யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியில் பெருமளவிலான நிலங்கள் சீனாவிற்கு வழங்கப்படவுள்ளது என்று தொடர்ச்சியாக வரும் கவலைகளிற்கு மத்தியில், சீனாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பும் இலங்கையில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஓரிரு நாட்களாக வடக்கு மாகாணத்தில் பலர் தமது தொலைக்காட்சிப் பெட்டியில் அலைவரிசைகளை மாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு அரச தொலைக்காட்சிகளிலும் சீனாவின் ஒளிபரப்பு வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வலிந்த சீனக் குடியேற்றங்களிற்கு வழி வகுக்குமோ என்று அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
இலங்கையில் தற்போது ஆக்கிரமித்துள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையின் மத்தியில் தற்போது சீனத் தொலைக் காட்சியும் தனது சேவையை இலவசமாக ஆரம்பிக்கின்றது.
அவ்வகையில் இலங்கையின் தொலைக்காட்சிகளில் சீன அலைவரிசை ஒன்று இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு சேவையை தற்போது ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே வடமாகாணத்தின் பல பகுதிகளில் கடல் அட்டை பண்ணைகளை நிறுவியுள்ள சீனா அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை பெருமளவிற்கு சிதைத்துள்ளது. அதே போன்று இரணைமடு குளத்தின் தெற்கே 500 ஏக்கரையும், இயக்கச்சி பகுதியில் 200 ஏக்கரை சீனாவிற்கு இலங்கை அரசு தாரைவார்க்கவுள்ளது என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் சீனத் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அரச தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பாவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சீன ஒளிபரப்பு சேவையான சைனிஸ் குளோபல் ரெலிவிசன் நெற்வேற் அலைவரிசையை தற்போது கேபிள் இணைப்பு இன்றி ஒளிபரப்பாகின்றது.
இலங்கை அரச தொலைக்காட்சிகளான ரூபவாகினி, ஐ ரீவி மற்றும் நேத்ரா ஆகிய ஒரே குழும ரீவிகள் நாட்டில் யூ.எச்.எவ் இல் வெளிவருகின்றன.
இவ்வாறு வெளிவரும் ஒளிபரப்பு சேவையானது கடந்த பெப்ரவரியில் இருந்து அலைவரிசை பங்காளிகளை கோரியிருந்தனர். இதன்போது இந்த சீன ஒளிபரப்பு சேவை அதனை பற்றியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன அலைவரிசைகளிற்கு 5 இடத்தில் அலைவரிசை கோபுரங்கள் உண்டு அவை கொழும்பு, மடேல்சிம் (ஊவ), கொக்காவில்.முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஓளிபரப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மீள் ஒளிபரப்பு கோபுரங்கள் மூலமே சீனத் தொலைக்காட்சி சேவையின் தற்போது இடம்பெறும் சோதனை முறையிலான ஒளிபரப்பு தெளிவாக இயங்குகின்றது.
இவ்வாறு இயங்கும் சைனிஸ் குளோபல் ரெலிவிசன் நெற்வேர்க் முன்னர் ஓர் தொலைபேசி நிறுவன இணைப்பு மூலம் கட்டண சேவையில் இயங்கியபோதும் இவை தற்போது இலவச சேவையாக ஒளிபரப்பப்படவுள்ளது.
சீனாவின் இந்த உலகச் செய்திகள் ஓளிபரப்பு தற்போது இலங்கைக்கு வெளியே வேறொரு நாட்டிலிருந்து ஒளிபரப்பாகி அதை செய்மதி அலைவரிசெயூடாக இலங்கைக்குள் தரவிறக்கம் செய்யப்பட்டு அரசை தொலைக்காட்சியான ரூபவாகினி மூலம் உள்நாட்டில் இங்கே ஒளிபரப்பப்படுவதாக நம்பப்படுகிறது.
நாடுமுழுவதும் கேபிள் இணைப்பு சேவை மூலம் ஏனைய அலைவரிசைகளின் இணைப்பு வழங்கப்படும் அதேநேரம் இலங்கையின் சில அலைவரிசைகள் மட்டும் இலவசமாக பார்வையிட முடியும். இதேநேரம் சீனத் தொலைக்காட்சி அலவரிசை இலவசமாக ஒளிபரப்பாகும் சந்தர்ப்பத்தில் தமிழ்ச் சேவையும் ஆரம்பிக்கப.பட்டால் இதன் அடுத்த கட்டம் என்ன என்பதே கேள்வியாகவுள்ளது.
அதாவது அடுத்த கட்டமாக அதே சீனத் தொலைக்காட்சி நிறுவனம் தமிழில் தாயகத் தமிழர்களை இலக்கு வைத்து அடுத்த கட்டமாக தனது ஒளிபரப்பை தொடங்கக் கூடும் என்றே தமிழர் தரப்பு கவலைப்படுகிறது.