16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி முதன் முறையாக அதன் சொந்த மைதானத்தில் களமிறங்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் ராஜஸ்தான் அணி இந்த தொடரில் 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்து 4 போட்டிகள் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஜோஸ் பட்லர், ஜேஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர் என அதிரடியாக ஆடக்கூடிய அனைத்து பேட்ஸ்மேன்களுடன் ராஜஸ்தான் நல்ல நிலையில் உள்ளது. அதேபோல் அஸ்வின், சாஹல் என சுழற்பந்து வீச்சில் எதிரணியை திணறடித்து வருகின்றனர். வேகப்பந்து வீச்சில் போல்ட், சந்தீப் சர்மா என அனைத்து நிலைகளிலும் ராஜஸ்தான் அணி வலுவாக உள்ள நிலையில் சொந்த மைதானத்தில் களமிறங்குவதால் பெரும் பலம் பெற்றுள்ளது.
மறுபக்கம் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 3 வெற்றி 2 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோற்ற லக்னோ அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என கடுமையாக முயற்சித்து வருகிறது. மேலும் பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியின் வெற்றிப் பயணத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என சில வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக அதிரடி விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இந்த தொடரில் இன்னும் களமிறக்கப்படவில்லை.
அதேபோல் கே.எல்.ராகுல் ஸ்டிரைக் ரேட் குறித்து கடுமையாக விமர்சங்கள் எழுந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து சற்று ஆறுதல் அளித்தார்.