கனடா நக்கீரன்
ஊரார் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. அதாவது தன் வீட்டு நெய் என்றால் மனைவி சிக்கனமாகவும் ஊரார் வீட்டு நெய் என்றால் வாரி இறைத்தும் செலவு செய்வார் என்பதை விளக்க இந்தப் பழமொழியைக் கூறுவர் அதுபோல இலங்கையின் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க சாதாரண பொதுமக்களைப் பார்த்து வாயைக் கட்டி வயிற்ளைக் கட்டி வாழுமாறு உபதேசம் செய்கிறார். ஆனால் தனது அமைச்சரவை செலவீனங்கள் பற்றியோ, நாடாளுமன்ற உறுப்பினர்களது செலவு பற்றியோ அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கவலைப்படாதது மட்டுமல்ல நாடாளுமன்றத்தின் செலவீனங்களை அதிகரிப்பதில்தான் குறியாகயிருக்கிறார். அமைச்சரவையில் இப்போதுள்ள அமைச்சர்கள் போதாது என்று மேலும் பலருக்கு அமைச்சர் பதவிகள் வழங்க அவர் ஆயத்தமாகி வருகிறார். இதற்கான செலவு அவரது வீட்டுப் பணம் அல்ல, நாட்டின் கருவூலத்தில் இருக்கும் பணம்!
முன்னாள் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களின் முதலாவது அமைச்சரவையில் 26 அமைச்சர்களும் 39 இராசாங்க அமைச்சர்களும் இடம்பெற்றார்கள். தற்போதைய சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களின் அமைச்சரவையில் 21 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இராசாங்க அமைச்சர்களாக 35 பேர் இருக்கிறார்கள்.
நாடு ஒட்டாண்டியாகப் போன காரணத்தால் மக்கள் அரைப்பட்டினி கிடக்கிறார்கள். மூன்று நேரம் உணவு உண்டவர்கள் அதனை இரண்டு நேரமாகக் குறைத்துள்ளார்கள். பொருட்களின் விலை சற்றுக் குறைந்து காணப்பட்டாலும் ஏழைபாளைகளுக்கு அவை எட்டாத தூரத்தில் இருக்கின்றன.
பக்கத்து நாடான பாகிஸ்தானும் இலங்கையைப் போலவே பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 30 பில்லியன் டொலர் பெறுமதியான உற்பத்தி முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. பாகிஸ்தான் 22 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2.4% ஆகும். பணவீக்கம், சனவரியில், 2023 இல் 27.5% தொட்டது. அன்னியச் செலாவணி கையிருப்பு மூன்று வார இறக்குமதித் தொகைக்குக் கீழே குறைந்துள்ளது. மக்கள் தொகையில் 35% ஏழைகள்.
இலங்கையைப் போலவே பாகிஸ்தானும் அனைத்துலக நிதியத்திடம் கையேந்தி நிற்கிறது. கடந்த பெப்ரவரி மாதம் பொருளாதாரச் சரிவைத் தடுக்க $6.5 பில்லியன் கடனாகக் கேட்டிருக்கிறது.
இதே சமயம் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அரசின் செலவினங்களைக் குறைக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தனது அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களின் சொகுசு கார்கள் மற்றும் அவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 10% விழுக்காட்டால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கன நடவடிக்கைகளால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ரூபா 200 பில்லியன் ($766 மில்லியன்) மிச்சப்படுத்தப்படும்.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துவரும் இலங்கையில் நா.உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் குறைக்கப்பட வில்லை. அரச ஊழியர்களின் சம்பளத்தில் வெட்டு இடம் பெறவில்லை. அமைச்சர்களும் அதிகாரிகளும் உலகத்தை சுற்றி வலம் வருகிறார்கள். அண்மையில் வெளியுறவு அமைச்சர் எஸ்யுஎம் அலி சப்ரி, நீதி அமைச்சர் விசயதாச இராசபக்ச மற்றும் அதிகாரிகள் தென் ஆபிரிக்கா சென்று வந்தார்கள்.
இலங்கை சனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அவைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினகளது மாதாந்த சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் பின்வரும் அட்டவணை 1 காட்டுகிறது.
