ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்றுள்ள 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இதனால் கடைசி மற்றும் 3 ஆவது போட்டியில் விளையாட அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது மாற்று வீரர் களம் இறங்குவாரா என்பது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த 2 ஆவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 4 ஆவது பேட்ஸ்மேனாக சூர்ய குமார் களத்தில் இறங்கினார். இந்த 2 மேட்ச்சிலும் தான் சந்தித்த முதல் பந்தில், மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவர் ஆட்டமிழந்தார். டி20 போட்டிகளில் முன்னணி ஆட்டக்காரராக இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் அணியில் நீடிப்பாரா என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது- ஷ்ரேயாஸ் அய்யர் எப்போது அணிக்கு திரும்புவார் என்று தெரியவில்லை. எனவே அவர் விளையாடி வரும் 4 ஆவது பேட்டிங் இடம் காலியாக உள்ளது. எனவே சூர்யகுமாருக்கு வாய்ப்பு அளித்துள்ளோம். ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் திறமை அவருக்கு இருக்கிறது. தான் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்று சூர்யகுமார் உணர்ந்துள்ளார். நிர்வாக அடிப்படையில் சூர்யகுமார் யாதவ் ரன்களை குவிக்க வாய்ப்புகளை அளிப்போம். அதில் அவர் சிறப்பாக செயல்படாவிட்டால் அதன் பின்னர் முடிவு எடுக்கப்படும். இப்போது அவரை ஆடும் லெவனில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.