எமது செய்தியாளர்
போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆகும் நிலையிலும், தமிழர்கள் திட்டமிட்ட வகையில் இலக்கு வைக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு விசாரணைகளுக்கு அழைக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.
இலங்கை கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திவிக்கும் நிலையில், பன்னாட்டு சமூகம் மற்றும் உதவி வழங்கும் நாடுகள், அமைப்புகள், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை முக்கியமானதொரு நிபந்தனையாக வைத்துள்ளனர்.
அந்தச் சட்டம் நீக்கப்படாத வரையில், உதவிகளிற்கான வாய்ப்பு குறைவே என்ற செய்தி சொல்லப்பட்ட நிலையில், ஐ நா மனித உரிமைகள் ஆணையம் உட்பட பல அமைப்புகளிற்கு இலங்கை அரசு போலி வாக்குறுதிகளை வழங்கி தம்மை காப்பாற்றிக்கொள்ள முயல்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளது.
நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் அல்லது அதற்கு மாற்றாக சர்வதேச நியமங்களிற்கு ஏற்ப புதிய சட்டம் இயற்றப்படும் என்று இலங்கை அரசு வாக்குறுதியை அளித்தாலும், உள்நாட்டில் அச்சட்டத்தின் கீழ் கைதுகள், அச்சுறுத்தல்கள் தொடரவே செய்கின்றன.
அவ்வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்கான காரணங்கள் எவையும் குறிப்பிடப்படாது, சனிக்கிழமையன்று (18) அவருக்கு வழங்கப்பட்டுள்ள எழுத்துமூல அழைப்பாணையில், வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக எதிர்வரும் 2023.03.24 ஆம் திகதி, மு.ப.9.00 மணிக்கு, பரந்தனில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவுக்கு சமுகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களினதும் கௌரவ.தவிசாளர்கள் உள்ளிட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது உறுப்பினர்கள் TID யினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், கட்சியின் மாவட்டக்கிளைச் செயலாளராக இருந்து சமூகநலப் பணிகளிலும், அரசியற் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் வீரவாகு விஜயகுமார் அவர்களும் தற்போது விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.