ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது அணிக்காக 3 ஆயிரம் ரன்களை ஐபிஎல் தொடரில் நிறைவு செய்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தின்போது இந்த மைல் கல்லை சஞ்சு சாம்சன் எட்டினார். ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது. இந்த அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
இந்த மேட்ச்சில் கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அதிரடியாக 60 ரன்களை எடுத்தார். இதில் 3 பவுண்டரியும், 6 சிக்சர்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 187.50. இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்காக 115 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 3,006 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 29.76. இவற்றில் 2 சதங்களும், 16 அரைச் சதங்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 139.10 ஆக உள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்றதன் மூலம் பாயின்ட்ஸ் டேபிளில் 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 4 –இல் வெற்றி பெற்றுள்ளது. மேலும் நெட் ரன்ரேட் +1.354 என பலமாக உள்ளது. இதற்கு அடுத்ததாக 5 போட்டிகளில் விளையாடி 3 இல் தோல்வியடைந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 6 புள்ளிகள் மற்றும் +0.761 நெட் ரன் ரேட்டுன் 2 ஆவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6,838 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்திலும், 6,477 ரன்களுடன் ஷிகர் தவான் 2 ஆவது இடத்திலும், 6,109 ரன்களுடன் டேவிட் வார்னர் 3 ஆவது இடத்திலும் உள்ளனர்.