வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- மூர்க்கத்தனமாக மேலெழும்பும் ரணில் – ராஜபக்ஷ தரப்பு.
- தென்னிலங்கை சக்திகளுடன் தமிழர் தரப்பு ஜனாதிபதி தேர்தல்குறித்து இணைந்தால் என்ன?
இலங்கையின் இன விவகாரம் திர்வு காணப்படுமா?,இலங்கை அரசாங்கம் திர்வு காணுமா?,இந்திய அரசாங்கம் தீர்வு காணுமா?,சர்வதேச சமூகம் இன விவகாரத்துக்குத் தீர்வு காணுமா?,தமிழ் மக்கள் பெரு நம்பிக்கை வைத்துள்ள ஐ.நா அதனுடன் இணைந்த மனித உரிமைப்பேரவை தீர்வு காணுமா?, தமிழ்த் தலைமைகள் தீர்வினைக் கண்டு விடுவார்கள?, புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தீர்வினைக் காண்பார்கள?
தமிழர் விவகாரத்துடன் தொடர்புடைய மேற்குறிப்பிட்ட தரப்பினர் அனைவருமே பேசுவது தமிழர் விவகாரத்துக்கான தீர்வு பற்றியதுதான். ஆனால் தீர்வுதான் இன்று வரை வந்தபாடாக இல்லை.
மேலோட்டமாகப் பார்த்தால் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க இத்தனை தரப்புக்களா என மலைக்க வைக்கும்.
தமிழ்த் தலைமைகளும் மேற் கூறிய தரப்புக்களின் பினாமியாக நின்று தமிழ் மக்களை நம்பிக்கையுடன் கூட்டிச் சென்று நடுவழியில் கைவிட்டு பேசாமல் ஒழிந்து கொள்வர்.மீண்டும் எவராவது ஒரு தரப்பின் வாலைப் பிடித்துக் கொண்டு ஓடிக் களைத்து பாதியில் பயணத்தை முடித்துக் கொள்வர்.
- இலங்கையின் இன விவகாரம் திர்வு காணப்படுமா?
மொத்தத்தில் இனவிவகாரத்தக்கான தீர்வு காணப்படுமா என்ற தமிழ் மக்களின் வினாவுக்கு தற்போதைக்கு இல்லை என்ற பதிலைத்தான் திட்டவட்மாகக் கூறக் கூடியதாக இருக்கும். இது கசப்பான உண்மை. ஆனால் இதுதான் யதார்த்தம் என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
- உள்ளூராட்சி சபைகளே – அதிகாரப் பகிர்வு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.பல சுற்றுக்கள் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின்போது பேச்சுவார்த்தையின் பெறுபேறுகுறித்து இரு தரப்பினருமே கருத்துத் தெரிவிக்க முன்வரவில்லை. ஆனால் இந்தப் பேச்சு வார்த்தை தொடர்பாக ஆராய்ந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் – அரசதரப்பினருக்கும் இடையில் போச்சுவார்த்தை ஆரம்பமாகிய முதல் நாளிலேயே தீர்வுக்கு அரச தரப்பினர் முற்றுப் புள்ளியினை வைத்திருந்தனர். அதாவது அதிகாரப் பகிர்வு உள்ளூராட்சி சபைகளுக்கு மேலாக அமையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.மஹிந்த ராஜபக்ஷ அரசதரப்புக்கு அவ்வேளையில் பேச்சுவார்த்தை தேவைப்பட்டதால் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தினர்.பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் பேச்சுவார்த்தை ஒரு அங்குலம்தானும் நகரவில்லை என கூட்டமைப்பு அறிவித்தது. பேச்சுவார்த்தை ஒரு அங்குலம்தானும் நகராமல் எவ்வாறு பேச்சுவார்த்தை பல சுற்றுக்களைக் கடந்தது என்பதற்கான காரணத்துக்கான முடிச்சினை இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவிழ்க்கவில்லை.
