இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் கடந்த சில போட்டிகளில் ரன் குவிக்க தவறிய நிலையில் அவர் தொடர்ந்து டி20 போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக நீடித்து வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் சூர்ய குமார் ஆட்டமிழந்தார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், அவர் இடம்பெற்றுள்ள மும்பை அணிக்காக அதிக எண்ணிக்கையில் அவர் ரன் சேர்க்கவில்லை. இருப்பினும் ஒட்டுமொத்த கணக்கீட்டின்படி 906 புள்ளிகளுடன் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
ஐசிசி தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகம்மது ரிஸ்வான் 811 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும், பாபர் ஆசம் 755 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணியின் எய்டன் மார்க்ரம் 748 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திலும், நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே 745 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் விராட் கோலி தொடர்ந்து 15 ஆவது இடத்தை தக்க வைத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சூர்ய குமார் 15, 1 மற்றும் 0 ரன்களை கடந்த 3 போட்டிகளில் எடுத்திருக்கிறார். பவுலர்களில் ஆப்கன் அணியின் ரஷித் கான் முதலிடத்திலும், பசல்ஹக் பரூக்கி 2 ஆவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசல்வுட் 3 ஆவது இடத்திலும், இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா 4 ஆவது இடத்திலும், மஹீஷ் தீக்சனா 5 ஆவது இடத்திலும் உள்ளனர். அணிகளைப் பொருத்தவரை இந்தியா முதலிடத்திலும் இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. ஆல்ரவுண்டர்கள் வரிசையில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் முதலிடத்திலும், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ஆவது இடத்திலும் உள்ளனர்.