ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வலுவான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூறியுள்ளார்கள். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் +1.588 நெட் ரன்ரேட்டை பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்தில் உள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் மற்றும் நெட் ரன் ரேட் +0.341-யைப் பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆவது இடதில் உள்ளது.
இவ்விரு அணிகளும் சம பலம் மிக்கவையாக கருதப்படும் நிலையில் இரு அணிகளும் இன்றிவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர். முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் நடந்துள்ளன. இவை அனைத்திலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால், இந்த முறை குஜராத் அணியை வீழ்த்த ராஜஸ்தான் கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் வலிமை சேர்க்கின்றனர். எளிதாக சிக்சர்களை அடிக்கும் ஹெட்மேயர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர்.
அஷ்வின், ஆடம் ஸாம்பா, யுஸ்வேந்திர சாஹல் என உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது ராஜஸ்தான் அணிக்கு பலம் சேர்க்கிறது. குஜராத் அணியில் சுப்மன் கில், மில்லர், சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், பந்துவீச்சு குஜராத் அணிக்கு சவாலாக அமையும் என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர். கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் ஆட்டத்தின் கடைசி 5 பந்தில் 5 சிக்சர் அடித்தது குஜராத் அணிக்கு எதிராகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டி அகமதாபாத்தில் நடக்கவிருப்பது குஜராத் அணிக்கு பலமாக அமையும்.