- ஜனாதிபதியின் அண்மைய அறிவிப்பு
ஜனாதிபதி; 75வது சுதந்திரதின நிகழ்வுக்குள் இனவிவகாரத்துக்குத் தீர்வு காணப்படும் என்று அண்மையில உறுதியளித்தார்.அது நிறைவேற்றப்படவில்லை. இதே காலகட்டத்தில் ரணில் விக்ரமசிங்க 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தப் போவதாக அறிவித்தார். இதற்கு எதிராக பௌத்த பிக்குகள் வீதியில் இறங்கினர்.அவ் வேளையில் நாடாளுமன்றத்தில் பேசிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரப் பகிர்வுக்கு மாகாண சபைகளைக்கூட தீர்வாக முன்வைக்கவில்லை.உள்ளூராட்சி சபைகளையே தீர்வாக குறிப்பிட்டடார். மொத்தத்தில் சிங்களத் தலைமைகள் அதிகாரப் பகிர்வில் தீர்மானமிக்க முடிவுடன் உள்ளன என்பதையே காட்டுகின்றன.
இனவிவகாரத்தை நோக்கிய விடயத்தில் புவிசார் அரசியல் காத்திரமான அழுத்தத்தை பிரயோகிக்கும் நிலையில் இல்லை என்பதை தென்னிலங்கை சரியாகவேக் கணக்கிட்டு வைத்துள்ளது.
- இலங்கை அரசாங்கம் திர்வு காணுமா?
இனவிவகாரத்தக்கான தீர்வினை சிங்கள ஆளும் வர்க்கத்தைக் கொண்ட இலங்கை அரசாங்கங்கள் திர்வு காணுமா? என்ற கேள்விக்கும் இல்லை என்பதே பதிலாக இருக்கின்றது.
- சர்வதேச சமூகம் இன விவகாரத்துக்குத் தீர்வு காணுமா?
இலங்கையில் கால் பதித்த பெரும்பாலான வெளி நாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயரதிகாரிகள் ழுகக வாந சநஉழயசன ஆக விட்டுச் சென்ற பதிவுகளாக இருப்பது மாறி மாறி ஆட்சிபீடம் ஏறும் சிங்கள அரசாங்கங்கள் இனவிவகாரத்துக்கான தீர்வினை வழங்கப் போவதில்லை என்பதுதான். ஆனால் இதில் விசித்திரம் என்னவெனில் இவர்கள் சார்ந்த நாடுகள் இனவிவகாரத்திற்குத் தீர்வு காணப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுதான்.தூதரக அதிகாரிகளின் தனிப்பட்ட கருத்தக்கள் ழுகக வாந சநஉழயசன இருந்தபோதும் அதிகாரபூர்வமாக இதனை கூறும் நிலையில் அவர்கள் இல்லை என்பதுதான்.
அதேவேளையில் இந்தியா உற்பட சாவதேச நாடுகள் பல தமிழ் மக்கள் பிரிந்து போவதையோ தனி நாடு அமைத்துக் கொள்வதையோ அனுமதிக்கும் நிலையில் இல்லை.ஏனெனில் இந்தியா உற்பட சர்வதேச நாடுகளின் நலன்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் தீனிபோடும் சக்தி தமிழ் மக்களிடம் இல்லை.அத்தகைய நிலையை கட்டி எழுப்பக் கூடிய வல்லமையை தமிழர்தரப்பு கட்டி எழப்பத் தவறியுள்ளது.தமிழர் தரப்பு அத்தகைய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளும் இராஜதந்திர நகர்வுகளிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தபோதும் தமிழ் தலைமைகளிடையே காணப்படும் ஒற்றுமை இன்மை அதற்குத் தடைக் கல்லாக இருக்கின்றது..
- சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை வீழ்த்த எந்தப் பேயுடனும் கூட்டுச்சேர்வர்.
