(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரை தொடர்: பகுதி 8)
கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
1990களின் இறுதிப்பகுதியில் மேற்கு ஐரோப்பாவில் சுற்றித்திரிந்த போது குறைந்த விலையில் உணவு என்றால் அது சிலுக்குச் சீன உணவகங்களில் தான் கிடைத்தது. ஐரோப்பாவின் குக்கிராமங்களில் கூட சீன உணவகங்கள் திறந்திருந்தன.
உணவகங்கள் தொடக்கம் சைனா மார்கட் அல்லது சைனாபஜார் என்றழைக்கப்படும் சீனப்பொருள்கள் விற்குமிடங்கள் அப்போதே தொடங்கிவிட்டன. இப்போது ஆபிரிக்காக் கண்டம் உட்பட உலக வரைபடத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில்; சிலுக்கின் வர்த்தகப் பிரசன்னத்தைக் காணமுடியும். 1990களின் பின்னர் சிவப்புக் கமியூனிசத்தை விட்டு சற்று விலகி சந்தைப்பொருளாதார முறைக்கு மாறிய சிலுக்கு உற்பத்திப் பெருக்கத்தில் சாதனைகள் பல செய்து 2000 ஆண்டில் உலக வர்த்தக தாபனத்திலும் அங்கத்துவம் பெற்று மேற்குலகின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது.
ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் குவித்த அமெரிக்க டொலர்களை கடன் வழங்குவது, நேரடி முதலீடுகளை மேற்கொள்வது ஆகியவை மூலம் சிலுக்கு மீள் சுழற்சி செய்கிறது. குறிப்பாக இயற்கைவளமிக்க வறிய நாடுகளில் தனது முதலீடுகளைக் கொட்டிக் குவிக்கிறது. மேற்குலகைப் பொறுத்தமட்டில் வறிய நாடுகளைக் குறித்த அணுகுமுறையாக வெளிநாட்டு உதவி பட்டினி மற்றும் வறுமைதணிப்பு போன்றவற்றில் பரிதாபப்பட்டு உதவி செய்கிறதோடு நின்றுவிடுகிற அதே வேளை, வறிய நாடுகளால் ஒன்றும் இயலாது என்கிற மனோபாவம் நிலவுகிறது.
ஆனால் சிலுக்கு சீனாவைப் பொறுத்தவரை வறியநாடுகளை பங்காளர்களாக அணுகும் நடைமுறையினைக் கையாள்கிறது. நாம் வணிகம் செய்யவே விரும்புகிறோம் உதவி செய்ய அல்ல (we are for business not for aid) என்பதே சிலுக்கின் பொறிமுறை. கடன்வாங்கும் அல்லது முதலீடுகளை எதிர்பார்க்கும் வறிய நாடுகளுக்கு இந்த அணுகுமுறை பிடித்திருக்கிறது. கடன் கொடுப்பதற்காக உலகில் இல்லாத நிபந்தனைகளை விதித்து மேற்குலகம் இழுத்தடித்துக்கொண்டு இருக்கும் போது சிலுக்கு வந்து எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக்கொண்டு போய்விடுகிறது.
சிலுக்கிடம் நாடுகள் கடன் வாங்கச் செல்வதற்கான பிரதான காரணம்; சிலுக்கின் கடன் நிபந்தனைகள் மிகமிகக் குறைவு என்பதனாலாகும். வுழமையாக மேற்குலகு கரிசனை கொள்ளும் கடன் வாங்கும் நாட்டில் மனித உரிமை மதிக்கப்படுகிறதா இல்லையா போன்ற விவகாரங்கள் பற்றியெல்லாம் சிலுக்கு கண்டு கொள்ளாது. தியனமென் சதுக்கத்தில் மக்களைப் போட்டுத்தாக்கிய வீரவரலாறு கொண்ட சிலுக்குக்கு மனித உரிமைகள் பற்றிய கரிசனையாவது மண்ணாங்கட்டியாவது. அதுமட்டுமல்லாமல் மேற்குலகு கடன் கொடுக்கும் போது ஒரு நாடு ஏற்கெனவே எந்தளவு கடன்பட்டுள்ளது என்று பார்க்கும். ஆனால் சிலுக்குக்கு அதெல்லாம் பிரச்சினையே இல்லை எவ்வளவு வேண்டுமானாலும் கடன் கொடுக்கும். எல்லாவற்றையும் விட கடனை எப்படிகொடுக்கவேண்டும் என்பதில் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்று மேற்குலகு எதிர்பார்க்கும். ஆனால் சிலுக்கோ எந்த கணக்குக்கு வேண்டுமானாலும் எத்தனை சதவீதம் செல்லவேண்டுமானாலும் டீல் பண்ணிக் கொடுக்கும்.