அட்டவணை 1
நா.உறுப்பினர்களின் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் | ரூபா |
சனாதிபதி | 97,500 |
பிரதமர் | 71,500 |
அவைத் தலைவர் | 68,000 |
துணைத் அவைத் தலைவர் | 63,500 |
அமைச்சரவை அமைச்சர்கள் | 65,000 |
எதிர்க்கட்சித் தலைவர் | 65,000 |
நா.உறுப்பினர்கள் | 54,285 |
கொடுப்பனவுகள் | |
பயணப்படி | 15,000 |
எரிபொருள் (சராசரி) 250 லிட்டர் | 15,000 |
முத்திரைச் செலவு (ஓர் ஆண்டுக்கு) | 350,000 |
தொலைபேசி | 50,000 |
ஒரு நாள் வருகை | 2,500 |
குழுக் கூட்ட வருகை | 2,500 |
பொழுதுபோக்குக் கொடுப்பனவு | 4,500 |
வண்டி ஓட்டுநர் | 3,500 |
அலுவலகம் | 100,000 |
கீழ்க்கண்ட அட்டவணை 2, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம், கொடுப்பனவுகள், கழிவுகளைக் காட்டுகிறது.
அட்டவணை 2
சனாதிபதி, பிரதமர்,அவைத்தலைவர், இராசாங்க அமைச்சர்கள் போன்றோருக்கு ஏதாளமான ஆளணி, வாகனங்கள் வழங்கப்படுகின்றன.
வரலாற்று நோக்கில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நா.உறுப்பினர்கள் மத்திய கொழும்பில் உள்ள ஸ்ராவஸ்தியில் தங்க வைக்கப்பட்டார்கள். அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதி என்று அழைக்கப்பட்டது. 1980 களில் மாதிவெல வீடமைப்புத் தொகுதியை (Madiwela Housing Complex) நிர்மாணித்ததன் மூலம், கொழும்பிற்கு வெளியில் இருந்து வருகின்ற உறுப்பினர்கள் அதில் தங்க வைக்கப்படுகின்றனர். மாத வாடை ரூபா 1,000 மட்டுமே. மாதிவெல வீடமைப் தொகுதியில் இடம் இல்லை என்றால் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கான கொடுப்பனவை அரசாங்கம் கொடுக்கிறது. அத்துடன், பாராளுமன்ற செயலகத்தின் நிர்வாகத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் நுவரேலியாவில் பத்தொன்பது அறைகள் கொண்ட விடுமுறை மாளிகையில் (General’s House) நா. உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் தனியே பயன்படுத்தலாம்.
பிற கொடுப்பனவுகள்
நா. உறுப்பினர்கள் உணவருந்தும் பகுதியில் மானிய விலையில் உணவு வழங்கப்படுகிறது. முதன்மையாக, 5 பிரத்தியேக உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், சிறப்பு விருந்தாளிகளது உணவு அறைகள் மற்றும் பிற வகையான சேவை நிலையங்கள் உட்பட 12 முக்கிய உணவு மற்றும் குளிர்பான சேவை விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றில் 5 நாளாந்த அடிப்படையில் இயக்கப்பட்டு, நாடாளுமன்றம் கூடாத நாட்களில் 1000 – 1200 பேருக்கு உணவளிக்கின்றன.
இந்தத் திணைக்களம் சிறப்பு நாட்களில் அதன் முழு அளவிலான திறனுடன் செயல்படும் போது சனாதிபதி, பிரதமர், அவைத்தலைவர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள், வெளிநாட்டு இராசதந்திரிகள், உள்ளூர் பிரமுகர்கள், வருகை தரும் அரசாங்க அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலருக்கும் உணவு பரிமாறப்படுகிறது. உணவு தயாரிப்பில் 260 க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள் ஈடுபடுகிறார்கள். மதியநேர அல்லது இரவு நேரச் சாப்பாட்டின் விலை ரூபா 296 மட்டுமே. ஆனால் அதன் தயாரிப்புச் செலவு ரூபா 3,000 தொடும் என்கிறார்கள். எப்படியும் வெளியில் அந்த உணவின் விலை குறைந்த பட்சம் ரூபா 1,000 ஆவது வரும். மேலும் இந்த உணவு வீணாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆண்டு தோறும் ரூபா120 மில்லியன் பெறுமதியான உணவு, குடிதண்ணீர் போன்றவற்றை வீணடிக்கிறது. தண்ணீர் மட்டும் 9 மில்லியன்.
பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கும் இதே அரசியல்வாதிகள்தான் மலையகத் தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தை உயர்த்த மறுக்கிறார்கள். கடந்த ஆண்டு சம்பளத்தை ரூபா 1,000 ஆக உயர்திய தோட்டக் கம்பனிகள் ஒப்புக் கொண்டாலும் வேலை நாட்களை 6 இல் இருந்து 5 ஆகக் குறைத்துவிட்டன. 16 கிலோ பறித்தால் தினக் கூலி ரூபா 640 மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த மக்கள்தான் தேயிலை ஏற்றுமதியின் மூலம் ஏற்றுமதி வருவாயில் 11% வெளிநாட்டு நாணயத்தை தேடித் தருகிறார்கள். இந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதி மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு (2022) ஆண்டில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தது.