சிங்கள ஆட்சியாளர்களைப் பொருத்து தமிழர்களை வீழ்த்த எந்தப் பேயுடனும் கூட்டுச்சேர அவர்கள் தயாராக இருக்கின்றனர்..மறுபுறம் அந்தப் பேய்களிடம் இருந்து எவ்வாறு தப்பிக் கொள்வது என்ற இராஜதந்திர காய் நகர்த்தலிலும் அவர்கள் கைதேர்ந்தவர்கள்.
அதேவேளையில் இந்தியா உற்பட சர்வதேச சக்திகளுக்கு சிங்கள ஆட்சியாளர்களும் பெரும்பான்மை இன சிங்கள மக்களுமே தேவை.அவர்களை முழமையாகப் பகைத்துக் கொள்ள இந்தச் சக்திகள் விரும்புவதில்லை.
ஆனால் தமிழர் விவகாரம் மற்றும் தமிழர்கள் மீதான மனித உரிமைமீறல்கள் என்பன அந்தச் சக்திகளுக்கு தேவை.தமிழர் விவகாரத்தை வைத்து இலங்கை அரசுக்குக் கடிவாளம் இட்டு தமது நலன் நோக்கிய பாதைக்கு இலங்கை அரசை திசைதிருப்பிக் கொள்கின்றன.
இது இலங்கை அரசுக்கு நன்றாகவேத் தெரியும்.எனவேதான் சர்வதேசத்துடன் முரண்படுவதும் திமிறிக் கொண்டு திசைமாறிப்போவதும் பிறகு அடங்கிப் போவதும் காலம் காலமாக நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இலங்கை அரசாங்கம் தமிழர் விவகாரத்தில் எவ்வித சமரசத்திற்கும் தயார் இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதுடன் பல்வேறு வழிகளில் இந்தியா உற்பட சர்வதேச சக்திகளுக்கு மிகத் தெளிவாகவே உணர்த்தியும் வருகின்றது.
1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்ட 13வது மாகாண சபை சட்டத்தை இன்றுவரை முழமையாக நிறைவேற்றாது இழுத்தடித்து வருவதில் இலங்கை அரசு வெற்றி கண்டு வருகின்றது. இந்தியா கடந்த 36 வருடங்களாக உடன்படிக்கைபற்றியும் 13வது சட்ட திருத்தம்குறித்தும் பேசி வருகின்றபோதும் இதனால் தமிழ் மக்களுக்கு நன்மை விளைந்ததாக ஏதும் இல்லை.
இந்தியாவைப் பொருத்து 1987 உடின்படிக்கையை சாகடிக்காது வைத்திருக்க வேண்டும். அதேவேளையில் தமிழர் விவகாரத்தையும் வீரியத்தடன்; வைத்திருக்க வேண்டும் என்பதுதான.இந்த இருவிடயங்களையும் இந்தியா 1987 இல் இருந்து வெற்றிகரமாக கடந்த 36 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றது.
தமிழ் மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள ஐ.நா அதனுடன் இணைந்த மனித உரிமைப்பேரவை தீர்வு காணுமா? என்பதற்குப் பதிலாகக் கூறுவதாயின் இந்த இரு அமைப்புக்களும் தமிழர்களையும் தமிழர் விவகாரத்தையும் வைத்து குரங்கு வித்தை காட்டி வருகின்றது என்பதையே இன்றுவரை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
அமெரிக்கா உற்பட மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதே ஐ.நா மற்றும் அதனுடன் இணைந்த மனித உரிமைப்பேரவையின் செயற்பாடுகளாகும்.
- தமிழ்த் தலைமைகள் தீர்வினைக் கண்டு விடுவார்களா?
தமிழ்த் தலைமைகள் கனவில் கூட இதனைச் செய்யும் நிலையில் இல்லை. வடக்குக் கிழக்கில் தற்போது களத்தில் நிற்கும் தமிழ்த் தலைமைகளும் தமிழ்க் கட்சிகளும் இன விவகாரத்துக்கான தீர்வுகுறித்த திர்வுப்பொதி இன்றி ‘தீர்வு‘ குறித்து பேசிவருகின்றனர். பெரும்பாலான தமிழ்த் தலைமைகளிடம் அர்ப்பணிப்பு இல்லை.
