கடந்த 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவிலன் ரொறன்ரோ மாநகரிலிருந்து ஒரு இலக்கிய நிகழ்வு உலகின் பல நாடுகளிலும் வாழும் கலை இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் மெய்நிகர் வழி எழுத்தாளர்அரங்கம் – 07 இல் கனடாவில் மட்டுமல்ல இணையவழி ஊடாக உலகெங்கும் வெள்ளி தோறும் விரிப்புடன் விரியும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் . நாகமணி லோகேந்திரலிங்கம் ( மலையன்பன்) அவர்களின் உரை இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பலர் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தார்கள். நானும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனாலும் காலம் கைகொடுக்காமையினால் கலந்துகொள்ள முடியாமற் போய்விட்டது. எனினும் இணையத்தின் இணையில்லாச் செயற்பாட்டால் அன்றைய தினம் நடந்த அனைத்தையும் பார்ப்பதற்குரிய வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டேன். அப்பதிவினை நான் கேட்டதும் உடனடியாக அனுப்பிவைத்த திரு லோகேந்திரலிங்கம் அண்ணாவிற்கு எனது மனமார்ந்த நன்றியையும் கூறிக்கொண்டு அன்றைய நிகழ்வின் மூலம் நேற்றுவரைஇந்த பத்திரிகை ஆசிரியரைப்பற்றி அறியாது இருந்து இன்று அறிந்து கொண்ட பல விடயங்களில் ஒரு சில விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
அன்றைய நிகழ்வில் இந்த உதயன் பத்திரிகை ஆசிரியரான லோகேந்திரலிங்கம் அவர்கள் தனது சிறுவயது வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும் பொழுது மலைநாடான பதுளையில் பிறந்து தனது இளமைக் காலத்தில் 6ம் வகுப்பு வரை இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பதுளை ஊவாக் கல்லூரியில்பயின்று அங்கு சிறுவனாக இருந்த பொழுதே தனது தந்தையாருடன் சேர்ந்து சொற்பொழிவுகளுக்குச் சென்றிருப்பதாகவும் அதன்காரணமாக தமிழ் மொழியிலுள்ள பல நல்ல விடயங்களைக் கேட்கும் வாய்ப்பு அன்றே தனக்குக் கிடைத்ததாகவும் கூறிய அவர் ஏழாம் வகுப்பிற்கு பின்னரான பள்ளிவாழ்க்கை சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியில் தொடர்ந்ததாகவும் அங்கு கல்வியில் குறிப்பாக கணிதம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி ஆகிய பாடங்களில் நன்கு தேர்ச்சி பெற்றதோடு அல்லாமல் அவருக்கு கலை நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் சிறந்த வாய்ப்புக்கள் பல கிடைத்ததாகவும் கூறினார். அதன் பிற்பாடு தனது கல்விச் செயற்பாடு யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் தொடர்ந்ததாகவும் அங்கும் தமிழ் மொழி மற்றும் ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களில் தனக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் அங்கிருந்த ஆசிரியர்கள் பலர் பக்க பலமாக இருந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தொழிலநுட்ப கற்கைக்காக யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லுர்ரிக்கும் மொறட்டுவவில் அமைந்துள்ள கட்டுப்பத்தைக்கும் அனுமதி பெற்றுச் சென்றதாகவும் அதனைத் தொடர்ந்து எழுத்துலகில் புகுந்து கொண்டு. புதுக்கவிதையில் அதிக நாட்டம் கொண்டு சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதி வந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து கொழும்பிற்குச் சென்று அங்கும் பின்பு கல்முனையில் தனது தொழில் நிமிர்த்தம் சிறிது காலம் வசிக்க நேர்ந்ததாகவும் அங்கெல்லாம் இருந்த காலங்களில் தனக்கு கலை இலக்கிய ஈடுபாடு பல வகையிலும் ஏற்பட்டதாகவும் கூறிய அவர் ஒவ்வொரு இடங்களிலும் தனக்குக் கிடைத்த இலக்கிய அனுபவங்களைப் பற்றியும் தொடர்ந்து கூறிச்சென்றார்.
அவர் கொழும்பில் உயர் கல்வியிலும் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்த போது. அங்கு இலக்கிய ஆர்வமானது கட்டுப்பெத்தயில் இன்னும் மெருகு ஏறியதாகவும் அதற்கு கவிஞர் ஈழவாணனின் தொடர்பும் அவருடன் சேர்ந்து அவர் வெளியிட்ட “ அக்னி” வெளியீட்டுக் குழுவுடன் இணைந்து செயற்பட்டமையும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு எனவும் கூறியவர் அதனைத்தொடர்ந்து கல்முனையில் பணியாற்றிய போதும் “ கீற்று என்னும் இதழுக்கு கல்லூரான் என்ற பெயரில் எழுதி வ ந்த கவிஞர் ஒருவரோடு சேரந்து இணை ஆசிரியராக பணியாற்றி இருந்ததையும் குறிப்பிட்ட திரு லோகேந்திரலிங்கம் அவர்கள் அன்றைய காலத்தில் ஈழத்தில் மிகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களாகிய டானியல், டொமினிக் ஜீவா, புதுவை இரத்தினதுரை போன்றோரின் நடப்பிற்கு உரியவராக இருந்ததையும் கூறி அவர்களுடனான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அத்தோடு தனக்கிருந்த இலக்கிய ஆர்வத்தினால் தானும் கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்தவகையில் ஈழத்தில் வாழ்ந்தபொழுது புதுக்கவிதைகளால் ஈர்க்கப்பட்ட இவர் 1973 இல் ‘ செம்மலர்கள்’ இலக்கிய வட்டத்தின் பழைய பெரும் எழுத்தாளர்களோடு சேர்ந்து செயற்பட்டதோடு 1974 இல் “ போலிகள்” என்னும் தனது புதுக்கவிதைத் தொகுதியை வெளியிட்டதாகவும் “ மதிக்கப்படவேண்டிய மீறல்கள்” என்ற சிறுகதைய தனது முதலாவது சிறுகதையாக எழுதி ‘முரசொலி’ பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டிக்கு அனுப்பி பரிசு பெற்றதாகவும் தெரிவிததார்..
