மனம் திறக்கிறார் மனோ கணேசன்
கனடா உதயன் பத்திரிக்கை–அத்தியாயம் 9
- காணாமல் போனோர் உறவுகள் நேரடியாக மனித உரிமை ஆணையாளரை சந்திக்க கூடாது என அரசாங்கம் நிபந்தனை போட்டது
- குடும்ப உறவுகளை ஐநா வளாக வாசலுக்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்ய வைக்க நான் திட்டம் போட்டேன்
- சுவரின் அந்த பக்கம் இருக்கும் மக்களை சந்திக்க தயங்கிய, மனித உரிமை ஆணையாளரிடம், “..பரவாயில்லை, மேடம் கமிஷனர், ஐநா ஆணையாளர் சுவரின் அந்த பக்கம் இருக்கும் மக்களை சந்திக்க விரும்பவில்லை. நான் இதை போய் அவர்களிடம் சொல்கிறேன்..” என்றேன். அதிர்ந்து போன ஆணையாளர் லுவிஸ் ஆர்பர், எனது வலது கையை இறுக்கமாக பிடித்தபடி என்னுடன் வெளியே வந்தார்.
- அப்பாவிகளின் அழுகுரல் அன்றைய தினம் அங்கே வானை பிளந்தது. எமது அவலத்தை உலகம் முதல் முதலாக நேரடியாக பார்த்து, கேட்டது.
காலகட்டம்: 2007ல் கொடும் யுத்தம் நடைபெறும் காலம். ஐநா மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆபர் அவர்களின் விஜயத்தில் முக்கியமான நிகழ்ச்சியான எங்கள் மக்கள் கண்காணிப்பு குழுவையும், காணாமல் போன மக்களின் உறவுகளையும் ஆணையாளர் சந்தித்த காலகட்டம்.
|
ஐநா மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அவர்களின் இலங்கை விஜயத்தில், காணாமல் போனோரின் குடும்ப அங்கத்தவர் எவரும் ஆணையாளரை நேரடியாக சந்திக்க கூடாது என்ற நிபந்தனையை அரசாங்கம் எனக்கும், கொழும்பு ஐநா அலுவலகத்திற்கும் விதித்திருந்தது.
’நான் சொல்வதை கேட்க மாட்டேன்’ என்று அன்றைய மனித உரிமை துறைசார் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்கவிற்கு (இப்போது அமெரிக்காவில் இலங்கை தூதுவர்) நன்றாக தெரியும். ஆனால் கொழும்பு ஐநா அலுவலக அதிகாரிகள் “ப்ரோடோகால்” (Protocol) காரணமாக அரசாங்கத்தின் நெருக்குதலை மீறமுடியாமல் தடுமாறினார்கள்.
இறுதியில் கொழும்பு புலர்ஸ் சந்தியில் அமைந்திருக்கும் ஐநா வளாகத்தில், ஆணையாளர் லுயிஸ் ஆர்பர், எங்கள் மக்கள் கண்காணிப்பு குழுவை சந்தித்தார்.
என்னுடன், சிறிதுங்க ஜயசூரிய, பிரியாணி குணரத்ன, சுரேஷ் பிரேமச்சந்திரன், கீர்த்தி தென்னக்கோன், ஆகியோரும் மேலதிகமாக இன்னும் பத்து பேரும் கலந்துகொண்டார்கள். அன்று எனது கட்சியில் இருந்த குமரகுருபரனையும் என்னுடன் கூட்டத்திற்கு அழைத்து போனேன்.
அத்துடன் கொழும்பில் இருந்து வேறு சில மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாக ஞாபகம். குறிப்பாக நண்பர் சட்டத்தரணி ரத்னவேலு, நண்பர் கந்தசாமி (இப்போது ஆஸ்திரெலியாவில் வாழ்கிறார்) அவரது மனித உரிமை அமைப்பு சார்பாக கலந்து கொண்டார்.
எனக்கு எதிராக அரச பயங்கரவாதம் முன்னெடுக்கப்பட்டு, நெருக்கடி தீவிரம் அடைந்த வேளைகளில், எமது மக்கள் கண்காணிப்பு குழுவுக்கு அளப்பரிய ஒத்துழைப்புகளை வழங்கியவர், நண்பர் கந்தசாமி.
