உலகக்கோப்பை போன்ற முக்கிய கிரிக்கெட் தொடர்களுக்கு 18 சிறந்த ஆட்டக்காரர்களை பிசிசிஐ தேர்வு செய்திருப்பதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதேபோன்று அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆரம்பம் ஆகிறது. இதற்கிடையே இம்மாத இறுதியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.
இந்த சூழலில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரால் இந்திய அணி பங்கேற்கும் முக்கிய ஆட்டங்களில் வீரர்களின் திறமை பாதிக்கப்படுமா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக அதிக போட்டிகளில் விளையாடுவதால் வீரர்களுக்கு காயம் ஏற்படும் நிலைமையும் உள்ளது. அந்த வகையில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக அணியில் இடம்பெறாமல் உள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த முக்கிய ஆட்டங்கள் குறித்து அணியின் பயிற்சியாளர் டிராவிட் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் டூர், துபாயில் ஆசிய கோப்பை என முக்கிய ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இவற்றை நாங்கள் சரியாக பயன்படுத்த விரும்புகிறோம். இதற்காக பிசிசிஐ 18 வீரர்கள் வரை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. எனவே வரும் காலங்களில் இந்திய அணியின் பர்ஃபார்மென்ஸ் அதிகரிப்பதை அனைவரும் உணர்வார்கள். நல்ல விஷயமாக முக்கிய ஆட்டக்காரர்கள் சிலர் காயத்திலிருந்து குணமடைந்து வருகின்றனர். விரைவில் அவர்கள் களத்திற்கு திரும்புவார்கள். இந்தியாவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கான அணிகளுக்கு தனித்தனியே கவனம் செலுத்துகிறோம். சில நேரம் மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப 4 வேகப்பந்து வீச்சாளர்கள், 3 ஸ்பின்னர்கள் அணியில் சேர்க்கப்படுகின்றனர். எனவே அனைத்து தரப்பிலும் இந்திய அணியை வலிமைப்படுத்துவதற்கு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.