நடராசா லோகதயாளன்
இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியாக உள்ள நிலையில் அரசு அதிலிருந்து மீள்வதற்கு எதையும் செய்ய தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. எப்படியாவது நாட்டிற்குள் டொலர்கள் வந்தால் சரி என்று அரசு நினைப்பதை அதன் ‘புதிய சிந்தனையிலிருந்து’ தெரிந்து கொள்ளலாம்.
தேயிலை, ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்ற இலங்கை இப்போது குரங்குகளை ஏற்றுமதி செய்து புதியதோர் வர்த்தகப் பாதையை திறக்கவுள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அவை விவசாயத்திற்கு பெரும் பாதகங்களை ஏற்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே. அதற்கு அப்பாற்பட்டு வயல்கள், காடுகள், தோப்புகள், தோட்டங்கள் ஆகிய இடங்களில் பணியாற்றுபவர்கள் குரங்குக்கடிகளிற்கும் ஆளாகின்றனர்.
அதேவேளை, இலங்கையின் நெருங்கிய கூட்டாளியாக இருக்கும் சீனா தமது நாட்டின் தேவைகளிற்கு இலங்கையிலிருந்து குரங்குகளை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளது. தமது நாட்டில் மிருகக்காட்சிசாலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே இந்த குரங்குகள் அங்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் சீன தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், இந்த குரங்கு வர்த்தக திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கபடும் நன்மைகள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
முதற்கட்டமாக இலங்கையில் இருந்து ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு வழங்குவதற்கான உரையாடல் இடம்பெற்றுள்ளது.
விவசாயம் மற்றும் பொதுமக்களிற்கு குரங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவே குரங்கு ஏற்றுமதி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதனால் நாட்டில் பெருந்தொகையில் காணப்படும் குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று அரசு நம்புகிறது.
விசேட கலந்துரையாடலின் படி இலங்கை குரங்குகளை வெளிநாட்டுக்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இக்குழு குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப் பரிந்துரை செய்தால் குரங்குகள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அனுமதி விரைவில் கிடைக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேநேரம் இலங்கையின் 25 மாவட்டங்களில் இன்று 21 மாவட்டங்களில் குரங்களின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக தொடர்ச்சியாக முறையிடப்படுவதோடு வடக்கு கிழக்கின் 8 மாவட்டமும் முழுமையாக குரங்குகளின் தாக்குதலினால் பெரும் இழப்பைச் சந்திப்பது வருடாந்த தரவுகள் மற்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலம் மற்றும் கடல் சீனாவிற்கு வழங்கிய நிலையில் தற்போது இலங்கையில் இருந்து குரங்குகளும் சீனாவிற்கு ஏற்றுமதியாகவுள்ளது. டொலரை ஈட்ட கடல் அட்டை பண்ணை அமைத்தது போன்று எதிர்காலத்தில் குரங்கு பண்ணையும. அமைக்கப்படலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. அதோடு இலங்கை அரசு சீனாவிடம் பெற்ற கடனை அடைப்பதற்கு குரங்குடன் தெரு நாய்களையும் ஏற்றும் நிலையும் ஏற்படலாம் அதற்கும் பண்ணைகள் அமைக்க எமது அமைச்சர்கள் திட்டம் தயாரிப்பார்கள் அதனால் அந்தியச் செலவாணி ஈட்டப்படுவதாகவே கூறுவர் என்று மக்கள் இப்போதே பகடியாகப் பேசத் தொடங்கிவிட்டனர்.
அதேவேளை இன்று இலங்கை முழுவதும் விவசாயிகளிற்கு பெரும் பிரச்சணைகளில் குரங்கு, மயில், யானை மற்றும் தெரு நாய்களின் பிரச்சணையும் பிரதான பங்கை வகிப்பதனால் குரங்கு மற்றும் நாய் எனபவற்றை ஏற்றுமதி செய்வதனை பலரும் ஆதரித்து ஏற்றுக்கொள்ளும் நிலையே காணப்படுன்றது.
உண்மையில் இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மட்டுமன்றி பொலன்நறுவை, மொனறாகலை, புத்தளம் மாவட்டங்களில் இந்த குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளன, ஏனைய மாவட்டங்களிலும் இந்த நிலை ஏற்படவே குரங்கு, மயில் போன்றவற்றை சுடுவதற்கு அனுமதிக்கும் முடிவிற்கு அரசு சென்றது. இருந்தபோதும் அவற்றை சுட்டுக்கொல்லாது இன்னுமோர் இடத்திற்கு அனுப்புவதை பலரும் வரவேற்கின்றனர். மிதமிஞ்சிய பொருளால் வருமானத்தை ஈட்டுவதில் தவறும் கிடையாது என்றும் வாதிடப்படுகிறது.