- சட்டத்தரணிகளின் ‘சட்டத்தரணி அரசியல்‘.
தமிழர் அரசியலை தொடர்ந்தம் சட்டத்தரணிகளே தமது கைகளுக்குள் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த சட்டத்தரணிகளின் அரசியல் சிங்களத் தலைவர்களிடம் தோற்றுப் போனதாகவே வரலாராக இருக்கின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நீதிமன்றங்களில் வெற்றிகரமாக வாதங்கள் புரிந்து வெற்றி ஈட்டியபோதிலும் சிங்களத் தலைமைத்தவங்களின் இராஜதந்திரத்திற்கு முன்னால் தோற்றுப்போய் மண்டியிட்டவர்களாகவே உள்ளனர்.
ஏனெனில் சிங்களத் தலைவர்கள் அரசியலை ‘அரசியலாக‘ச் செய்கின்றனர்.தமிழ் சட்டத்தரணிகள் ‘சட்டத்தரணி அரசியலையே‘ செய்கின்றனர்.அதாவது சட்டத்தரணி போன்று அரசியலையும் தொழிலாகச் செய்கின்றனர். ஒருசிலர் இதற்கு விதிவிலக்காக இருந்தபோதும் அவ்வாறானவர்களை கட்சிகள் ஓரம்கட்டி வைத்துள்ளன.
- ஆறாவது திருத்தச் சட்டம்
6வது திருத்தச் சட்டத்தை மீறி தமிழ்த் தலைமைகளால் செயற்பட முடியாது.அப்படி இருந்தும் இனவிவகாரத்துக்குத் தீர்வு காண்பதாகக் கூறி வாக்கு வேட்டையில் இறங்கி வெற்றி பெற்று நாடாளுமன்ற மாகாண சபை கதிரைகளில் அமர்ந்துவிடுகின்றனர்.
சிறுபான்மைக் கட்சிகள் இலங்கையில் சீனா கால்பதித்தால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அக்கறை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியா பெரிய வல்லரசு.தனது பாதுகாப்பை இந்தியாவுக்குப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியும். தமிழ்த் தலைமைகளும் தமிழ் கட்சிகளும் இந்தியப் பாதகாப்பில் அக்கறை செலுத்துவதைவிடுத்து தமிழர் விவகாரத்துக்கான தீர்வு நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது.
சீனப் புரட்சிக்காகவும் கியூபாப் புரட்சிக்காகவும் போர்க் கொடி துhக்கி தமிழர்கள் வீதியில் இறங்கிய காலம் ஒன்று இருந்தது.தற்போது அந்த நாடுகள் தமிழ் மக்களுக்காக நிற்கின்றனவா? முள்ளி வாய்க்காலில் தமிழ் மக்களைக் கொன்றொழிக்க துணை நின்றதை ஏனோ தமிழ்த் தலைமைகளும் தமிழ்க் கட்சிகளும் மறந்து நிற்கின்றன.அவர்களின் பூலோக அரசியல் நிகழ்ச்சி நிரழ்களுக்குள் தமிழர் விவகாரம் பகடைக்காயாக உருண்டு கொண்டிருக்கின்றது.
புவிசார் அரசியலைத் தமக்குச் சார்பாக ஆக்கிக் கொள்ளும் நிலையில் திறன் பெற்றதாக தமிழ்த் தலைமைகளோ புலம்பெயர் அமைப்புக்களோ இல்லை என்பதும் இலங்கையின் ஆளும் வர்க்கத்திற்குத் தெரியும். அதேவேளையில் தமிழ்த் தலைமைகளிடமும் புலம்பெயர் அமைப்பக்களிடமும் நிலவுகின்ற ஒற்றுமை இன்மை இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு சாதகமான விடயமாக உள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இலங்கை அரசு சமஷடி தீர்வுவரை கீழிறங்கி வந்தது.தற்போது அவ்வாறான ஒரு சக்திமிக்க அமைப்பு தமிழர்களிடையே இல்லை என்பதும் இலங்கை அரசுக்குச் சாதகமான விடயமாகும்.
