-நக்கீரன்–கோலாலம்பூர்,
உதவுவதும் நன்மை புரிவதும்தான் மனிதப் பண்பு; ஆனாலும், எந்த மனிதருக்கு எந்த வேளையில் எந்த இடத்தில் எவ்வித நன்மையை செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்யாவிட்டால், அதுவே நமக்கு தீமையைத் தேடித்தரும்.
இதுகுறித்து பழந்தமிழ் இலக்கியத்தில் அதிகமான புலவர்கள் பாபுனைந்து உள்ளனர். பொதுவாக மனிதர்கள் மற்றவர்களுக்கு உதவி வாழத்தான் வேண்டும்; அதேவேளை யாருக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்து, நிதானித்து செய்ய வேண்டும் என்று பினாங்கு கவிஞர் செ.குணாளனின் அந்தாதிப் பறவைகள் என்னும் நூல் அறிமுக விழாவில் சிறப்புரை ஆற்றியபோது குறிப்பிட்ட டத்தோஸ்ரீ தெய்வீகன்,
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகார மானாற்போல் – பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்
என்னும் இளம்பூரணரின் மூதுரைப் பாடலை துணைக் கொண்டார்.
காட்டில், காயம்பட்டு, நடக்கமுடியாமலும் பசியோடும் கிடந்த புலியைப் பார்த்து இரக்கம் கொண்ட மூலிகை மருத்துவர் ஒருவர், புலியின்பால் இரக்கம் கொண்டு அதற்கு வைத்தியம் செய்து, நடக்க வைத்தார்.
அடுத்த சற்று நேரத்தில், ஊக்கமடைந்த அப்புலி தன்னுடைய கடும் பசியைப் போக்கிக்கொள்ள, அருகில் மூலிகை தேடிக் கொண்டிருந்த அந்த் மனிதரையே அடித்துக் கொன்று இரையாக்கியது.
நடக்க முடியாமல் கிடந்த தனக்கு உதவி செய்த இந்த மனிதனுக்கு துன்பம் தரலாமா, அவரைக் கொன்று சாப்பிடலாமா என்ற நன்னெறி சிந்தனை யெல்லாம் அந்த விலங்கிற்கு இருக்காது. அதனால், எத்தகைய உதவி செய்வதாயினும், அவரவரின் பண்பு நலனையும் சூழலையும் அறிந்து செயல்பட வேண்டும்; இல்லாவிடில், அதுவே நமக்கு பாதகமாகவும் அமையும் என்றார் காவல் துறையில் இருந்து ஓய்வுபெற்றவரும் தேசிய காவல் படை பினாங்கு மாநில முன்னாள் தலைவருமான அவர்.
இதைத்தான், தமிழினத்தின் அறிவுலக முகவரி எனக் கருதத்தக்க திருவள்ளுவப் பெருந்தகையும் தான் இயற்றிய திருக்குறளில், பொருட்பால் பிரிவில் அரசியல் என்னும் இயலில் ‘தெரிந்து செயல்வகை’ அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு – அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
என்னும் 469-ஆவது குறளின்வழி தெரிவித்திருக்கிறார்.
மக்கள் ஓசை நாளேட்டின் பினாங்கு மாநில செய்தியாளரும் சுயமரியாதை சிந்தனையாளருமான குணாளன், தான் இயற்றிய மூன்றாவது கவிதைத் தொகுப்பு நூலுக்கு அந்தாதிப் பறவைகள் என்று பெயர் வைத்திருக்கிறார்.
அந்தம் என்பது முடிவையும் ஆதி என்னும் சொல் தொடக்கத்தையும் குறிப்பதால், ஒரு முடிவில் இருந்து இன்னொன்று தொடங்குகிறது என்னும் பொருள் கொண்ட அந்தாதி என்ற சொல்லுடன் பறவைகள் என்னும் சொல்லையும் இணைத்து நூலுக்கு பெயர் வைத்திருக்கிறார்.
நூலாசிரியரின் கற்பனை வேறு எந்தப் பொருளைக் குறிப்பிடுகிறது என்று தெரியவில்லை; ஆனாலும் தமிழில் ‘கடைமுதலிப் பறவைகள்’ என்று நாம் பொருள் கொள்வோம் என காவல் துறை வட்டத்தில் இருந்து வீசும் மெல்லிய இலக்கியத் தென்றலாக உருமாறியுள்ள தெய்வீகன் பேசினார்.