ஆகவே, வறிய நாடுகளில் உள்ள ஊழலில் ஊறிய அரசியல்வாதிகள் தமது பங்கினை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடிவதால் சிலுக்கின் கடன்களை வெகுவாக விரும்புகின்றனர். கடனுக்கு அப்பாற்பட்டு வறிய நாடுகளில் துறைமுகங்கள், விமான நிலையங்கள். ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் என்று மிகப்பெரிய உட்கட்டுமானங்களைக் கட்டவதற்கு சிலுக்கே தலைசிறந்த தீர்வாக வறிய நாடுகள் நம்புகின்றன. உலகம் பூராகவும் மிகப்பெரியளவில் கட்டுமானத்துறையில் ஈடுபட்டிரப்பதால் சிலுக்கினால் மிகக் குறைந்த செலவில் கட்டுமானங்களைக் கட்டியெழுப்ப முடியும். இதனால் கடனுக்கு உட்கட்டுமானங்களை கட்டிக்கொடுப்பதே சிலுக்கின் மிகப்பிரதான வியாபாரமாக உள்ளது.
அத்தகைய உட்கட்டுமான திட்டங்கள் மூலம் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்பது வறிய நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மிஸ்டர் 10% என்று அமெரிக்க குடியுரிமையுடன் இலங்கையில் அரசியல் செய்யும் ஒரு நபருக்கு கமிஷன் காக்கா என்று பெயர்வரவும் அதுவே காரணம்.
சிலுக்கிடம் கடன் பெறுவது மிக இலகு ஆனால் அதை மீளச்செலுத்துவது இலகுவான காரியமல்ல. சிலுக்கிடம் வாங்கிய கடனை மீளச் செலுத்த முடியாமல் போனால் கடன் மூலம் உருவாக்கப்பட்ட உட்கட்டுமானத்தை சிலுக்கே வாங்கி நிர்வகிக்கும். இலங்கையில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் இதற்கு நல்ல உதாரணம்.
இதனால் குறைவிருத்தி நாடுகளால் விரும்பப்படும் கடனை வழங்குபவராக சிலுக்கு மாறியுள்ளது. இவ்வாறு சிலுக்கு சீனாவிடம் ஆபிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் கிழக்காசியாவிலுள்ள 97 நாடுகள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவை தமது மொத்தக் கடன்களில் சுமார் 37 சதவீதத்தை சிலுக்கிடமிருந்தே பெற்றுள்ளன.
2022ஆண்டுத் தகவல்களின் படி சிலுக்கிடம் அதிகளவு கடன் பெற்ற நாடுகள் வரிசையில் பாக்கிஸ்தான் 77.3பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அங்கோலா 36.3 பில்லியன் டொலர்களுடன் இரண்டாமிடத்திலும், எத்தியோப்பியா 7.9 பில்லியன்களுடன் மூன்றாமிடத்திலும், கென்யா 7.4 பில்லியன் டொலர்களுடன் நான்காமிடத்திலும் ’ஆசியாவின் ஆச்சரியம்’ இலங்கை 6.8 பில்லியனுடன் ஐந்தாமிடத்திலும் வரிசைகட்டி நிற்கின்றன. இலங்கைக்கே கடன்வழங்கி பெருமை சேர்த்துக் கொண்ட வங்காள தேசம் 4 பில்லியன் டொலர்களுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.
