2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கான புதிய ஜெர்ஸி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜெர்ஸி கவனம் ஈர்ப்பதாக டெல்லி அணியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனனர். காயம் காரணமாக ரிஷப் பந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் டெல்லி அணியின் கேப்டனாக இந்த ஐபிஎல் தொடரில் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டை சேர்ந்த 8 வீரர்கள் உள்பட மொத்தம் 25 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில் இஷாந்த் சர்மா, பில் சால்ட், மனிஷ் பாண்டே, ரிலே ரூசோ ஆகியோர் அணியில் எடுக்கப்பட்டார்கள். அத்துடன் ரிஷப் பந்த், டேவிட் வார்னர், ப்ரித்வி ஷா, ரோவ்மன் பவெல், சர்ப்ராஸ் கான், மிட்செல் மார்ஷ், அக்சர் படேல், ஆன்ரிக் நோட்ஜ், லுங்கி நிகிட உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் தக்க வைத்துக் கொள்ளப்பட்டனர். இந்த வகையில் மற்ற அணிகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் டெல்லி கேபிடல்ஸ் அணி காணப்படுகிறது.
டேவிட் வார்னர் தான் கேப்டனாக செயல்பட்ட 69 போட்டிகளில் 35-இல் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இந்த நிலையில் டெல்லி அணி தனது புதிய ஜெர்ஸியை இன்று அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக டெல்லி அணியின் துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டிருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது.