மனம் திறக்கிறார் மனோ கணேசன்
கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 10
- ரணில் நல்லவராக இருந்தாலும் கூட, தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை அவரால் வழங்க முடியாது. ஆகவே புலிகளுடன் நாம் பேச விரும்புகிறோம் என்றார்கள்.
- ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பேசும் தமிழில் ஒரு இனம் புரியா இனிமை இருக்கும். அந்த இனிமையில் அவரது கட்சியின் விஷமும் இருக்கும்.
- அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்ச, தன் சகோதரனின் பிரச்சாரத்தில் பங்கேற்க முதன் முதலாக இலங்கை வந்திருந்தார்.
- இந்த திட்டங்களுக்கு பின்னின்ற பிரதான சூத்திரதாரி மங்கள சமரவீர.
- புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனையே நான் சந்தித்து அரசியல் பேசியிருக்கிறேன், புலிகளை தெரியும், புலிகளில் அவர்களை தெரியாது, என்றேன்.
- புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தும்படி தென்னிலங்கையில் இருந்து எனக்கு வந்த மூன்றாவது கோரிக்கை இது. முதலாவது சந்திரிகா, இரண்டாவது மேத்தானந்த எல்லாவல தேரர், மூன்றாவது இதோ இவர்கள். இதை எல்லாம் செய்து விட்டுதான் “மனோ ஒரு புலி” என தென்னிலங்கையில் இனவாத பிரசாரம் செய்து என்னை கொல்ல முயன்றார்கள்.
- இன்று எங்கெங்கோ இருக்கும், அல்லது இருந்த, மங்கள சமரவீர, அனுரகுமார, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில ஆகிய அனைவரும் மகிந்த அணியில் இருந்தார்கள்.
- மஹிந்த வருவதைதான் புலிகளும் விரும்புவதாக நான் காற்றுவாக்கில் அறிந்தேன். சிங்கள தேசியவாத அரசாங்கம் வந்தால்தான் தங்களது போராட்டத்திற்கு வாய்ப்பாக இருக்கும் என புலிகள் நினைப்பதாக தெரிகிறது” என்ற உண்மையை உள்ளது உள்ளபடி கூறினேன்.
காலகட்டம்: 2005 – ஜனாதிபதி தேர்தல். அதற்கு முன் நடந்த ரணிலின் போர் நிறுத்த சமாதான கால ஆட்சியை ஜனாதிபதி சந்திரிகா கலைத்த பின் நடைபெற்ற தேர்தல். ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர் மகிந்த ராஜபக்ச |
2005ஆம் வருடம் ஜனாதிபதி தேர்தலிலே ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்.
சந்திரிகாவுடன் சண்டை போட்டு, மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனத்தை பெற்றார். அவருக்கு ஜேவிபி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் ஆதரவு.
தேர்தலுக்கு முன் ரணில், சிங்கள, வடகிழக்கு தமிழ், மலையக தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெற்று வெல்லும் அரசியல் சூழல் நிலவியது.
சிங்கள வாக்குகளை தானும், ரணிலும் பிரித்துக்கொள்ளலாம். ஆனால், தமிழர்களின் வாக்கு ஒட்டுமொத்தமாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு விழுவதை மஹிந்த ராஜபக்ச விரும்பவில்லை. அப்படி விழுந்தால் ரணில் வென்று விடுவார் என மஹிந்த அணி மிக சரியாக கணக்கு போட்டது.
அப்பொழுது அவரது தேர்தல் பிரச்சாரத்தின் பிரதான செயற்பாட்டாளர் மங்கள சமரவீர. அவருக்கு உதவியாக ஸ்ரீபதி செயற்பட்டார்.
மங்கள பின்னாளில், சமாதான ஆர்வலர், தமிழருக்கு நியாயம் வழங்க வேண்டும் என விரும்பியவர், என்றெல்லாம் புகழப்பட்டாலும்கூட, ஆரம்பத்தில், மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கொண்டு வந்ததில் அவர்தான் பிதாமகன்.
அப்போதுதான் அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்ச தனது சகோதரனின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக இலங்கை வந்திருந்தார். வந்தவுடன் அலரி மாளிகையில் இருந்தபடி மங்களவுடன் சேர்ந்து அவர் சுறுசுறுப்பாக செயற்பட தொடங்கினார்.
இன்று ராஜபக்ச அணியில் இருக்கக்கூடிய முன்னணி அலப்பறைகள் அன்று பிரதானிகளாக இருக்கவில்லை. ஒரு புறத்தில் அமைச்சர் மங்களவும், ஸ்ரீபதி சூரியாராய்ச்சியும், மறுபுறம் பசிலும், அமைச்சர் ஜெயராஜ் பெர்னெண்டோ புள்ளேயும்தான் முன்னணியாளர்கள்.
தேர்தல் பிரச்சார ஆரம்ப காலக்கட்டத்திலே வேட்பாளர் நியமனம் செய்யப்பட்ட பிறகு அவசர அவசரமாக ஒருநாள் ஜெயராஜ் பெர்னெண்டோ புள்ளே என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டார். என்னை சந்திக்க வேண்டும். தன்னுடன் இன்னொரு முக்கிய பிரமுகரும் வந்து என்னை சந்திக்க விரும்புகின்றார் என்று கூறினார். வரச்சொன்னேன்.
ஜெயராஜ் எனது தனிப்பட்ட நண்பர். அவர் என்னுடன் எப்போதும் தமிழில்தான் பேசுவார். அவரது தமிழில் ஒரு இனம்புரியா இனிமை இருக்கும். அந்த இனிமையில் அவரது கட்சியின் விஷமும் இருக்கும்.
வெள்ளவத்தையில் உள்ள என் சகோதரி கெளரி கணேசனின் வீட்டின் மொட்டை மாடியில் அந்த சந்திப்பு இடம்பெற்றது. என்னுடன் அப்போது கட்சியில் இருந்த சகோதரர் பிரபா கணேசனும் இருந்தார். குறிக்கப்பட்ட நேரத்தில் ஜெயராஜ் பெர்னெண்டோ புள்ளே, பசில் ராஜபக்சவையும் அழைத்துக்கொண்டு என்னை சந்திக்க வந்தார்.
பசில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்பொழுதுதான் அவரை முதன்முதல் சந்திக்கின்றேன். அவரை பற்றி எனக்கும், என்னை பற்றி அவருக்கும் ஜெயராஜ் எடுத்து கூறினார்.
“ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைப்பதில் எந்த பயனும் இருக்க போவதில்லை. அவர் நல்லவராக இருந்தாலும் கூட, (எப்படி? நல்லவர் என ஏற்றுகொள்கிறார்கள்..!) தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை அவரால் வழங்க முடியாது. அவர் வழங்கும் எந்த ஒரு தீர்வையும் சிங்கள பெரும்பான்மை மக்களும், பௌத்த மகாசங்கமும் ஏற்றுக்கொள்ள போவதில்லை.” என்று மிகவும் நடைமுறை கோணத்தில் பசில் எனக்கு சொன்னார்.
இது எனக்கு புது செய்தியாக இருக்கவில்லை. இரண்டு தினங்களுக்கு முன் இதே வாதத்தை முன் வைத்து பாராளுமன்றத்தில் ஸ்ரீபதி சூரியாராய்ச்சி என்னுடன் உரையாடி இருந்தார்.
இதுதான், ஸ்ரீபதியின் நண்பரும், ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் பிரதான பிரசார செயற்பாட்டாளருமான, நண்பர் மங்கள சமரவீரவின் அந்நேர நிலைப்பாடாகும்.
பசில் சொல்வதையெல்லாம் அமைதியாக கேட்டுவிட்டு, “சரி, நான் என்ன செய்யவேண்டும்? என சொல்லுங்கள்” என்று கேட்டேன்.
“நீங்கள் எங்கள் அணியில் சேர வேண்டும். மஹிந்த ராஜபக்ச நிச்சயமாக வெற்றிபெற்று ஜனாதிபதியாவார். அவரது அரசாங்கத்திலே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பொருத்தமான சிலரில் நீங்களும் ஒருவர். ” என்று பசில் என்னிடம் கூறினார்.
பிறகு என்னை ஒருமுறை ஆழமாக பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“நான் உங்களை முதல் முதலாக இன்று தான் சந்திருந்தாலும் கூட ஜெயராஜ் உங்களை பற்றி எனக்கு நிறைய கூறி இருக்கின்றார். தமிழும், சிங்களமும், ஆங்கிலமும் பேசக்கூடிய நீங்கள் எங்களுக்கு உங்கள் கட்சி ரீதியாக ஆதரவளித்து எங்கள் பிரச்சாரத்தில் இணைந்துகொள்ள வேண்டும்.” என்று பசில் மேலும் கூறினார்.
அந்நேரம் நான் இன்று போல சரளமாக சிங்களம் பேச மாட்டேன். தமிழ், ஆங்கிலம் மட்டும்தான். ஆனாலும் இவர் இப்படி சொல்கிறார். காரியம் ஆக வேண்டுமே..!
ஜெயராஜ் பெர்னெண்டோ புள்ளே நீண்ட நேரம் பேசினார். நான் எதற்கும் ஆம், இல்லை என்று சொல்லவில்லை. அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.
பிரபா கணேசனும், அந்நேரம் என்னுடைய செயலாளர் பிரசாத் பீரிசும் என்னுடன் அமர்ந்திருந்தார்கள்.
“நீங்கள் எங்களுடன் இணைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். ஒரு வேளை எங்களுக்கு நேரடியாக ஆதரவளிக்க முடியாவிட்டால், இன்னொரு உதவியை நீங்கள் எங்களுக்கு செய்யலாம்.” என்று ஜெயராஜ் என்னிடம் கூறினார்.
அது என்ன என கேட்பதை போல அவர்களை நான் கூர்ந்து பார்த்தேன். பசில் என்னை பார்த்து சிரித்தபடி இருந்தார், “Come Mano, I will explain” (வாருங்கள் மனோ, நான் விளக்குகிறேன்) என்று கூறி என் தோளை பிடித்து எழுப்பினார், ஜெயராஜ் பெர்னெண்டோ புள்ளே.
பசில், பிரபா, பீரிஸ் அங்கே இருக்க, நானும் ஜெயராஜும் எங்கள் வீட்டின் மொட்டை மாடியின் ஒரு இருண்ட மூலைக்கு சென்றோம். நேரம் இரவு 9 மணி இருக்கும். அங்கிருந்து பார்த்தால் தென் கொழும்பின் பெரும்பகுதி தெரிந்தது. இரவு நேர வெள்ளவத்தை கண் சிமிட்டியது. கடல் காற்று பலமாக அடித்துக்கொண்டு இருந்தது.
ஜெயராஜ் சொன்னார். “மனோ, நீங்கள் எங்களுக்கு புலிகளுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தி தர வேண்டும். நாங்கள் அவர்களுடன் பேச விரும்புகின்றோம்” என்றார்.
“அவர்களுடன் நீங்கள் என்ன பேச விரும்புகின்றீர்கள்?” என்று நான் கேட்டேன்.
“இல்லை, ரணில் ஆட்சிக்கு வரபோவதில்லை. பசில் உங்களிடம் சொன்னதை போல ஒருவேளை வந்தாலும்கூட, தீர்வு வரப்போவதில்லை. மகாசங்கத்தினர் விட மாட்டார்கள். மகிந்த வந்தால் தீர்வு வரும். மகாசங்கத்தினர் உடன்படுவார்கள்.” என்று கூறினார்.
“அப்படியா? ரணிலின் தீர்வு எனக்கு தெரியும். மகிந்தவின் தீர்வு, என்ன தீர்வு?” என நான் கேட்டேன். அந்த அசந்தர்ப்ப கேள்விக்கு, ஜெயராஜ் பதில் கூறவில்லை. தன் காரியத்தில் கண்ணாக இருந்தார்.
நான், நண்பர் ஜெயராஜிடம் அன்றைய சூழலில் நான் கேள்விப்பட்ட ஒரு உண்மையை கூறினேன்.
“மகிந்த வருவதைதான் புலிகளும் விரும்புவதாக தெரிகிறது. அந்த செய்தியை நான் காற்றுவாக்கில் அறிந்தேன். சிங்கள தேசியவாத அரசாங்கம் வந்தால்தான் தங்களது போராட்டத்திற்கு அது வாய்ப்பாக இருக்கும் என புலிகள் நினைப்பதாக தெரிகிறது” என்ற உண்மையை உள்ளது உள்ளபடி கூறினேன்.
