இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது இளம் வயதில் கிரிக்கெட் உபகரணங்களை வாங்குவதற்காக பால் பாக்கெட் விற்ற தருணங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யன் ஓஜா பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஓஜா வெளியிட்டிருக்கும் தகவல்கள் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் ரோஹித்தின் கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் அற்புதமாக உள்ளது. உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மா பாராட்டப்படுகிறார்.
இந்த நிலையில் அவருடன் இளம் வயதில் கிரிக்கெட் விளையாடிய இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் பிரக்யன் ஓஜா ரோஹித் சர்மா அடைந்த கஷ்டங்கள் குறித்து ஜியோ சினிமா இணைய தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அணியில்தான் நான் ரோஹித் சர்மாவை முதலில் பார்த்தேன். அப்போதே ரோஹித் சர்மா சிறந்த ஆட்டக்காரர் என்று சக வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர். அவரது அணிக்கு எதிராக விளையாடிய நான் அவருடைய விக்கெட்டையே நான் வீழ்த்தினேன்.
ரோஹித் சர்மா ஒரு வித்தியாசமான மும்பைக்காரர். அதிகம் பேச மாட்டார். ஆனால் அவரது பேட்டிங் வெறித்தனமாக இருக்கும். குறிப்பாக எனது பந்துவீச்சையெல்லாம் அவர் சிக்சர் பவுண்டரிக்கு பறக்க விட்டிருக்கிறார். அதன் பின்னர் எனக்கும் ரோஹித்திற்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டது. அவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய கிட்டை வாங்குவதற்கு எங்களுக்கு குறைவான தொகைதான் அளிக்கப்பட்டிருந்தது. தொகையை ஈடு செய்வதற்காக ரோஹித் சர்மா பால் பாக்கெட்டுகளை விற்றார். இன்றைக்கு அவரது வளர்ச்சியைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இவ்வாறுஅவர் கூறினார்.