குரங்குகள் தென்னை, முருங்கை, பப்பாசி முதல் விவசாய நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியதோடு குடியிருப்புக்களை அழித்து சிறுவர்களின் உயிர்களிற்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இதேநேரம் வயல்களில் யானையால் ஏற்படும் சேதங்களிற்கு வழங்கப்படும் இழப்பீடு குரங்கினால் ஏற்பட்டால் கிடையாது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி இரணைமடு விவசாயிகள் சம்மேளணத்தின் செயலாளர் மு.சிவமோகனிடம் பேசினேன்”
”குரங்கினால் பெரும் சேதங்களை சந்திப்பவர்கள் விவசாயிகள்தான், சிறுதாணிய உற்பத்தி இன்று கைவிடப்படுவதற்கு மிக முக்கியமாக குரங்கு, மயில் மற்றும் பன்றிகளே காரணமாக உள்ளன. இதேநேரம் தென்னையின் அழிவும் பாரிய அளவில் காணப்படுகின்றது. சீனாவிற்கு ஒரு லட்சம் குரங்குகள் என்பது மிகச் சொற்பமானது. முடிந்தால் 10 லட்சம் குரங்குகளையேனும் ஏற்றுமதி செய்தால் அவையும் (குரங்குகளும்) உயிர்வாழும் நாமும் உயிர்வாழும் நிலை ஏற்படும். அரசு இதற்கு காலத்தை இழுத்தடிக்காமல் உடனடியாக செயலில் இறங்க வேண்டும்”
இதேநேரம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் பேராசிரியர் த.ஈஸ்வரமோகனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ””
”இராணுவம், மக்கள், பெரும் முதலாளிகள் காடுகளை அழித்தமையினால் மக்கள் வாழ்விடங்களிற்குள் வந்த குரங்குகள் மீளச்செல்வது குறைவு. குறிப்பாக கிளிநொச்சியின் கரையோரங்களில் யுத்தம் இடம்பெற்றபோது சாவகச்சேரியிலும் மக்கள் இல்லாத காரணத்தால் குரங்குகள் அதிகளவில் ஊடுருவிது. அவை இன்று பெருகியுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஊருக்குள் வந்த குரங்கை பிடித்து காடுகளிலேயே விடும் சட்டமே இதுவரை காணப்பட்டது. ஓரு சில விலங்குகள் எனில் அது பொருத்தமான செயல்பாடு. இன்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதனால் அதனை மேற்கொள்ளவும் பொருளாதார நெருக்கடியும் காணப்படும். நாட்டிற்குள் ஆடு, மாடு, கோழி தேவையெனில் இறக்குமதி செய்யும்போது குரங்கினை சீனா இறக்கவும் இலங்கை ஏற்றுமதி செய்யவும் தீர்மானித்தால் அதில் தவறு கிடையாது”.
சீனா உண்மையில் பல புதிய, புதிய நகரங்களை உருவாக்குவதோடு பல பூங்காவையும் உருவாக்குவதாகவே தரவுகள் கூறுகின்றன. குரங்கினால் இலங்கை விவசாயிகள் படும் பாடு உண்மையில் கட்டுப்படுத்த முடியவில்லை என்று மேலும் கூறினார்.
”நகரின் மத்தியில்இருப்போர் காருண்யம், மனிதாபிமானம் என எதிர்க்கவும் கூடும் ஆனால் மாங்காய், தேங்காய், முருங்கையில் இருந்து இந்த குரங்குகளினால் அழிவையும் இழப்பையும் சந்திப்பவர்களே இதன் கருத்தைக்கூற 100 வீத உரிமை கொண்டவராக காணப்படுவார். குரங்கை ஏற்றுமதி எனப் பார்க்க வேண்டும் அது சீனாவிற்கு ஏற்றுமதியா எந்த நாட்டிற்கு ஏற்றுமதி என்பதற்கு அப்பால் அதனை ஏற்றலாமா ஏற்றக்கூடாதா எனப் பார்த்தால் ஏற்றுவதன் மூலமே தற்போது அதிக நன்மை பயக்கும் விடயமாகவே காணப்படுகின்றது”
1960ஆம் ஆண்டளவில் நாட்டின் தேவை கருதியும் சும்மா இருந்த நீர் நிலைகளில் தண்ணீர் பயன்பாட்டிற்கு அப்பால் அங்கே வேறு இலாபமும் அடைவதோடு நுளம்பு பெருக்கத்தையும் கட்டுப்படுத்த யப்பான் மீன் எனப்படும் திலாப்பியா வகை மீன் யப்பானில் அன்று அதிகமாக இருந்தபோது எமக்கு தேவை என்பதனால் கொண்டு வந்தனர் அது உலக நியதியும் ஆகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பரந்துபட்டளவில் இதற்கு ஆதரவு இருப்பதாவே தெரிகிறது. பாண்டியன்குளத்தகச் சேர்ந்த இளங்கோ கருத்து தெரிவிக்கையில் எமது பகுதி அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் குரங்கினை ஏற்றுமதி செய்வதென்பது “நாட்டின் பொருளாதாரத்தை ஈட்ட மனிதரால் முடியாமல்போக மிருகங்களை வைத்து ஈட்ட முயற்சிக்கப்படுகின்றது” குரங்கை ஏற்றுமதி செ்வதனால் அந்த இனம் முழுமையாக அழவடையும் என நம்பவில்லை. இதனால் ஓரளவேனும் கட்டுப்பட்டால் எமக்கு மகிழ்ச்சிதான் என்றார்.
