நாகநாதன் வீரசிங்கம் M.A (தமிழ்)
செயலாளர், கனடியத் தமிழர் பேரவை
உலகின் மூத்தமொழி என மொழியியல் ஆய்வாளரால் கொண்டாடப்படுவது தமிழ் மொழி. இது நீண்ட வரலாற்றைக் கொண்டது. இலக்கிய இலக்கணம் செறிந்தது. சங்ககாலத்தில் தோன்றிய தொல்காப்பியமும் எட்டுத்தொகை,பத்துப்பாட்டும் தமிழின் உன்னத நிலைக்குச் சான்றாகும். தமிழ் அரசுகள் தொய்வுற்று அந்நிய சக்திகள் தமிழ் நாட்டிற்குள் புகுந்து தமிழர் நிலைகுலைந்தபோது தோன்றிய திருக்குறள் முதலான நீதி நூல்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டைக் காப்பியங்களும் தமிழுக்கு மேலும் மேலும் மெருகூட்டின. பல்லவர் காலத்தில் வடமொழி ஆதிக்கம் செலுத்தியது.
தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்து மணிப்பிரவாள நடை என்ற மொழிநடை உருவாக்கம் பெற்றது. தமிழ் சிறுமைப் படுத்தப்பட்டது இக்காலத்தில் தோன்றியவையே பக்தி இலக்கியங்கள். சைவசமய நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றினார்கள். கம்ப இராமாயணம், பெரிய புராணம் என்ற காப்பியங்களும் இக்காலத்தில் உருவாகின.தமிழ் மீண்டும் சிறப்புறத் தொடங்கியது.
கிறிஸ்தவமத போதகர்களாக தமிழ் நாட்டிற்கு வந்த ஐரோப்பியர்கள் தமிழைக் கற்று தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்கள். ஏட்டில் இருந்த இலக்கியங்கள் அச்சு வடிவம் பெற காரணமானவர்களும்,இன்றைய தமிழ் உரைநடைவழக்கைத் தொடக்கி வைத்தவர்களும் இவர்களே.இவர்களின் வரிசையில் தெ நோபிலி (De Nobili), பெஸ்கி என்னும் வீரமாமுனிவர், இரேனியஸ் (C.T.E Rhenius) கால்டுவெல் மற்றும் ஜி. யு. போப் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஜி. யு. போப் தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான டாக்டர்ஜி.யு.போப் கனடா நாட்டின் பிரின்ஸ் எட்வர்ட்தீவு என்ற மாநிலத்தில் ,பெடக்யூ என்ற நகரில்1820-ம்ஆண்டுஏப்ரல் 24-ந்தேதி பிறந்தார். இவர் தந்தை பெயர் ஜான்போப். தாயார்கேதரின். போப்புக்கு ஆறுவயதான போது பெற்றோருடன் இங்கிலாந்துநாட்டுக்குசென்றார். பத்தொன்பது வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.
இவர் தனது இளம் வயதிலேயே இறை பணியில் ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் கிறிஸ்தவ சமயப்பணிக்காக அவரது பத்தொன்பதாவது வயதில் இங்கிலாந்து கிறிஸ்தவ திருச்சபை அவரை தென் இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. இவர் தனது எட்டு மாத கடல் பயணத்தின் போது தமிழ் மொழியை கற்றுக்கொண்டார். இவர் தூத்துக்குடி அருகே சிறு கிராமமாக இருந்த சாயர் புரத்தில் குடியேறினார்.
கிறிஸ்தவ சமயப்பணியாற்றியதுடன் கல்விச்சாலை அமைக்கவும் நூல் நிலையம் உருவாக்கவும் பாடுபட்டார். இவரது கல்விச்சாலையில் கல்வி கற்ற மாணவர்களுக்கு மேல் நாட்டு அறிவுத்துறைகளாகிய உளவியல், தத்துவம், கணிதம், அளவை நூல் முதலியவற்றை தமிழில் கற்பித்தார். சாயர்புரத்தில் தங்கியிருந்த காலத்தில் ஆரியைகாவுப்பிள்ளை, இராமானுசக்கவிராயர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ்தவிரதெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்று தேர்ந்தார்.
1849-ல்திருமணம் செய்துகொண்டபின் இங்கிலாந்துக்கு சென்று 1851 ல் தன் மனைவியுடன் தமிழகத்திற்கு திரும்பி வந்து தஞ்சாவூரில் தங்கினார். அங்கு சமயப்பணியை தொடர்ந்தார். தொல்காப்பியம், நன்னூல் போன்ற நூல்களை மாணவர்கள் கற்பதற்கு கடினமாக இருந்ததால், எளிய தமிழில் இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
திருக்குறள் மற்றும் நாலடியார் போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவர் திருக்குறளை “Kural of Thiruvalluvanayanar” (1889) என்ற பெயரில் மொழிபெயர்த்தர்.உலகப் பொது மறையாம் திருக்குறளை மேலை நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை திரு போப் அவர்களையே சாரும். இன்று திருக்குறளுக்கு ஐம்பதிற்கு மேற்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகளும் நாற்பதுக்குமேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் காணப்படுகின்றது. இதனை ஆரம்பித்து வைத்தவர் திரு போப் அவர்களே.
’தமிழ் இலக்கியங்கள் மனிதனை நெறிப்படுத்தவே உருவானவை.
அதற்கோர் எடுத்துக்காட்டு திருக்குறள். உயர்ந்த அறநெறியும், உயிரினும் சிறந்த ஒழுக்கத்தையும் பேணும் மக்கள் வாழும் நாட்டில் தான் திருக்குறள் போன்ற நீதிநூல் உருவாகும். உருவாக இயலும். அழுக்கு இல்லாத தூய நீரூற்றுப் போல திருக்குறள் தோற்றம் தருகிறது. ஆம், உலகின் அழுக்கினை போக்க வந்த உயர் தனித்திருநூல் திருக்குறள்’ என்றுபோப் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலின் முகவுரையில் கூறியுள்லார்.
