இன்றைக்கு மக்கள் எதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் முதலில் தேடுவது கூகுளில் தான். தேடுபொறி, மின்னஞ்சல், செயற்கை நுண்ணறிவு, என்று கூகுளை நிறுவனம் தினம் தினம் வளர்ந்து வருகிறது. அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஒரு இந்தியர், அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதில் நமக்கு ஒரு பெருமை.
அப்படி பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் உண்டார் பிச்சை எப்படி வாழ்கிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆவல் எல்லோருக்கும் இருப்பது இயல்புதானே? அவரின் வீடு, அதன் மதிப்பு, சொத்துக்கள், மற்றும் வாழ்க்கை முறை பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்த சுந்தர் பிச்சை முதலில் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். அதன் பின்னர் படிப்படியாக கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
சுந்தர் பிச்சை கடந்த 2022-ல் மொத்த ஊதியமாக சுமார் $226 மில்லியன் (சுமார் 1800 கோடி) பெற்றுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இது அங்கே பணியாற்றும் சராசரி ஊழியர்களின் ஊதியத்தை விட 800 மடங்கும் அதிகமாகும். 2018ல் சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக மட்டும் கூகுள் $1.2 மில்லியன் செலவிட்டுள்ளது. அதாவது சுமார் 9.8 கோடி இந்திய ரூபாய்.
மேலும் சுந்தர் பிச்சையின் ஊதியத்தில் சுமார் 218 மில்லியன் டாலர் கூகுள் நிறுவன பங்குகளும் அடங்கும். இந்நிலையில் சுந்தர் பிச்சையின் ஆடம்பரமான இல்லம் குறித்த சில முக்கியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா எனும் பகுதியில் தான் சுந்தர் பிச்சை வீடு இருக்கிறது.
அவரது இல்லத்திற்கு லாஸ் அல்டோஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவின் மலை உச்சியில் 31.17 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்து அமைந்துள்ள இது, வீடா இல்லை பிகினிக் ஸ்பாட்டா என்று கேட்கும் அளவுக்கு இருக்குமாம். 31 ஏக்கர் என்றால் சொல்லவா வேணும்? இந்த வீட்டில் ஒரு குளம், ஒரு பாதாள அறை, உடற்பயிற்சி கூடம், ஒரு ஸ்பா, சோலார் பேனல்கள், லிஃப்ட் மற்றும் வேலையாட்கள் குடியிருப்புகள் போன்ற பல்வேறு நவீன மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் பல இருக்கின்றன
இந்த வீட்டை 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலைக்கு சுந்தர் பிச்சை வாங்கியுள்ளார். இதன் இந்திய மதிப்பு 320 கோடி ரூபாய் ஆகும். அதேபோல் இந்த வீட்டின் உள்கட்டமைப்பு முழுவதும் சுந்தர் பிச்சையின் மனைவி விருப்பப்படியே வடிவமைக்கப்பட்டதாம். மேலும் இதன் வடிவமைப்பு செலவு மட்டும் ரூ.49 கோடி என்று கூறப்படுகிறது.
சுந்தர் பிச்சைக்கு இருக்கும் பல சொத்துக்களில் மிகவும் பிரதானமானது இந்த கலிஃபோர்னியா வீடுதானாம்.