திருமதி மனோராணி துசிதரன் அவர்களை குருவாகவும் நிறுவனராகவும் கொண்ட கனடா ஸ்வரநய இசைக் கல்லூரியின் வருடாந்த இசை விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.
கடந்த 08-04-2023 சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த விழாவில் சிறப்புக்குரிய அம்சமாக விழாவின் முதல் அரைப் பகுதி கர்நாடக இசை சார்ந்த பாடல்களை மாணவ மாணவிகள் பாட அவற்றிக்கு மிருதங்கம் வயலின் போன்ற பக்கவாத்தியக் கருவிகள் மெருகூட்ட மிகவும் சிறப்பாக அந்த பகுதிய நகர்ந்து சென்று சபையோரினதும் பெற்றோர்களினதும் பாராட்டுக்களைப் பெற்றது.
தொடர்ந்து மற்றைய அரைப்பகுதி இசைக் கலைஞர் அரவிந்தன் தலைமையில் கொடிகட்டிப் பறக்கும்’ மெகா ரியுனர்ஸ்’ இசைக்குழுவின் பின்னணி இசையோடு மெல்லிசைப் பாடல்களைக் கொண்டதாக தொடர்ந்து இறுதிவரை அழகாக நகர்ந்து சென்று அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றது.
விழாவினை சிறப்பாக தொகுத்து வழங்கினார் அக்னி இசைக்குழுவின் ஸ்தாபகரும் நிர்வாகியுமான திருமதி சில்வியா பிரான்சிஸ்.
விழாவின் பிரதம விருந்தினராக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அழைக்கப்பெற்றிருந்தார். அவருடன் அவரது துணைவியாரும் கலந்து கொண்டார்.
அன்றைய தினம் ஸ்வரநய இசைக் கல்லூரியின் மாணவ மாணவிகளின் இசைத்துறை ஆற்றல் நன்கு வெளிப்பட்டது. அத்துடன் அவர்களை தகுந்த முறையில் கர்நாடக இசைப் பாடல்களையும் மெல்லிசைப் பாடல்களையும் மேடையில் இசைக்கருவிகளோடு இணைந்து பாடுமளவிற்கு பயிற்யளித்த குரு மனோராணி அவர்களுக்கும் அவரது இரண்டு புதல்விகள் ருதுனியா. ஸ்வரமி ஆகியோருக்கும் எமது பாராட்டுக்கள். அத்துடன் மெகா ரியுனர்ஸ்’ இசைக்குழுவின் தலைவர் அரவிந்தன் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தனது துணைவியார் சகிதம் குரு மனோராணி அவர்களுக்கும் மெகா ரியுனர்ஸ்’ இசைக்குழுவின் தலைவர் அரவிந்தன் அவர்களுக்கும் தமது பத்திரிகை நிறுவனத்தின் சார்பில் பாராட்டு மடல்களை வாசித்து வழங்கினார். அத்தருணம் நடன ஆசிரியை திருமதி ஜனனி குமார் மற்றும இசையாசிரியை லசந்தி ராஜ்குமார் ஆகியோரும் மேடையில் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.