சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிப்பு
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் நேரடியாக முகாமைசெய்யப்படும் மூன்று முன்பள்ளிகளும் சுமாட் முன்பள்ளிகளாக எதிர்வரும் வாரம் முதல் இயங்கும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
முன்பள்ளிகளை வலுப்படுத்தும் எமது சபையின் செயற்றிட்டத்திற்கு அமைய சபை நிதிமூலம் 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் மூன்று சுமாட் போட்கள் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அவை பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் ஆவரங்கால் அரிச்சுவடி முன்பள்ளி , இருபாலை சிகரம் முன்பள்ளி, அச்சுவேலி கஜமுகன் முன்பள்ளிகளுக்கு பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தாயகத்தில் முன்பள்ளிக் கல்வியை கட்டியெழுப்ப வேண்டியது மிகவும் அவசியமானதொன்றாக உணர்கின்றோம். ஏற்கனவே எமது சபை இருபாலை சிகரம் முன்பள்ளியினை 10 மில்லியன்கள் வரையில் செலவுடன் புதிதாக அமைத்து திறந்து வைத்துள்ளது. மேலும் அரிச்சுவடி முன்பள்ளி அமைப்பிற்காக 6 மில்லியன்களுக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. கஜமுகன் முன்பள்ளியும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இப் பள்ளிகள் மாகாண மட்டத்தில் பேட்டி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட சிறப்புத்தேர்ச்சி மிக்க ஆசிரியர் குழாத்தின் ஊடாக இயக்கப்படுகின்றது. இம் முன்பள்ளிகளில் மில்லியன்களில் செலவிடப்பட்டு நவீன விளையாட்டு உபகரண தொகுதிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மேலாக குறித்த முன்பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை, சத்துணவுத்திட்டம், கல்விச் சுற்றுலா என்பவற்றினையும் சபை மேற்கொள்கின்றது. வருமான ரீதியாக பாதிக்கப்ட்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகளும் வசதி வாய்ப்புள்ள குடும்ப பிள்ளைகள் பெறும் வாய்ப்புக்களை பாரபட்சமின்றி பெறவேண்டும் என்ற நோக்கில் நாம் மேற்படி முன்பள்ளிகளில் கல்விக்கான முதலீடுகளை நிதிப்பற்றாக்குறை சவாலினையும் எதிர்கொண்டு பயன்படுத்துகின்றோம். இந் நிலைமையினை பிரதேச மக்கள் உச்ச அளவில் பயன்படுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.