யாழ். மாவட்ட கமக்கார அமைப்புக்களின் தலைவர் க. தியாகலிங்கமும் இதில் உடன்படுகிறார்.
”விவசாய அமைச்சரிடம் நாம் இதனை பல தடவை கோரினோம். அதாவது குரங்கு, மயில், பன்றிகளால் விவசாயிகளான நாம் படும் சிரமத்தை பல தடவை கோரினோம் இதனால் ஏற்பட்ட பாதிப்பு யாழில் மட்டும் பயித்தை, தென்னை, நெல் அழிவு வருடாந்தம் 90 ஆயிரம் தேங்காயை யாழ்ப்பாணத்தில் இழக்கின்றோம். இதில் தென்மராட்சியே அதிகம் பாதிக்கின்றது இங்கே வருடாந்தம் 90 ஆயிரம் தேங்காயை யாழ்ப்பாணம் இழக்கின்றது எனில் நாடு பூராகவும் எவ்வளவு இழக்கப்படும். இதேபோன்று வடக்கில் வருடாந்தம் சுமார் 15 ஆயிரம் கிலோ முருங்கை, 5 ஆயரம் கிலோ பயிற்றையை இந்த குரங்குகள் நாசமாக்கின்றது. இவ்வாறு குரங்குகளை சீனாவிற்கு ஏற்றினால் விவசாயிகளிற்கு அரசு செய்த முதலாவது பெரிய நன்மைக் காரியமாக அமையும். குரக்கன், சாமி, தினை போன்றவை பயிரிடுவது குறைந்தமைக்கும் குரங்கே காரணம்” என்றார்.
இவ்வாறு குரங்குளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக அரசு அறிவித்திருப்பது தொடர்பில் நெடுங்கேணி விவசாய அமைப்பின் தலைவர் வை.பூபாலசிங்கத்தையும் கேட்டேன்:
”இந்த உலகம் மனிதனிற்கு மட்டும் சொந்தமானது அல்ல. மிருகங்களிற்கும் சொந்தமானதுதான். இருப்பினும் எதிலும் ஓர் சமநிலை வேண்டும். இங்கே எம்மை பொறுத்தமட்டில் யுத்தம் காரணமாக அதிகமானோர் உயிரிழந்தோம். அதனால் மேலும் பல லட்சம்பேர் இடம் பெயர்வினால் மனிதர்களின் எண்ணிக்கை குறைவடைய மிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது இதன் காரணமாக குரங்கு மட்டுமல்லை யானைகளையும் ஏற்றுமதி செய்யலாம். அது சீனாவிற்கு வழங்கப்படுகின்றதா அல்லது சீயன்னாவிற்கு வழங்கப்படுகின்றதா என்பது எமக்கு முக்கியம் அல்ல. ஏனெனில் யானை வாழ்நாளில் 15 ஏக்கர் காட்டை உருவாக்கும் உங்களால் முடியுமா எனக் கேள்வி எழுப்புபவர்கள் எமது பிரதேசத்தில் ஒரு மாதம் வந்து வாழ்ந்து பார்க்க வேண்டும். அரசு மேற்கொள்ளும் தவறை சுட்டிக்காட்டும் நாம் சரியானதை வரவேற்போம் அதாவது எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்பது கிடையாது. எனவே அரசு ஒரு லட்சம் குரங்குகள் அல்ல 5 லட்சம் குரங்குகளும் வழங்கலாம் என்றார்.
எனினும் குரங்குகள் சீனாவின் மிருகக்காட்சிசாலைகளிற்கு என்று கூறப்பட்டு ஆராய்ச்சி, இறைச்சி போன்ற இதர தேவைகளிற்கு பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. அதே போன்று இந்த குரங்குகள் மிகக்குறுகிய காலத்தில் சீனாவில் பல்கிப் பெருகினால் என்ன செய்வார்கள் என்பதற்கான பதில் இதுவரை இல்லை.
ஆனால் குரங்கு ஏற்றுமதிக்கு பரவலான ஆதரவு இலங்கையில் உள்ளது. இந்தக் கட்டுரைக்காக பலரை சந்திக்கச் சென்ற போது ஒரு விடயம் காதில் விழுந்தது. “ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகள் சிறுபான்மையினக் குரங்குளா அல்லது அவை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்ததா?’