அது தனக்கு தெரியும் என்றும், ஆனால் அது பற்றி திட்டவட்டமாக பேச வேண்டும் என்றும், மேலதிக ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் மகிந்தவின் வெற்றி தடைபட்டுவிட கூடாதென தான் உறுதியுடன் இருப்பதாகவும் ஜெயராஜ் என்னிடம் கூறினார். ஆகவே நீங்கள் எனக்கு தொடர்புகளை ஏற்படுத்தி தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
புலிகள் அமைப்பின் ஒருவரின் பெயரை ஜெயராஜ் சொன்னார். அவர் யார் என இதை படிக்கும் போது ஊகிப்பது கஷ்டம் இல்லை.
ஆனால், அவருடன் எனக்கு தொடர்பு கிடையாது என்றும், தடை செய்யப்படாத இன்றைய நிலையில், இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் சட்டபூர்வ போர்நிறுத்த ஒப்பந்தம் இருக்கும் இந்த சூழலில், புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனையே நான் சந்தித்து அரசியல் பேசியிருக்கிறேன் எனவும், புலி தலைவர் பிரபாகரனை ஒருமுறை சந்தித்தேன் எனவும், புலிகளை தெரியும், புலிகளில் அவர்களை தெரியாது என அவரிடம் கூறிவிட்டு, சிந்தித்து நாளை சொல்கிறேன் என்று கூறினேன்.
அதன் பிறகு ஜெயராஜும், பசிலும் விடைபெற்று சென்றார்கள்.
இது புலிகளுடன் பேசும்படி அல்லது, தொடர்பை ஏற்படுத்தும்படி தென்னிலங்கையில் இருந்து எனக்கு வந்த மூன்றாவது கோரிக்கையாகும். முதலாவது சந்திரிகா, இரண்டாவது மேத்தானந்த எல்லாவல, தம்மாலோக தேரர்கள், மூன்றாவது இவர்கள்.
இதை எல்லாம் செய்து விட்டுதான், “மனோ ஒரு புலி” என பின்னாட்களில் தென்னிலங்கையில் இனவாத பிரசாரம் செய்து என்னை கொல்ல முயன்றார்கள்.
எப்படியும் நான், ஜெயராஜ், பசில் சந்தித்து கேட்ட உதவியை செய்யவில்லை. என் மூலமாக செய்ய முடியாததை காந்தன் மூலமாக மங்கள சமரவீர செய்துகொண்டதாக நான் பின்னர் அறிந்தேன்.
இப்பொழுது நினைத்துப்பார்க்கும் பொழுது அந்த சர்ச்சைக்குரிய தொடர்பாடல் பணிகளை நான் செய்யாததை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன். செய்திருந்தால் சர்ச்சையில் மாட்டியிருப்பேன். அது மட்டுமல்ல, என் மனசாட்சி என்னை வாழ விட்டிருக்காது.
ஏனெனில், இந்த தொடர்பாடல் மூலமாக, இலங்கையின் வரலாறு தலைகீழாக மாறியது. பெரும் பேரழிவு ஏற்பட, இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட வழி வகுத்தது.
இந்த திட்டங்களுக்கு பின்னின்ற பிரதான சூத்திரதாரி, பிற்காலத்தில் தமிழரின் நண்பர் என்ற புகழுடன் மறைந்த மங்கள சமரவீர என்பது காலத்தின் கோல விசித்திரம்.
தேர்தலில் மகிந்தவை வெற்றி பெற வைக்க, மங்கள, விமல், அனுர, சம்பிக்க, கம்மன்பில ஆகியோர் ஒன்றுபட்டது போல, பிறகு மகிந்த வெற்றி பெற்று, போரை நடத்தி அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போது, மகிந்தவின் கரங்களை பலப்படுத்த கரு ஜெயசூரிய, ராஜித சேனாரத்ன என்ற சமாதான புறாக்களும் அரசு பக்கம் தாவினார்கள்.
இந்த காலத்தின் கோல விசித்திரங்களை பற்றியெல்லாம் நேரகாலம் வந்தால் பிறகு ஒருநாள் பேசுவோம்.