இதனை நான் குறிப்பிடுவதானது தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷ நோக்கிய பயணத்தில் தோற்றுவிடுவர் என்பது அர்த்தமில்லை.தமது அரசியல் நோக்கிய பயணத்தை கை விட வேண்டுமென்பதும் அர்த்தமில்லை.ஏனெனில் தமிழ் மக்களின் மனங்களில் எரிந்து கொண்டிருக்கும் அரசியல் அபிலாஷ என்ற தீ ,அதாவது விடுதலைத் தீ இலகுவில் அணைந்துவிடக் கூடியதல்ல.
ஆனால் தமிழ் மக்கள் ஏந்தியுள்ள தமிழ்த்தேசிய தீப்பந்தத்தை மேற் கூறிய சக்திகள் தத்தமது சுய நலன்களுக்காக திசையறியா திசை நோக்கி இழுத்துச் செல்கின்றன.அதுதான் உண்மை.
மொத்தத்தில் இலங்கை அரசியல் கள நிலைவரங்களையும் சர்வதேச அரசியலையும் கையாளக்கூடிய தலைமை தாயகத்திலும் பலம்பெயர் தேசங்களிலும் இணைத் தலைமைகளாக தோற்றம் பெற்றாக வேண்டும். தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வுடன்கூடிய சுயாட்சியுடன் இலங்கையில் வாழ இது வழிவகுக்கும்.
- தென்னிலங்கை கள நிலைவரம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை நோக்கி நகர்கின்றார் என்பது வெளிப்படையான உண்மை. அதற்கேற்றாற்போல் தனக்கு எதிராக இலங்கை அரசியலில் பலமிக்க அரசியல் சக்திகள் மேலெழுந்துவிடாதவாறு காய்களை நகர்த்தி வருகின்றார்.
குறிப்பாக மீண்டும் ஒரு ‘அரகலய‘ எழுந்துவிடாதவாறு ரணில் – ராஜபக்ஷ ஆளும் அணியினர் மிகவும் கவனமாகச் செயற்படுகின்றனர்.
.• நெப்பொலியன் தோன்றவில்லை. ரணிலே மீண்டு வந்துள்ளார்.
ஆனால் ‘அரகலய‘ எழுச்சிக்கு தலைமையேற்று வழிநடத்த நெப்பொலியன் போன்றதொரு தலைவனைக் காண முடியவில்லை.. ரணிலே மீண்டு வந்துள்ளார் ‘அரகலய ‘எழுச்சியும் வந்த வேகத்தில் மறைந்துவிட்டது.
‘ஆரகலய‘ எழுச்சி ஏற்பட்டபோது சிங்கள ஆளும் வர்க்கம் ஆட்டம் கண்டது என்பது உண்மையே. ஆனால் ஒரு சில வாரங்களுக்குள்ளேயே சிங்கள ஆளும் வர்க்கம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டதுடன் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையை ஏற்று தம்மை இலங்கை அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டது.
சிங்கள ஆளும் வர்க்கத்தைக் காப்பாற்ற ‘அரகலயா‘க்களுக்கு எதிரான மாற்று அரசியலுக்கு அரசியலில் முகவரி இழந்து நின்ற ரணில் விக்ரமசிங்கவே மேலெழுந்துள்ளார்.