பத்து பேரை மக்கள் கண்காணிப்பு குழுவின் பணியாளர்கள் என்று சொல்லி, உண்மையில் காணாமல் போனவர்களின் உறவினர்களை நான் இரகசியமாக கூட்டி போனேன்.
அதற்கு முன், பெருந்தொகையான காணாமல் போனோர்களின் குடும்ப உறவுகளை நாடு முழுக்க இருந்து அன்று காலை 8 மணிக்கே புறக்கோட்டை பேங்க்ஷால் வீதியில் அமைந்துள்ள எனது கட்சி அலுவலகத்திற்கு முன் கூட்டினேன்.
அங்கே இருந்து அவர்களை ஐநா வளாகம் அமைந்துள்ள புலர்ஸ் சந்திக்கு அழைத்து வந்து, ஆணையாளருடன் நாங்கள் வளாகத்திற்குள்ளே பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, வெளியே ஆர்ப்பாட்டம் செய்ய வைக்க வேண்டும். இது என் திட்டம்.
காணாமல் போனோரின் உறவுகளை ஆணையாளர் சந்திக்க கூடாது என, அரசாங்கம் தடைவிதித்திருந்தாலும் கூட அதை மீறி இது நடைபெற வேண்டும்.
இதன் மூலம் இலங்கையில் காணாமல் போன தமிழர்களின் குரலை நேரடியாக ஆணையாளரும், உலகமும் கேட்க வேண்டும் என்பது எனது திட்டம்.
நான் கட்சி அலுவலகத்திற்கு காலையிலேயே வந்து, கட்சியின் கொழும்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களிடம் சரியாக 11 மணிக்கு காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களை புலர்ஸ் சந்திக்கு அழைத்து வந்து, ஐநா வளாகத்திற்கு முன்னாலே தெருவில் அமர்த்த வேண்டும் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.
இதற்காக மூன்று பஸ் வண்டிகளை ஏற்பாடு செய்திருந்தேன்.
பிறகு நான் வீட்டுக்கு சென்றுவிட்டு காலை 11 மணி கூட்டத்திற்கு 10.30 மணியளவில் ஐநா வளாகத்திற்கு சென்ற பொழுது, 10 மணிக்கே குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்து வீதியிலே, மக்கள் கண்காணிப்பு குழு பதாகைகளுடன் அமர வைத்திருந்தார்கள், என்னை போன்றே கில்லாடிகளான எனது கட்சி பணியாளர்கள்.
உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிந்திருந்தார்கள். போலீசாரும் குவிந்திருந்தாரக்ள்.
ஆணையாளருடன் எமது சந்திப்பு சுமார் இரண்டு மணித்தியாலம் நடைபெற்றது.
“எங்கே எங்கள் உறவுகள்?” (Where are our dear Ones?) என்ற கடுமையான ஒரு உரையை ஆங்கிலத்திலே நிகழ்த்திவிட்டு மக்கள் கண்காணிப்பு குழுவின் காணாமல் போனோர் பற்றிய ஆவணத்தை ஆணையாளரிடம் நேரடியாக நான் கையளித்தேன்.
என்னையடுத்து சிறிதுங்கவும், சுரேஷ் பிரேமசந்திரனும் உரையாற்றினார்கள்.
அங்கே இருந்த காணாமல் போனோர் குடும்ப உறுப்பினர்கள் அழுது, புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு பெண்மணியான லூயிஸ் ஆர்பர் உணர்ச்சிவசப்பட்டு போய்விட்டார். அவர் இறுதியிலே உணர்ச்சிகரமான பதிலுரை நிகழ்த்தினார். கூட்டம் முடிந்தது.
ஐநா வளாக வெளி வாசலை நோக்கி நடந்தோம். எப்படியாவது ஆணையாளரை வளாகத்திற்கு வெளியே வர செய்து அங்கே ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான காணாமல் போனோரின் குடும்ப உறவுகளை பார்க்க செய்ய வேண்டும் என்பது திட்டம்.
