ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனை தொடர்பில் முக்கியமான ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆய்வு தொடர்பான முழுமையான விளக்கம் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கருத்தரங்கினை மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.
இந்த ஆய்வில் மேலதிக மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் , இராணுவத்தினர், விமானப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் , கிராம அலுவலகர்கள் முதலானோரிடமிருந்த தரவுகள் திரட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்த ஆய்வின் மாதிரிகளாக ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனையால் நேரடியாக பாதிக்கப்பட்டோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கருத்தரங்கில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கி.வில்வராஜா, மாவட்ட பிரதம கணக்காளர் திரு. ம.செல்வரட்ணம், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.கே.லிங்கேஸ்வரன் , உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட அலுவலகர் திருமதி .ஜெயபவாணி, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு.எம்.முபாரக், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி லிசோ கேகிதா, பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.