ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறந்த பவுலர்களைக் கொண்ட அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து கூறியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2023 சீசன் தொடர் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறந்த பவுலர்களைக் கொண்டுள்ள அணி குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது- நடப்பு சீசனில் ஆர்.சி.பி. அணியில் தான் மிகச்சிறந்த பவுலர்கள் உள்ளனர். அந்த அணியில் ஜோஷ் ஹேசல்வுட் ஃபிட்டாக இல்லை. இருப்பினும், அவர்களிடம் ரீஸ் டோப்ளே உள்ளார். ஸ்பின்னர்களில் உலகத்தரம் வாய்ந்த வனின்டு ஹசரங்கா இருக்கிறார். உள்ளூர் ஆட்டக்காரர்களை பொருத்தளவில் முகம்மது சிராஜ், ஹர்ஷல் படேல் தங்கள் திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார்கள்.
கிளென் மேக்ஸ் வெல்லால் கூட பந்து வீச முடியும். அந்த வகையில் பார்க்கும்போது மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்ட அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இருப்பதை பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது வரை நடந்த எந்த ஐபிஎல் தொடரிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணி வீரர்கள் பட்டியல் – ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால் லோம்ரோர், முகமது சிராஜ், முகமது சிராஜ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப், சோனு யாதவ், அவினாஷ் சிங், ராஜன் குமார், மனோஜ் பண்டாகே, வில் ஜேக்ஸ், ஹிமான்சு சர்மா, ரீஸ் டோப்ளே