- தென்னிலங்கையில் ‘தோற்றுவிக்கப்பட்ட அரசியல் சூறாவளி‘
அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சஜித் அணியினருக்கும் கொள்கைரீதியில் பெரிதளவான வேறுபாடுகள் இல்லை. இரண்டு அணியினருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணில் விக்ரமசிங்க என்ற தனிமனிதன் இருக்கும்வரை அக்கட்சிக்குள் தமக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் இல்லை என்ற நிலையிலும் ஐ.தே.கவுக்கு எதிர்காலமே இல்லை என்ற நிலையிலுமே சஜித் தலைமையில் ஒருபகுதியினர் பிரிந்தனர். பிரிந்த அணியினரில் ஒரு பகுதியினர் தற்போது ரணில் விக்ரமசிங்க தலைமையில் இணைய முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மாற்றத்தை நோக்கிய ‘அரகலயைத்‘ தோற்கடித்து சிங்கள ஆளும் வர்க்கம் ஒரு வெற்றியை இலங்கை அரசியலில் பதிவு செய்து வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது.
- ஊடகங்கள் மாறி நிற்கின்றன.
‘அரகலவை ‘துதிபாடிக் கொண்டிருந்த தென்னிலங்கை ஊடகங்களில் தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கினால் என்ன என்ற கருத்தோட்டம் முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது. தென்னிலங்கை ஊடகங்களின் ஆசிரியர் தலையங்கங்களும் கட்டுரைகளும் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தும் எழுத்துக்களும் அதிகமாக ரணில் விக்ரமசிங்க சார்பாகவே இடம்பிடித்துள்ளன.
கடந்த வருடம் தொடங்கிய ‘அரகலைக்கு‘ எதிராக ரணில் – ராஜபக்ஷ அணியினர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தொடங்கியுள்ள ‘பொருளாதார மீட்சி‘ வெற்றியை நோக்கிச் செல்கின்றது.
ஏனெனில் தென்னிலங்கை அரசியல் களத்தில் தற்போது நிற்கும் கட்சிகள் பொருளாதார மீட்சிக்கும்‘ அரகலய சிஸ்டம் சேன்ஜூ‘க்கும் மக்கள் ஆணை கோரி நிற்கின்றனர்.ஆனால் தற்போதைக்கு ‘பொருளாதார மீட்சியே‘ தேவை. பொருளாதார மீட்சிக்கு மக்கள் ஆணை தேவையில்லை என்ற பரப்புரைகள் பலமடைந்து வருகின்றன.
- தேர்தலுக்கான 10 பில்லியன்
‘ மக்கள் ஆணை‘ பெறுவதற்காக ஒதுக்கப்படும் பத்து பில்லியன் நிதியினை
துன்பப்படும் குழந்தைகளுக்கு உணவளிக்க பயன்படுத்தப்படலாம். மக்கள் கருத்துக் கணிப்புகளாலும், அரசியல்வாதிகளாலும் சோர்ந்து போயுள்ளனர். ஸ்திரத்தன்மை நிலைபெறும் வரை முற்போக்கு சக்திகளுக்கிடையிலான ஒற்றுமையை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
- தொங்கு பாராளுமன்றம்
இந்த நிலையில் தேர்தல் வந்தால் தொங்கு பாராளுமன்றம் மேலும் குழப்பத்தையும் அராஜகத்தையும் உருவாக்கும் என்ற கருத்துக்களும் விதைக்கப்படுகின்றன.
அரகலய போராட்டத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள ஜே.வி.பியின் எழுச்சியை அதாவது இலங்கை அரசியலில் ஜே.வி.பி சக்திமிக்க அரசியல் சக்தியாக எழுவதை விரும்பாத போக்கினையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
ஜே.வி.பியிடம் பொருளாதார நோக்கோ அல்லது நாட்டுக்கான சிறந்த அரசியல் நோக்கினையோ மக்கள் முன் வைக்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இதே குற்றச்சாட்டு சஜித் அணியினர் மீதும் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்..
- ரணில் ஆரம்பித்துள்ள அரகலயவுக்கு எதிரான பொருளாதார மீட்சி அலைக்குள் அரகலைவை ஆரம்பித்த மக்களும் பின் தள்ளப்பட்டுவிட்டனர்.
- அரகல போராட்டத்திற்குள் குளிர் காய்ந்து அரசியல் அறுவடைக்காகக் காத்திருந்த சஜித் மற்றும் ஜேவிபி அணியினரும் முடங்கிப்போய் நிற்கின்றனர்.
