ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. டி20 மேட்ச்சை போல் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 11 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்த நிலையில் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரின் 3 ஆவது பந்தில் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
பின்னர் விராட் கோலி – ரோஹித் சர்மா இணை நிதானமாக ரன்களை எடுத்தது. இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரோஹித் சர்மா 13ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 9 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.
விராட் கோலி 31 ரன்னிலும், ரவிந்திர ஜடேஜா 16 ரன்னிலும் ஆட்டமிழக்க அக்சர் படேல் கடைசி வரை அவுட் ஆகாமல் 29 ரன்கள் எடுத்திருந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னும், முகம்மது ஷமி, சிராஜ் ஆகியோர்ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். 26 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்ரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் டி20 மேட்ச்சை போல் விளையாடினர். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் பறந்த நிலையில் 11 ஆவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 51 ரன்களும், மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். மொத்தம் 37 ஓவர்களில் இந்த 2 ஆவது ஒருநாள் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.