மேலும் எமது நாட்டுச் சூழல் காரணமாக 1990களில் கனடா நாட்டிற்கு வந்த இவர் இலக்கியம் , நாடகம், பத்திரிகைத்துறை போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகவும் 1993 இல் கனடாவில் தொடக்கப்பட்ட ‘ கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களோடு சேர்ந்து செயற்பட்டதோடு இன்று வரை அதன் செயற்பாடுகளில் முக்கியமான ஒருவராக இருந்து செயற்பட்டு வருவதாகவும் கூறினார். இவரது இந்தக் கூற்றினை அங்கு கலந்திருந்த பலரும் கூறி இவரைப் பாராட்டியதோடு கனடாவில் 26 வருடங்களாகத் தொடர்ச்சியாக இயங்கி வரும் உதயன் பத்திரிகையைத் தனி ஒருவராக இருந்து இவர் செயற்பட்டுவரும் திறத்தினையும் அங்கிருந்த பலர் போற்றினர்.
மேலும் இந்தப் பத்திரிகைத் துறைக்குள் தான் செயற்படத் தொடங்கியபின் பத்திரிகையில் தான் எழுதும் தனது எழுத்துக்களாலும் கூட மிகுந்த பல மனவேதனைகளையும், அதேவேளை பல இடர்களையும் சந்தித்ததாகவும் எனினும் அவற்றை எல்லாம் கடந்து தொடர்ந்தும் செவ்வனெ செயற்பட்டுவருவதால் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். இவர் தன்னைப்பற்றி இப்படியாகக் கூறி முடித்த வேளையில் , தொடர்ந்தும் பலர் அவரைப் பற்றி அறிந்த பல விடயங்களை எடுத்துச்சொன்னார்கள்.
‘பத்திரிகைத்துறையிலோ எழுத்துத்துறையிலோ அவருக்கு இருக்கும் நல்ல பெயரைவிட ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதராக அவர் திகழ்கின்றார்’ என்பதையும் பலர் கூறினர்.
மறைந்திருக்கும் கலைஞர்களைவெளிக்கொண்டு வருவதும், அவர்களை ஊக்கிவிப்பதும், இலங்கை இந்திய எழுத்தாளர்களை ,கலைஞர்களை இணைக்க ஒரு உறவுப்பாலமாகச் செயற்படுவதும் , கலைஞர்களைப் போற்றிக் கௌரவிப்பதும் , அவர்களுக்காகத் தனது நேரத்தையும் பொருளையும் தியாகம் செய்வதும், மற்றும் ஈழத்தில் இடர்படுவோருக்கு குறிப்பாக கல்விச் செயற்பாடுகளில் கடினமான சவால்களைச் சந்திக்கும் சிறுவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச்செய்வது அவர்களை ஊக்கிவிப்பது எனப் பல்வேறுபட்ட அவரின் நற்குணங்கள் பற்றி அங்கு பலர் பேசினர். அன்றைய அந்த நிகழ்வில் பல பேராசிரியர்களும், இலக்கிய கர்த்தாக்களும் , ஆர்வலர்களும் கலந்து கொண்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பத்திரிகைத்துறை என்பது அவ்வளவு சாதாரண துறை அல்ல. ஒருவர் தனது தனிப்பட்ட ஆக்கங்களை எழுதி ஒரு இலக்கிய வடிவமாக வெளியிடுவதற்கும், பத்திரிகைத் துறையில் சமூகத்துடன் சேர்ந்து செயற்படுவதற்கும் இடையில் எவ்வளவு பெரும் வேறுபாடு. இத்துறையில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. ஆனாலும்அவற்றை எல்லாம் தாண்டி இவ்வாறாக ஒரு நீண்டகாலத்திற்கு ஒரு பத்திரிகையை நடத்திச் செல்வதற்கு எவ்வளவோ பொறுமையும் அர்ப்பணிப்பும் தேவை அத்தகைய பொறுமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு இன்று உலகத்தையே இணைக்கும் ஒரு உறவுப்பாலமாகத் திகழும் இந்த உதயன் பத்திரிகை ஆசிரியர் உண்மையில் போற்றப்படவேண்டியவர். இவரின் பணி மென்மேலும் தொடரவும் , சிறக்கவும் இவருக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்வதோடு,
“நன்றி மறப்பது நன்றல்ல”
அன்றைய தினம் என்னால் அந்தநிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை, எனினும் உதயனில் என்னையும் ஒரு அங்கமாக இணைத்து தனது பத்திரிகையில் வாரம்தோறும் எனது “ கடந்தவையும் கடப்பவையும்” எனும் ஆக்கத்தை விருப்பமொடு பிரசுரித்துவரும் திரு லோகேந்திரலிங்கம் அண்ணாவிற்கு எனது மனமார்ந்த நன்றியினையும் இந்தத் தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நன்றியுடன்
உமா மோகன் (Montreal)