்குகள் மகிந்தவுக்கு போய் இருக்கும். இதுதான் எனது எதிர்பார்ப்பு. போர் வெற்றியில், பேரினவாதமும், இராணுவவாதமும் சேர்ந்த பெரும் போதையில் இருந்த தென்னிலங்கை பெரும் வெற்றி பெற்றிருந்தால், இலங்கையில் அமைதி என்றுமே திரும்ப முடியாத நிலைமை ஏற்பட்டு, தமிழர் இதைவிட பெருந்துன்பத்தில் விழுந்திருப்போம் என்பது என் அரசியல் கணிப்பு. எனவே அந்த “பேரினவாதத்தையும், இராணுவவாதத்தையும்” ஏறக்குறைய சரிபாதியாக பிரிக்க உதவினோம் என்ற திருப்தி எனக்குள் ஏற்பட்டது.