கடந்த வாரம் விமர்சனத்தில் மாட்டேன் மாட்டேன் என்று அடம் பிடித்த சிலுக்கு இறுதியில் இலங்கையைத் தடவிக்கொடுத்து உதவியதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். இதே போல கடந்த ஒக்டோபர் மாதம் பாக்கிஸ்தானும் 6.3 பில்லியன் கடன்களை அடுத்தவருடத்திற்கும் நீடிக்குமாறு கேட்டிருந்தது. ஆனால் அத்தொகையில் 1.3 பில்லியனை மாத்திரமே அனுமதித்து லேசாகத் தடவிக் கொடுத்ததாகத் தெரிகிறது. அதே போல கென்யாவின் ரெயில்வே திட்டத்திற்காக வழங்கப்பட்ட 4 பில்லியன் டொலர் கடனுக்கான வட்டியைக் குறைக்கவும் மீளச் செலுத்தும் காலப்பகுதியை நீடிப்புச் செய்யவும் ஒத்துக் கொண்டதாகத் தெரிகிறது. எக்வடோர், வெனிசுவேலா ஆகிய நாடுகளுக்கு கடன் மீளச் செலுத்தும் கால நீட்சியையும் வேறு நிவாரணங்களையும் சீனா வழங்கிதாகத் தெரிகிறது.
ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வொன்றிபடி 2000 தொடக்கம் 2019 வரையிலான காலப்பகுதியில் சிலுக்கு தான் வழங்கிய கடன்களில் சுமார் 3.4 பில்லின் டொலர்களை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை எனக்கூறி பதிவழிப்புச் செய்து விட்டதாகவும் அத்துடன் 15 பில்லியன் பெறுமதியான கடன்களை மீள்நிதியிடல் அல்லது மீள் கட்டமைப்புச் செய்து விட்டதாகவும் தெரியவருகிறது. சிலுக்கிடம் கடன் பெற்ற நாடுகளில் வெனிசுவேலா 2017இல் வங்குரோத்தடைந்தது. லெபனான் சூரினாம் மற்றும் ஸாம்பியா ஆகிய நாடுகள் 2020 ஆண்டிலும் பெலரூஸ் கானா மற்றும் இலங்கை 2022 இலும் வங்குரோத்து நிலையை அடைந்தன.
சீனாவின் கடன்பொறி இராஜ தந்திரம் பற்றி பெரியளவில் பேசப்படுகிறது. சீனா சரியான இடத்தில் கடனைவழங்கி கட்டுமானங்களை உருவாக்கி அவற்றை வைத்து பணம் பண்ணத் தெரியாத வறியநாடுகளிடமிருந்து அவற்றைக் கைப்பற்றுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுகளில் உண்மைகள் இல்லாமலில்லை. ஆனால் கடன் வாங்கும் நாடுகளில் உள்ள அரசாங்கங்களின் அரசியல்வாதிகள் தமது மடிகளைக்கனமான நிரப்பிக் கொள்ளும் வல்லமை சிலுக்கின் கடன்களில் இருப்பதால் இத்தகைய பிரதிகூலங்கள் இருப்பினும் அவற்றை கண்டுகொள்ள மாட்டார்கள். சிலுக்கைப் பொறுத்தவரை பிசிநசு தான் முக்கியம் கடனைத்திருப்பித்தர முடியாத நிலை ஏற்படும் போது தாம் கட்டிய உட்கட்டுமானத்தை எவ்வாறு இலாபகரமானதாக இயக்கலாம் என்று கூறும். நீங்களே செய்யுங்கள் என்று சிலுக்கின் கைகளில் அவற்றின் இயக்கத்தை ஒப்படைத்து விடுவார்கள்.
சிலுக்கைப் பொறுத்தவரையில் ஆபிரிக்காவே அதன் புதையல். மிகப்பெரியளவில் பாதைகளையும் துறைமுகங்களையும் ஏனைய உட்கட்டுமானங்களையும் அமைப்பதன் மூலம் கனிமத் தாதுவளமிக்க ஆபிரிக்காவின் இயற்கைவளங்களை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்துவதன் மூலம் தனக்குத் தேவையான மூலவளக்கிடைப்பனவை உறுதிப்படுத்திக் கொள்கிறது. அது மட்டுமல்லாது உலகின் முதன்மை நாடு என்ற அந்தஸ்தை பெற்றுவிடவேண்டும் என்பதில் குறியாக உள்ளது. அதற்கு உற்பத்தி மூலவளங்களும் எரிபொருளும் விற்பனைச் சந்தைகளும் அவசியம்.
