கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பதவி ஏற்றார். இந்நிலையில் அடுத்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் 80 வயதான ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், அதிபராகத் தான் ஆரம்பித்த பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலாவது பதவிக்காலத்தில் தான் சாதித்தவையும், 50 ஆண்டு அரசியல் அனுபவங்களும் தனது வயது குறித்த கரிசனையை போக்குவதற்கு போதிய காரணமாக இருக்கும் என்று பைடன் கருதுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், துணை அதிபருக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் மீண்டும் போட்டியிடுகிறார்.