மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட பத்து கஷ்டப்பிரதேச பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் இம்மாதம் 3,4,5ஆம் திகதிகளில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.
மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளரின் கோரிக்கைக்கமைவாக அனைத்துலக மருத்துவ நல அமைப்பும்(International Medical Health Organisation-USA) இரட்ணம் பவுண்டேசன் அமைப்பும்(Ratnam Foundation-UK) இணைந்து பன்னிரண்டு பாடசாலைகளுக்கு திறன் பலகைகளை வழங்கியது மட்டுமன்றி இப்பாடசாலைகளைச்சேர்ந்த ஆசிரியர்களுக்கு , திறன்பலகைகளைக் கையாள்வதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வளவாளர்களைக்கொண்டு பயிற்சிகளையும் வழங்கியிருந்தது.
இத்திறப்பு விழாக்கள் கொக்குபடையான், சவேரியார்புரம், நொச்சிக்குளம், சிறுக்கண்டல், அகத்திமுறிப்பு, முருங்கன், புதுக்கமம், சாந்தபுரம் மற்றும் சிறுத்தோப்பு கிராமப்புறங்களில் பாடசாலைரீதியாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர்,திட்டமிடல் மற்றும் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் மட்டுமன்றி IMHO-USA அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் சிறப்பாக நடந்தேறியது .
இத்திறப்பு விழாக்களில் ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களின் மாதிரி வகுப்பறைக் கற்பித்தல் செயற்பாடுகளும் இடம்பெற்றிருந்தது.இதன்போது மாணவர்களும் திறன் பலகைகளை கையாண்டது கண்டு திறப்புவிழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள். ஆசிரியர்களுக்கான தொடருறு பயிற்சிகளை வலயத்திற்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்களை கொண்டு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் மாதாந்த அறிக்கைகளை தமக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் வலயக்கல்விப்பணிப்பாளர் அதிபர்களை வேண்டிக் கொண்டார்.