ஆனால் ஆணையாளரை சுற்றி இருந்த ஐநா சபையின் இலங்கை ஊழியர்கள் ஆணையாளர் வளாகத்திற்கு வெளியே வந்து காணாமல் போனோரின் கும்ப உறுப்பினர்களை சந்திப்பதை தடுக்கப்பார்த்தார்கள்.
இலங்கையர்களான அவர்களுக்கு அரசாங்கம் நேரடியான கடும் உத்தரவுகளை விடுத்திருக்கும் என்பது எனக்கு தெரியும்.
அங்கே இருந்த ஐநா அலுவலகத்தின் பிரதான அதிகாரியான ஒரு சிங்கள பெண்மணி “ஆணையாளரை வெளியே அழைத்து செல்ல வேண்டாம்” என்று மக்கள் கண்காணிப்பு குழு செயலாளர் பிரியாணியை திட்டிக்கொண்டிருந்தார்.
அங்கே சென்ற நான் அந்த அதிகாரியை நேரடியாக கை நீட்டி திட்டினேன். “வாயை மூடு. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களிடம் நீ கூறத்தேவையில்லை.” என்று நான் மிக கடுமையான குரலில் ஆங்கிலத்தில் சொன்னேன். நான் கூறியதை சிங்களத்தில் பிரியாணி உரக்க அவருக்கு சொன்னார். அதோடு அந்த சிங்கள பெண் ஐநா அதிகாரி வாயை மூடிக்கொண்டார்.
“வெளியே வாயிலுக்கருகிலே வந்து, அங்கே உங்களை பார்ப்பதற்காக காத்திருக்கும் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களை ஒரு நிமிடம் வந்து பார்த்துவிட்டு போங்கள்” என்று ஆணையாளர் ஆர்பரிடம் நான் அமைதியாக கேட்டேன்.
கனடா நாட்டு கெளரவமான பெண்மணியான ஆர்பர் முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார். அரசாங்கத்துக்கு ஐநா, வழங்கியுள்ள நிபந்தனையை மீற தயங்கினார். வெளியில் வந்து மக்களை சந்திக்க கூடாது என்று அரசாங்கம் நிபந்தனை விதித்திருந்தது.
உணர்வுபூர்வமான ஒரு கட்டம். என் வாழ்விலும் முக்கியமான ஒரு கட்டம். ஏனென்றால் எவ்வளவுதான் ஆவணங்களை கொடுத்தாலும், எடுத்து கூறினாலும், நேரில் பார்த்தறிவது போல் எதுவும் வராது. கொடும் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவ்வேளையில், அதன் விளைவை எப்பாடு பட்டேனும் வெளியில் காட்ட வேண்டும் என்று எனக்குள் ஒரு வெறி ஏற்பட்டது.
நிலைமையை ஊகித்துக்கொண்ட, நான் சட்டென ஆணையாளரின் கண்களை நேரடியாக பார்த்து தெளிவான ஆங்கிலத்தில் கில்லாடித்தனமாக கூறினேன்.
“இங்கே வெளிச்சுவருக்கு அந்த பக்கத்திலே மனித உரிமை மீறப்பட்டு, கடத்தப்பட்ட அப்பாவிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஐநா சபையின் மனித உரிமை ஆணையாளரை நேரடியாக பார்க்க வேண்டும் என்று அழுகின்றார்கள்.”
“சுவரின் இந்த பக்கம் உள்ளே இருக்கும் மனித உரிமை ஆணையாளர் அந்த மக்களை சந்திக்க விரும்பவில்லை. பரவாயில்லை, மேடம் கொமிஷனர், நான் இதை போய் அவர்களிடம் சொல்கிறேன்.” என்று வெளிவாசலை நோக்கி நடக்க தொடங்கினேன்.
அதிர்ந்து போன ஐநா மனித உரிமை ஆணையாளர் லுயிஸ் ஆர்பர், சட்டென எனது வலது கையை இறுக்கமாக பிடித்தார். எனது கையை பிடித்தபடி என்னுடன் நடந்துவர, வெளிக்கதவு திறக்கப்பட்டது.