உலகில் மிகக் கடுமையாகச் சுரண்டப்படுகிற தொழிலாளர்கள் மலையகத் தமிழர்களே. பல ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டாலும், இவை பழைய லைன் அறைகளில் இருந்து வேறுபட்டவை அல்ல. இந்த வீடுகளும் இந்தியா கட்டிக் கொடுத்தவை. பல தோட்டங்களில் 200 ஆண்டுகளுக்கு முன் வெள்ளைக்காரன் கட்டிக் கொடுத்த லைன் வீட்டில்தான் இன்னமும் தொழிலாளிகள் குடும்பம் வாழ்கின்றன.
உயர் கல்வித் தகைமைகள் அற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சட்டக் கல்லூரியின் நுழைவுத் தேர்வுக்குத் தோன்றாமல் நேரடியாக அனுமதி பெறுகின்றனர். இந்தச் சலுகையைப் பயன்படுத்திச் கட்டக் கல்லூரியில் படித்து சட்டத்தரணிகளாக வெளிவந்தவர்களில் மகிந்த இராசபக்ச, நாமல் இராசபக்ச குறிப்பிடத்தக்கவர்கள்!
நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டப்படி, நாடாளுமன்றத்தில் 5 ஆண்டு பதவிக் காலத்தை முடித்த நா.உறுப்பினர், தனது சம்பளத்தில் 1/3 பங்கை ஓய்வூதியமாகப் பெறுகிறார். இதன் அடிப்படையில் ஒரு நா.உறுப்பினக்கு ரூபா 18,095 ஓய்வூதியமாகக் கொடுக்கப்படும். அதே நேரம் அமைச்சராக அல்லது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நா.உறுப்பினருக்கு ரூபா 21,166 ஓய்வூதியமாகக் வழங்ககப்படும். ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் அவைத் தலைவருக்கு ரூபா 22,833.50 வழங்கப்படும். ஓய்வூதியத்திற்குத் தகுதி பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு காலத்தை முடித்த பிரதமருக்கு ரூபா 23,500 வழங்கப்படும். எவ்வாறாயினும் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தின்படி, 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய எம்.பி., அந்தக் காலகட்டத்தில் பெற்ற சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கைப் பெறுகிறார். இதன்படி, 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய ஒரு நா.உறுப்பினருக்கு ஓய்வூதியமாக ரூபா 44,190 வழங்கப்படும்.
அதே சமயம் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரூபா 42,332 வழங்கப்படும். மேலும். 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய நாடாளுமன்ற சபாநாயகருக்கு ரூபா 25,666 ஓய்வூதியமாக வழங்கப்படும், பதினைந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவையில் இருக்கும் பிரதமருக்கு ரூபா 47,000 வழங்கப்படும். தற்போது, 254 அரசியல்வாதிகள், 196 கைம்பெண்கள், முன்னாள் நா. உறுப்பினர்களைச் சார்ந்துள்ள 7 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். அதன்படி, ஓய்வூதியம் பெற வேண்டிய ஒவ்வொரு நா. உறுப்பினருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் போது அரசாங்கத்துக்கு மாதச் செலவு ரூபா 8,276,587 ஆகும். ஒரு ஆண்டுக்கு அந்தத் தொகை ரூபா 99,211,044 ஆக உயரும். பத்து ஆண்டு காலத்திற்கு இவர்களுக்கான ஓய்வூதியம் மட்டுமே கிட்டத்தட்ட ரூபா 1 பில்லியனைத் (நூறு கோடி) தாண்டும்!
ஜேவிபியின் 39 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக ஓய்வூதியக் கொடுப்பனவாக ரூபா 24 கோடி, 63 இலட்சத்து அறுபதினாயிரம் பெற்றுள்ளதாக இராசாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் 40 ஆயிரம் ரூபா வீதம் ரூபா 62,40,000 ஓய்வூதிய கொடுப்பனவாக கடந்த 13 வருடங்களாக பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
இன்று ஐந்து முன்னாள் சனாதிபதிகளுக்கு கோடிக் கணக்கில் ஓய்வூதியம், வீடுகள், வாகனங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பார்த்தால் மயக்கம் வருகிறது. (தொடரும்)