- ராஜபக்ஷக்களின் ஊழல்
நல்லாட்சி ஆட்சி அமைவதற்கு முன் ராஜபக்ஷக்களின் ஊழல்குறித்து ஐ.தே.க.வினரால் கூடுதலாகப் பேசப்பட்டது.ஆனால் நல்லாட்சியை அமைத்தவுடன் ஊழல் குறித்த பேச்சுக்களும் இல்லை ஊழல்களைக் கண்டறிந்ததாகவும் இல்லை.தற்போத ராஜபக்ஷ அணியினர் தமது ஊழல்களை நிரூபிக்குமாறு பகிரங்கமாக சவால்விடுகின்றனர்.
ரணில் – ராஜபக்ஷக்களின் நகர்வுகளை தடுத்து நிறுத்தும் மக்கள் கருத்துக் கணிப்பாக அமைய உள்ள தேர்தல்களையும் அனுமதிக்கும் நிலையில் ரணில் – ராஜபக்ஷதரப்புதரப்பு இல்லை.
நாடாளுமன்றத்திலும் பொதுவெளியிலும் எதிர்த்தரப்பினர் மேற் கொள்கின்ற பரப்புரைகளும் ரணில் – ராஜபக்ஷ அணியினரை தடுத்து நிறுத்தும் சக்திபடைத்தவைகளாக இல்லை.
அரகலய ,சஜித் அணி ,ஜேவிபி என மூன்றாகப் பிரிந்து நின்று போராடிக் கொண்டிருக்கின்றன. இதற்கு மாறாக ரணில் – ராஜபக்ஷ அணியினர் ஓரணியாக செயற்படுகின்றனர்.
மொத்தத்தில் சிங்கள ஆளும் வர்க்கம் குறிப்பாக ரணில் – ராஜபக்ஷ அணியினர் மிகவும் மூர்க்கத்தனமான அரசியல் விளையாட்டுக்களுடன் இலங்கை அரசியலில் மேலெழுந்து வருகின்றனர்.
- தமிழ் மக்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றனர்?
அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி ரணில் விக்ரமசிங்கவின் இந்த நகர்வை தமிழ் மக்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றனர். பொருளாதார மீட்சிக்கு தானே ‘மீட்பர்‘ என்ற பிம்பத்தை தென்னிலங்கையில் கட்டி எழுப்பும் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களின் ‘மீட்பரும்‘ தாமே என்ற பாணியில் காய்களை நகர்த்தி வருகின்றார்.
தற்போது தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாகத் தோற்றுவிக்கப்படுகின்ற பிரச்சனைகள் ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தலை நோக்கிய நகர்வினை பலப்படுத்துவதற்கான யுக்தியாகவே உள்ளது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கின்றது.
காணி அபகரிப்பு ,கோவில் இடிப்பு ,தொல்லியல் திணைக்களத்தின் தமிழர் பிரதேசங்களில் பௌத்த எச்சங்களை தேடும் வேட்டை, சிங்களத் தரப்பின் நீதிமன்ற மீறல் ,சிங்களக் குடியேற்றம் என தொடரும் நிகழ்வுகள் தமிழ் மக்களைப் பதற்றத்திற்குள் தள்ளி தீர்வினைத்தரும் மீட்பராக ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் முன்வந்து நிற்கப் போகின்றார்.
- ரணில் என்ற “மாய மான்” காட்டும் ‘தீர்வு ‘என்ற கானல் நீர்!
அந்தவகையில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் “மீட்பராக அவதாரம்” எடுத்து ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வாக்கு வேட்டைஆடப் போகின்றார்.