வாழ்க்கைக்கு ஒரு துணையைத் தேடிக்கொண்ட ஓர் ஆடவன், அன்றாடம் மது மயக்கம் கொண்டு, அதனால் மதி மதிமயக்கமும் அடைந்து, வீட்டில் இருக்கும் இளம் மனைவி-சிறு குழந்தைமீது அக்கறையற்று இருந்ததைக் கண்ட ஒரு புலவர், ஒரு பெண் குரங்கு தன் ஆண் துணையுடன் பேசி நியாயம் கேட்பதைப் போல பாடல் இயற்றியுள்ளார்.
“நீ என்னைப் பற்றியும் நம் குட்டிக் குரங்கைப் பற்றியும் அக்கறைக் கொள்ளாமல் இருப்பது ஒருபுறம் இருக்க, உன்னையும் நீ கெடுத்துக் கொள்கிறாய்; இந்த நிலை தொடர்ந்தால், ஒரு நாள் நீ அழிந்துவிடுவாய்; அந்தத் துயரைத் தாங்காமல் நானும் மடிந்து விடுவேன். அதன் பின் நம் குட்டிக் குரங்கு அனாதையாகிவிடும்” என்று மனைவிக் குரங்கு கணவக் குரங்கிடம் பேசுவதைப் போல அமைந்த அந்தப் பாடல் சங்க பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளது என்றார் தெய்வீகன்.
இதைப் போல, அந்தாதிப் பறவைகள் நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள், பெரும்பாலும் சமூக நியாயத்தைப் பேசுகின்றன. பொதுவாக, எழுத்தாளர்கள் துணிவும் நெஞ்சுரமும் மிக்கவர்கள் என்று தெய்வீகன் தன்னுரையில் குறிப்பிட்டார்.
இலக்கியம் என்பது காலக் கண்ணாடியைப் போன்றது. அந்தந்த காலத்தே ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களை உள்ளதை உள்ளபடியாகவோ அல்லது கற்பனைவழி ஒப்பனை சேர்த்தோ படைக்கப்படுவதுதான் இலக்கியம். இத்தகைய படைப்புகள், நாளைய சமுதாயத்திற்கு தகவலாகவோ அல்லது வழிகாட்டியாகவோ அமையக்கூடும். அதனால்தான் இலக்கியப் படைப்புகளை காலக் கண்ணாடி என்று அழைப்பது முன்னோர் வழக்கு.
அதேசமயம், பிறக்கின்ற அனைவரும் எழுதுவதில்லை; அதனால் எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் சமுதாயம் ஆதரிக்க வேண்டும்.
பினாங்கைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் கோலாலம்பூரில் தன் நூலை அறிமுகம் செய்யும் நேரத்தில், அதற்கு ஒரு நூறு பேராவது வந்து ஆதரவு தெரிவிக்காவிட்டால், எழுத்தாளர்களின் மனம் சோர்வடையும்; அவர்களின் படைப்பாற்றலும் முனைமழுங்கிப் போகும். எனவே, எழுத்தாளர்களை ஆதரிக்க வேண்டியது சமூகத்தின் கடப்பாடு என்றும் தெய்வீகன் பேசினார்.
மனித வள அமைச்சர் வ.சிவக்குமார், தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிருவாக இயக்குநரும் செயலருமான டத்தோ பா.சகாதேவன், மலேசிய திராவிடர்க் கழக பொதுச் செயலாளர் பொன்.வாசகம், வர்த்தக பிரமுகர் டத்தோஸ்ரீ சுந்தர ராஜு சோமு, அம்பாங் சுப்ரா, இலக்கிய படைப்பாளி பச்சை பாலன் உள்ளிட்ட பெருமக்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை ‘செந்தமிழ்ச் செல்வி’ பொன்.கோகிலம் வழிநடத்தினார்.
‘சிந்தனைத் திலகம்’ ராமதாஸ் மனோகரன் நூலாய்வுரை வழங்கினார்.