ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் வெற்றி பெற 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களத்தில் இறங்கினர். 18 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 7 ரன்களும், திலக் வர்மா 17 பந்தில் 4 சிக்சர் மற்றும் 2 பவுண்டரியுடன் 37 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் 3 ஆவது வீரராக களத்தில் இறங்கிய கேமரூன் கிரீன் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். 40 பந்துகளை எதிர்கொண்ட கிரீன் 64 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.
மும்பை அணியின் மற்றொரு வீரர் டிம் டேவிட் 11 பந்தில் 16 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ். சன்ரைசர்ஸ் ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜேன்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.