இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார்
இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு வீடுதேடி வந்த சஞ்சீவை கையும் களவுமாக பிடித்து சிறுமியின் தாய் போலீசில் ஒப்படைத்துள்ளார். கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட சஞ்சீவ், வெளியே வந்த பின்னரும் அந்தப் பெண்ணுடன் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 7 ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி காதலியான சிறுமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தித்த சஞ்சீவ், மயங்கிய நிலையில் கொல்லிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், அங்கிருந்து ஆவடி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு விசாரணைக்கு வந்த போலீசாரிடம் தனது காதலி மாசாவில் எலி மருத்து கலந்து கொடுத்து விட்டதாக கூறி நடந்த சம்பவத்தை விவரித்தார்.
7 ந்தேதி தனது பிறந்த நாள் அன்று காதலி தன்னை சென்னைக்கு வரவழைத்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தன்னை சந்தித்த காதலி, குடிப்பதற்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்தார். அதனை முழுவதுமாக குடித்ததும், என்ன மன்னிச்சிருடா நீ குடிச்ச குளிர்பானத்தில் எலி மருந்து கலந்திருக்கு, உன்னோட தொல்லை தாங்கலடா, உன்னை பழிவாங்கத்தான் இங்க வரச்சொன்னேன் என்று கூறி தனது கையிலிருந்த செல்போனை பிடுங்கி தரையில் போட்டு உடைத்ததாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
தனக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள்ளாக மறைந்திருந்த அந்த சிறுமியின் தாய் ஆண்டாள் தேவியும், சகோதரி பிரியதர்சினியும் சேர்ந்து தன்னை தாக்கி கீழே தள்ளிவிட்டு, அடித்து உதைத்து எச்சரித்துவிட்டு சென்றனர்.
அன்று இரவு பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்கி விட்டு, காலையில் செங்குன்றத்தில் உறவினருக்கு தகவல் தெரிவித்து சிகிச்சைக்கு வந்து சேர்ந்ததாக சஞ்சீவ் போலீசாரிடம் கூறினார்
இதற்கிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சஞ்சீவ் உயிரிழந்த நிலையில், அதனை மறைத்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி அவரது சடலத்தை போலீசுக்கு தெரியாமல் தனியார் ஆம்புலன்சில் உறவினர்கள் பரமக்குடிக்கு கொண்டு சென்றனர்.
கோயம்பேடு போலீசார் அளித்த தகவலின் பேரில் , பரமக்குடி போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிணக் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்க்கிடையே கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் சிறுமி, அவரது தாய் மற்றும் சகோதரியை பிடித்து விசாரித்த போது, வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
இன்ஸ்டாகிராமில் தங்கள் வீட்டுப்பெண் தெரியாத்தனமாக சஞ்சீவுடன் பழகி விட்டாள் என்றும் அவன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் தாக்கியதாகவும், அவனே குளிர்பானம் வாங்கி குடித்து இறந்து போயுள்ளான் என்றும் சிறுமியின் குடும்பத்தினர் கூறினர் .
இதையடுத்து பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுமியுடன் பேருந்து நிலையத்தில் சுற்றிய சஞ்சீவ், ஒரு கடையில் குளிர் பானத்தை அவரே சென்று வாங்கிக் குடிக்கும் காட்சியும், அதன் பின் காதலியின் குடும்பத்தினர் தாக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சஞ்சீவின் மரண வாக்கு மூலத்தில் கூறியபடி சிறுமி குளிர்பானம் கொடுக்கவில்லை என்பது உறுதியானது.
அப்படி என்றால் சஞ்சீவ் தானாக எலிபேஸ்ட் கலந்து குடித்து விட்டு காதலி குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கத்தில் வாக்குமூலம் அளித்தாரா ? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இன்ஸ்டாவில் நட்புக்களை தேடிச்செல்லும் 2kகிட்ஸ் காதலில் விழுந்து அவசரப்பட்டால் குடும்பத்தினர் என்ன மாதிரியான விவகாரங்களில் சிக்க நேரிடும் என்பதற்கு சாட்சியாக அரங்கேறி இருக்கின்றது இந்த சம்பவம்.