ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதன்பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பேட்டிங் செய்யத் தொடங்கினர்.
தொடக்க வீரர் பிரப்சிம்ரம் சிங் 34 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 60 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். அவரும் கேப்டன் ஷிகர் தவானும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜிதேஷ் சர்மா 27 ரன்களும், ஷாரூக்கான் 11 ரன்களும் எடுக்க தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார்.
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 197 ரன்கள் எடுத்தது. 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர்கள் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 11 ரன்னும், அஷ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஜோஸ் பட்லர் 19 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களும் எடுத்து அணியின் தொடக்க இழப்பை சரி செய்தனர். அடுத்து வந்தவர்களில் தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். ரியான் பராக் 20ரன் எடுத்து வெளியேற பின்னர் இணைந்த ஹெட்மேயர் – துருவ் ஜுரல் இணை அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தது. 15 ஓவர்கள் முடிவில் 124 ரன்களை ராஜஸ்தான் எடுத்திருந்தபோது இருவரும் இணைந்தனர். இருவரும் 7 ஆவது விக்கெட்டிற்கு 27 பந்துகளில் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றனர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியால் 192 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து தோல்வியை தழுவியது.