தஞ்சையிலிருந்து ஊட்டிக்குச் சென்று வாழ்ந்த போப் இந்திய நாட்டு வரலாறு பற்றி இரண்டு நூல்களை வெளியிட்டார். 1871-ல் பெங்களூர் சென்று அங்குகல்விப் பணியும், சமயப்பணியும் ஆற்றினார்.
42 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த போப் 1882-ம் ஆண்டு தனது 62-வது வயதில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றார். 1885-ல் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போட்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அங்கு மாணவர்களுக்குத் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றுக்கொடுத்தார். போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருவாசகநூல் அவருடைய 80-வது பிறந்த நாளில் வெளியிடப்பட்டது. புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார்.
போப் அவர்கள் பிறப்பால் ஐரோப்பியராக இருந்தாலும் உள்ளத்தால் தமிழராய் வாழ்ந்து தனது வாழ் நாள் முழுவதும் தமிழுக்காக உழைதார். ஜி.யு.போப் அவர்கள் 1908-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந்தேதி இவ்வுலகைத் துறந்தார். ஜி.யு.போப், இறப்பதற்கு முன் தன் நன்பர்களிடம் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்றும், தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும் என்றும், கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆக்ஸ்போர்டில் வால்டன் தெரு என்ற வீதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இவரது கல்லறை உள்ளது. அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகத்தின் தமிழ் ஆக்கம் பின்வருமாறு.
” தென்னிந்தியாவை சேர்ந்த ஜார்ஜ் உக்ளோ போப் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளை போதிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். மொழிக்காகவும், சமயப் பணிக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட போப் மீது பற்றுதல் கொண்ட தென்னிந்தியாவை சேர்ந்த அவருடைய தமிழ் அன்பர்களும், அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து அமைத்த கல்லறை இது.”
என்பதாம் இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு சென்னையிலே நடந்த போது பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் ஆய்ந்த தமிழ் அறிஞர்களை மேம்படுத்துவதற்காக அவர்களது சிலைகளை தமிழகத்தின் சென்னையிலே நிறுவினார். ஒளவைக்கும் அறம் வளர்த்த கண்ணகிக்கும் வளையா நெஞ்சப் பாரதிக்கும் வணங்காமுடி பாரதிதாசனுக்கும் கால்டுவல்மற்றும் ஜி.யு. போப்பிற்கும் வீரமாமுனிவர்க்கும் கம்பனிற்கும் கப்பலோட்டிய தமிழன் பா.ஊ. சிதம்பரனாருக்கும் திருவள்ளுவனுக்கும் என பத்து சிலைகளை நிறுவினார். கம்பன், ஓளவை. பாரதி, வள்ளுவன் வரிசையிலேஜி யு போப்பும் இடம்பெறுகின்றார் என்றால் அவர் ஆற்றலையும் தமிழுக்கு ஆற்றிய தொண்டின் பெருமையையும் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
ஜி.யு, போப் அவர்களது தந்தையார் ஜோன் போப் மற்றும் அவரது சகோதரன் ஜோசெப் போப் இருவரும் பிரின்ஸ் எட்வார்ட் தீவில் பெரும் வணிகர்களாகத்திகழ்ந்தவர்கள். ஜோசெப் போப் அரசியலிலும் ஈடுபட்டு மாகாண சட்டமண்ற உறப்பினராகவும் சபாநாயகராகவும் இருந்துள்ளார். இவரது இரண்டு பிள்ளைகளில் ஒருவரானவில்லியம் ஹென்றி போப் சிறந்த அரசியல்வாதியாகவும், பிரபல்யமான வக்கீலாகவும் எழுத்தாளராகவும், நீதிபதியாகவும் கடமையாக்கியவர். மற்றய மகனான ஜேம்ஸ் கொலேட் போப் மாகாணத்தின்முதல்வர்களாக மூன்று தடவைகள் சேவையாற்றினார். இத்தகையகுடும்பப்பின்னணியைக் கொண்ட ஜி யு போப் அவர்கள் இவற்றை எல்லாம் பின்தள்ளிதமிழுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ளார்.
தமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த போப் அவர்களது தமிழ்த்தொண்டை எமது வருங்காலச் சந்ததியினரும் பிற இனத்தவரும் அறியச்செய்யவும் தமிழ் வாழும் வரை இவரது புகழ் நிலைக்கவும் இவர் பிறந்த கனடிய மண்ணிலே ,பிரின்ஸ்எட்வர்ட்தீவு என்ற மாநிலத்தில் ,பெடக்யூ என்ற நகரில்,இவரதஉருவச்சிலையை 2023யூலை மாதம் 15 திகதி நிறுவுவதற்குரிய செயற்பாட்டினை கனடியத் தமிழர் பேரவை மேற்கொண்டுள்ளது.
இந்நிகழ்விலே அனேகமான மக்கள் பங்கு கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றன. பிரன்ஸ் எட்வேட் தீவு மாநில அரசு மற்றும் கனடிய மத்திய அரசு,பெடக்யூ நகர சபை அங்கத்தவர்கள் என பல அரசியல் பிரமுகர்களுக்கும் பங்கு கொள்ளவுள்ளனர்.அத்துடன் கனடாவில் பல பாகத்திலும் இருந்து ஜி. யு. போப் அவர்களது உறவினர்களும் பங்குகொள்ளவுள்ளனர். ரொரண்டோவில் இருந்து செல்வதற்கான பஸ் வண்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.
தொடர்புகளுக்கு 416 240 0078, or info@canadiantamilcongress.ca