சீனாவின் பொருள்களுக்குப் போட்டியாக குறைந்த செலவில் உற்பத்தி செய்யக் கூடிய நாடுகளை அடையாளங்காண்பது அரிது. சீன கம்பனிகளின் வருகையால் ஆபிரிக்க நாடுகள் நன்மையடைந்தாலும் அந்நாடுகளில் உள்ள உள்ளுர் கம்பனிகளால் அவற்றுடன் போட்டியிட முடிவதில்லை. சிலுக்கைப் பொறுத்தமட்டில் அதன் பட்டுப்பாதைக் (Silk Road) கட்டமைப்பை மீள கட்டமைக்கும் நோக்கில் பட்டி மற்றும் பாதை முயற்சியை (Belt and Road Initiative) ஆரம்பித்தது. இதன் மூலம் சீனாவிலிருந்து மேற்கு ஐரோப்பா வரையிலும் பாதைக் கட்டமைப்புகளையும் கடல்வழி போக்குவரத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் பொருட்டு வங்காளதேசம் இலங்கை பாக்கிஸ்தான் மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளின் ஈடன் துறைமுகம் உட்பட பல துறைமுகங்களையும் கட்டியெழுப்ப பாரிய நிதிகளை வழங்கியது.
சீனாவின் உட்கட்டுமானங்களுக்கான முதலீடுகள் சீனாவுக்குத் தேவையான உள்ளீடுகளைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதும் இந்து மகாசமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொளவதுமாகும். ஆதில் குறிப்பிடத்தக்களவு வெற்றியை அது அடைந்துள்ளதாகவே நோக்கர்கள் கருதுகின்றனர். அந்நாட்டின் நிதிவளம் உயர் தொழில்நுட்பத்தை மிக விரைவாக பயன்படுத்த ஆரம்பித்தள்ளமை என்பன ஒன்றிணைந்து மேற்குலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. தமது பங்கிற்கு மேற்குலக நாடுகள் இப்போது தான் ஆபிரிக்கா உள்ளிட்ட வறிய நாடுகள் மீதான தமது பார்வையை மாற்றிவருதாகத் தெரிகிறது. சீனாவைப் போன்றே ஆபிரிக்காவின் உட்கட்டுமானத் திட்டங்களுக்கு தாமும் கடன் வழங்கும் பொறிமுறைகளை ஆரம்பித்துள்ளன.
ஆனால், ஏற்கெனவே தனது ஒக்டோபஸ் கரங்களால் வறிய நாடுகளை வளைத்தப்போட்டுவிட்ட சிலுக்கின் பிடியில் இருந்து அவற்றை மீட்கவோ நகர்த்தவோ போதுமாதாக இல்லை. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பொருளாதார பின்னடைவினாலும் அதிக பணவீக்கத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றிலிருந்து மிதமாகப்பாதிக்கட்டுள்ள நாடுகளிற்கு சிலுக்கு மேற்கொள்ளும் காய்நகர்த்தல்களை எதிர்கொள்ளும் வல்லமைஇல்லை. தனது முதன்மைத் தானத்தைத் தக்கவைத்தக்கொள்ள அமெரிக்கா கடுமையாகப் போராடி வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஐரோப்பாவில் யுத்தத்தை ஆரம்பித்த ரஷ்யாவுக்கு சீனா தார்மீக ஆதரவை வழங்கிவருவதம் தெரிந்நதே. ஆனவே சிலுக்கின் கரங்களில் சிக்கியுள்ள நாடுகளுக்கு மாற்றுவழிகள் விரும்பியோ விரும்பாமலோ அதற்கு ஆட்படவேண்டிய கட்டாயத்தில் அவை ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் உள்ளன.
சிலுக்கிடம் அறிந்தோ அல்லது அறியாமலோ சிக்கினால், இருப்பதையும் இழந்து சந்தையில் சாதாரண கோழி முட்டை வியாபாரம் கூட செய்ய இயலாமல் போகும் என்பதே உலக வரலாறு. இது எப்படி என்பதை பின்னர் ஒரு கட்டுரையில் விரிவாக எழுதலாம் என்றுள்ளேன்.
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 1
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 2
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 3
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 4
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 5
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 6
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 7
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 8
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 9