அங்கிருந்த ஐநா பாதுகாப்பு அதிகாரிகள் பதட்டமும், தடுமாற்றமும் அடைந்தார்கள். வெளியே இருந்த போலீஸ்காரர்களும் உஷார் ஆனார்கள்.
ஐநா வளாகத்தின் வெளி மதில் சுவர் கதவை திறந்து, நான் ஐநா மனித உரிமை ஆணையாளரை வெளியே அழைத்து வந்தேன். அவர் தெருவில் இறங்கவில்லை. ஐநா வளாக வாயிலில் நின்றுகொண்டார்.
ஆனால் தெளிவாக அவரை காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்கள் கண்டார்கள். அங்கே இருந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வயோதிபர்களும் ஆணையாளரை நோக்கி ஐநா வளாகத்திற்கு எதிர்புறத்தில் இருந்து ஐநா வளாகத்தை நோக்கி ஓடி வந்தார்கள்.
போலீசார் பாடுபட்டு அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். தங்களது உறவுகளை இழந்திருந்த அந்த அப்பாவிகளின் அழுகுரல் அன்றைய தினம் அங்கே வானை பிளந்தது.
ஐநா ஆணையாளரின் முகம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தது. பெண்மணியான அவரின் கண்கள் கலங்கியதை தெளிவாக நான் பார்த்தேன்.
அதுதான் இலங்கையிலே அரச பயங்கரவாதத்தால் கடத்தப்பட்ட, கொல்லப்பட்ட அப்பாவிகளின் குடும்ப உறவுகளின் ஓலத்தை ஐநா மனித உரிமை ஆணையாளரின் கண்கள், காதுகள் ஊடாக உலகம் முதல் முதலாக நேரடியாக பார்த்த, நேரடியாக கேட்ட வேளை.
அதற்கு வழியேற்படுத்திக்கொடுத்தது எனது மனித உரிமை போராட்ட வாழ்விலே ஒரு முக்கியமான நடவடிக்கை என்று நான் அன்றே என் மனதில் எழுதி வைத்துக்கொண்டேன்.
இதன் பின்தான், இலங்கை அரசாங்கம் என்மீது கடும் சீற்றம் கொண்டு, அவதூறு பரப்பி, என்னை கைது செய்து, ஒழித்துக்கட்ட முயற்சிப்பதற்கு இந்த சம்பவமே பிரதான காரணமாக அமைந்தது.
இன்றைய யுத்தமில்லாத இயல்பு வாழ்க்கை காலத்தில் மேடை தோறும் ஏறி முழங்கும் பல “வீரர்களுக்கு” இந்த அனுபவமும் இல்லை. வரலாறும் தெரியாது.
அடுத்தநாள் காலையில், யாழ் பிஷப் இல்லத்தில், வடக்கின் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும், யாழ் ஆயரையும் சந்திப்பதற்கு மனித உரிமை ஆணையாளரின் நிகழ்ச்சி நிரலிலே ஏற்பாடாகியிருந்தது.
நானும், சிறிதுங்க, ப்ரியாணி மற்றும் இன்றைய நிகழ்ச்சிக்கு கொழும்பு வந்திருந்த சுரேஷ் ஆகியோர் அடுத்தநாள் காலை யாழ்ப்பாணம் செல்ல வானூர்தியொன்ற ஏற்பாடு செய்திருந்தோம்.
ஆனால் அந்த ஹெலிகப்டர் பறப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வாபஸ் வாங்கிவிட்டது. ஆணையாளருக்கு அரசாங்கம் விசேட வானூர்தியை ஏற்பாடு செய்திருந்தது. ப்ரோடோகால் காரணமாக அதில் நாங்கள் பயணிக்க முடியாது.
ஆகவே எம்மால் அடுத்த நாள் யாழ் செல்ல முடியாமல் போனது.
அடுத்தநாள் காலை யாழ்ப்பாணம் சென்று ஆயரையும், யாழ் சிவில் சமூகத்தையும் சந்தித்த ஐநா மனித உரிமை ஆணையாளர் மாலையில் கொழும்பு திரும்பி வந்து, தனது பயணத்தை முடித்துக்கொண்டு, கடும் அறிக்கையை விடுத்து விட்டு, இலங்கையில் இருந்து கிளம்பி சென்றார்.