(எமது யாழ் செய்தியாளர்)
இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் நில அபகரிப்பு, இராணுவமமயமாக்கல், வலிந்த சிங்கள குடியேற்றம், கோவில்கள் இடித்தழிப்பு போன்ற பல பிரச்சனைகள் தொடர்பில் இம்மாதம் 25ஆம் திகதி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கு பெறாது என்று அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வியாழனன்று தெரிவித்தார்.
தமிழ் மக்களின் மீதான நில, தொல்லியல் ஆக்கிரமிப்பு, மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது உட்பட தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வடக்கு கிழக்கு தழுவிய போராட்டத்தின் முதற்கட்டம் யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை நடைபெறும் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்திலே தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் கடந்த முதலாம் திகதி ஏழு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் 22க்கு மேற்பட்ட மத, சமூக மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தில், தமிழ் மக்களின் தொன்மையையும் தேசியத்தையும் சிதைக்கும் வகையில் கலாசார பண்பாட்டு மற்றும் சமூக விழுமியங்களை சிதைத்து, இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் சைவ ஆலயங்களை நிர்மூலமாக்கியும் அங்கு பௌத்த சின்னங்களை நிறுவியும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப்படுகொலை ஆகியவற்றை எதிர்த்து வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் ஒரே நாளில் முன்னெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் இவ்வேளையில் அதனுடைய கடுமையான எதிர் விளைவுகளை கவனத்தில் கொண்டு அந்தச்சட்ட வரைவை எதிர்த்தும் அதை நிறைவேறாமல் தடுப்பதற்கும் தமிழ் பேசும் மக்களினுடைய ஏனைய பிரதிநிதிகளோடு கலந்துரையாடல் நடத்தி ஒன்றிணைந்த எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக போராட்டம் தொடர்பான ஏற்பாட்டுக்குழுவினர் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். அந்த கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள் முன்னெடுக்கும் எந்த போராட்டத்திலும் பங்குபெற போவதில்லை என்று கூறியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதற்கான தமது கட்சியின் காரணங்களையும் முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இதர கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் முழு அடைப்பு (ஹர்த்தால்) ஒன்றிற்கான அழைப்பை விடுத்துள்ளது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே தமது கட்சியின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்தார்.
ஹர்த்தாலானது தங்களுடன் சமபந்தப்பட்ட விடயம் அல்ல என்றும் மாறாக குறித்த தமிழ்த் தரப்புகள் புதுப்புது அமைப்புக்களை உருவாக்குவதற்கு முன்னரே இவற்றுக்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் அமைப்பு தாம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்களை எதிர்க்க வேண்டுமென்றால் வேறு எவருடைய உதவியையும் தேடாமல், மக்களிடம் இவற்றை கொண்டு செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
”தமிழ் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைப்பை உருவாக்கிக் கொள்பவர்கள், இந்த பிரச்சனைக்கு அடிப்டையான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை, உட்பட 13 ம் திருத்தச்சட்டத்தை தொடர்ந்தும் ஆதரிக்கிறார்கள்” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
”ஒருபுறம் அமைப்புகளை உருவாக்கி போராடுகின்றோம் என மக்களை ஏமாற்றுபவர்கள், மறுபுறம் இவை அனைத்தையும் மேற்கொள்ள ஒற்றையாட்சிக்குளிருக்கும் 13 ம் திருத்தச்சட்டத்தை எதிர்க்க முதுகெலும்பற்றவர்களாக காணப்படுகிறார்கள்” என்று இந்த ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளிற்கு காட்டமாக பதில் வழங்கியுள்ளார்.
எனவே இவ்வாறான தரப்புகளுடன் இணைவதானது, ”மக்களை முட்டாள்களாக்கும் செயற்பாடாகும்” என்றும் மாறாக மக்களுக்கு இந்த நடவடிக்கைகளை எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதர கட்சிகளை கடுமையக விமர்சனம் செய்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி தமிழ் மக்களிடம் எந்தளவிற்கு செல்வாக்கு உள்ளது என்று தமிழ் மக்கள் வினவுகின்றனர். யாழ்ப்பாணம் நகர் அல்லது யாழ் தேர்தல் மாவட்டத்திற்கு வெளியே இவர்களிற்கு எந்தளவிற்கு மக்களின் ஆதரவு உள்ளது என்பது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தெரிந்தது என்று அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களின் நலன் மற்றும் யதார்த்தங்கள் ஆகியவற்றிற்கு மாறக சுயநல அரசியலில் ஈடுபடுகிறார் என்று தமிழ் அரசியல் விடயங்களை தொடர்ச்சியாக அவதானித்து அது பற்றி எழுதிவரும் அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். பொது விடயங்கள் அல்லது மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களின் போது ‘தனி ஆவர்த்தனம்’ வாசிப்பது தமிழ் மக்களிடையே ஒரு கசப்பான உணர்வை ஏற்படுத்தும் என்றும், அது அடுத்துவரக் கூடிய தேர்தல்களில் பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.