சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி விளையாடிய 50ஆவது சர்வதேச போட்டி இதுவாகும். இதுவரை இந்த மைதானத்தில் இந்திய அணி, 34 டெஸ்ட் போட்டிகள், 14 ஒருநாள் போட்டிகள், மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது.
இந்த போட்டியின் போது சிராஜ் தனது 100ஆவது சர்வதேச விக்கெட்டை பதிவு செய்தார். சிராஜ், ஆஷ்டன் ஏகரின் விக்கெட்டை எடுத்தபோது இந்த சாதனையை பதிவு செய்தார்.
சொந்த மண்ணில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா. இதுவரை 256 சிக்சர்களை அடித்து, முதலிடத்தில் உள்ள நியூசிலாந்தின் மார்டின் கப்திலுடன் அந்த சாதனையை பகிர்ந்துள்ளார். மார்டின் கப்திலும் 256 சிக்சர்களை அடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிட்சல் மார்ஷ் தனது 39ஆவது ரன்னை கடந்த போது, ஒருநாள் அரங்கில் தனது 2000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இவர் இதுவரை 72 போட்டிகளில் விளையாடி, 1 சதம், 15 அரைசதம் உட்பட 2008 ரன்களை அடித்துள்ளார்.
ஆசிய மண்ணில் விளையாடிய சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்களை எட்டிய 8ஆவது இந்திய வீரரானார் ரோகித் சர்மா. இவர் இதுவரை, 28 டெஸ்ட் போட்டிகளில் 2210 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 5492 ரன்களும் 88 சர்வதேச டி20 போட்டிகளில் 2324 ரன்கள் என 247 போட்டிகளில் 10,026 ரன்களை குவித்துள்ளார்.
தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் ’கோல்டன் டக் அவுட்’ ஆன முதல் வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் சூர்ய குமார் யாதவ். மேலும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆன 6ஆவது இந்திய வீரரானார் சூர்ய குமார் யாதவ். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் (1996), அனில் கும்ளே (1996), ஜாகிர் கான் (2003 – 2004), பும்ரா (2017-2019) தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளனர்.
ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில், இந்திய அணி முதலிடத்தில் இருந்தது. ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய அணி தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. முதல் இடத்தில் தற்போது ஆஸ்திரேலிய அணி உள்ளது.