75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குள் தமிழர் விவகாரத்திற்கு தீர்வு என தமிழ் மக்களின் காதுகளில் பூ சுற்றிய ரணில் விக்ரமசிங்க 13ஐ கொடுப்பதாகக் கூறி அதற்கெதிராக பௌத்த பிக்குகளை தென்னிலங்கையில் களம் இறக்கி பிறகு 13 பற்றி போசாதுவிட்டார். ஆனால் அடிக்கடி இன விவகாரத்துக்கான திர்வுகுறித்து பேசுவதை நிறுத்தவில்லை. பொருளாதார மீட்சியும் இன விவகாரத்துக்கான தீர்வும் சமாந்தரமாக நடைபெற வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க அடிக்கடி குறிப்பிடுகின்றார்.
இதுதான் யதார்த்தம்.இத்தகைய யதார்த்த வார்த்தைககளையம் வாக்குறுதிகளையும் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் சிங்களத் தலைமைகளிடம் இருந்து நிறையவே கேட்டிருக்கின்றனர். ஏமாந்தும் போயுள்ளனர் என்பது வரலாறு.
பொருளாதார மீட்சிக்கான வரைபடத்தை ஹவாட் பல்கலைக் கழக சமூகத்துக்கான உரையில் ரணில் விக்ரமசிங்க மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். அதனை அடைந்து கொள்வதில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறக் கூடும்.ஆனால் அந்த வரைபடத்தில் இன விவகாரத்துக்கான தீர்வு இடம்பெறவில்லை.
ஆனால் தனது வெற்றிக்கு தமிழ் மக்களின் வாக்குகள் தேவை என்பதில் ரணில் விக்ரமசிங்க குறியாகவும் தெளிவாகவும் இருக்கின்றார்.
தமிழ்த் தலைமைகளும் சஜித் அணியில் உள்ள சிறுபான்மைக் கட்சிகளும் மனம்மாறி ரணில் அணியில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
- வாக்குச் சீட்டுக்கள் மக்களின் கைகளில்.
ஆனால் தமிழ் மக்கள் எத்தகைய முடிவினை மேற் கொள்ளப் போகின்றனர்.எந்தத் தேர்தல் என்றாலும் வாக்குச் சீட்டுக்கள் மக்களின் கைகளிலேயே உள்ளன.
ரணில் விக்கிரமசிங்க பேசுகின்ற இன விவகாரத்துக்கான தீர்வு என்பது தேர்தலுடன் காற்றோடு காற்றாகக் கலைந்து போய்விடும். எனவே தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தல்குறித்து தென்னிலங்கையின் மாற்று அணியினருடன் அரசியல் பேரத்தில் இறங்கினால் என்ன? குறிப்பாக சிவில் சமூகங்கள் பல்கலைக் கழக சமூகம் என்பன முக்கிய பாத்திரத்தை ஏற்று களத்தில் இறங்க வேண்டும்.
தமிழ்த் தலைமைகள் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளன.இன்றைய சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் அவர்களுடன் இணைந்த சிவில் சமூகங்கள் பல்கலைக் கழக சமூகங்கள் என்பன தவறவிடக் கூடாது.
எனினும் ஜனாதிபதித் தேர்தல் 2024 ஆம் ஆண்டிலேயே நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இடைப்பட்ட இந்த காலத்தில் அரசியல் சூழ்நிலை ரணில் விக்ரமசிங்கவுக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஜனாதிபதிக்கு இருக்கலாம்.
ஆனால் ராஜபக்ஷதரப்பின் அரசியல் இருப்புக்கு ரணில் விக்ரமசிங்கவின் நகர்வு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும் அவர்கள் கவனம் செலுத்துவர்.அந்தவகையில் ரணில் – ராஜபக்ஷதரப்பின் “தேனிலவு அரசியலின்” எதிர்காலம் தடம் மாறலாம்..அதே வேளையில் ரணில் – ராஜபக்ஷ அணியினார் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் களம் இறங்குவார்களா என்பதும் கேள்விக்குறிய விடயமாகும்.
எது எப்படி இருந்தபோதும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமாயின் அதனை எதிர் கொள்ளும் வியூகங்களை வகுத்துக் கொள்வது தமிழ் மக்களின் கடைமையாகும்