வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்;
- சாதாரண மக்களின் கிளர்ச்சிகளை எதிர்கொள்வதற்கே பயங்கரவாத தடுப்புச் சட்டம் .
- “கருத்து வேறுபாடு” பயங்கரவாதம் அல்ல!
கடந்த ஒரு வருடமாக நாட்டில் பேசப்பட்டு வந்த ‘சிஸ்டம் சேன்ஜ்‘ கருத்தியலை பின் தள்ளி தற்போது ரணில் ராஜபக்ஷஅரசாங்கத்தினால்;முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக,’அரகலயா‘ மற்றும் அதைத் தொடர்ந்து ராஜபக்சே அரசாங்கத்தின் வெளியேற்றம், இது போன்ற அடக்குமுறையில் இருந்து தென்னிலங்கை விலகிச் செல்ல எதிர்பார்த்தது. ஆனால் ரணில் – ராஜபக்ஷ ஆட்சியானது விளைவுகளைப் பொருட்படுத்தாமல், தமது அதிகாரத்தை உறுதிப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இதன் விளைவுகளில் ஒன்றே பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலமாகும்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தினால்; முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பிற சர்வாதிகார நடவடிக்கைகளுக்குமத்தியில்,அரகலயாகருத்தியல்பின்தள்ளப்பட்டுள்ளது.பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைமைக்கு ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டு மக்களைத் தள்ளியுள்ளது.
- ரணில்-ராஜபக்ஷ ஆட்சியை நோக்கி மக்கள் கேள்வி
அந்தவகையில் ரணில் – ராஜபக்ஷ ஆளும்தரப்பினர் தமது அரசியல் இருப்பினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, பொருளாதார செழுமைக்காக அல்லது நாட்டின் பொருளாதார மீட்சிக்காக என்ற போர்வையில் மக்களின் தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட வேண்டுமா? என்பதே இன்று ஒட்டு மொத்த இலங்கை மக்களின் கேள்வியாக உள்ளது.
- தமிழ் பேசும் மக்களின் அனுபவம்.
வடக்குக் கிழக்கு தமிழ் முஸ்லிம் மற்றும் மலையக மக்களைப் பொருத்து அரசாங்கத்தினால்; முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்படுமயின் பௌத்த மேலாதிக்கமும் அரச பயங்கரவாதமும் இணைந்து தெற்கைவிட மிக மோசமாகத் தம்மை கபளீகாரம் செய்யும் என்பதை அறிந்து வைத்துள்ளனர். இரட்டை பிறவிகளாக 1979 இல் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமும் {PTA} , அதனுடன் இணைந்த அரச பயங்கரவாதத்தின் கொடூரத்தையும் அனுபவித்தவர்கள்.
- பயங்கரவாதத் தடைச் சட்டம் {PTA}
1979ல், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முதன்முதலில் ஒரு தற்காலிகச் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் 1982ல் அது நிரந்தரமாக்கப்பட்டது.
சித்திரவதை, தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல் மற்றும் தண்டனை மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமை உட்பட,அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள உரிமைகளை இச்சட்டம் மீறுகிறது.
- இன்று எமக்கு நாளை உங்களுக்கு!
PTA கொண்டுவரப்பட்டபோது பெரும்பான்மை இனத்தவர்களில் பெரும்பாலானவர்கள் இச்சட்டம் தனி நாடு கோரிப் போராடும் தமிழர்களுக்கு எதிரானது என்பதினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஆதரித்தனர்.
புயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரம்குறித்து சிறுபான்மையினம் பெரும்பான்மை இனத்தினரை எச்சரித்தனர். எமக்கு எதிராகக் கொண்டு வரப்படும் இச்சட்டம் நாளை பெரும்பான்மை இனத்துக்கு எதிராகவும் பாயும் என்றும் தமிழர்தரப்பு அப்போது எச்சரித்தது. இதனை கணக்கில் எடுத்ததாகவோ காதில் வாங்கிக் கொண்டதாகவோ அவ்வேளையில் பெரும்பான்மை சிங்கள இனம் இருக்கவில்லை. இன்று எமக்கு நாளை உங்களை நோக்கித் திரும்பும் என்றும் தமிழ் மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் பெரும்பான்மை இனத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களுக்கு எதிரானது என்பதால் கண்ணை மூடிக்கொண்டு தொடர்ந்தும் ஆதரித்தனர்.
கடந்த 44 வருடங்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்மூலம் இலங்கை அரசு தமிழ் மக்களை மிகக் கொடூரமாக அடக்கி பந்தாடியது.
- ‘அரகலயா’க்களை நோக்கி திரும்பியது.
நான்கு தசாப்தங்களுக்கு மேல் தமிழ் மக்கள் மீது பாய்ந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் கடந்த ஆண்டில்தான் ‘அரகலயா‘க்களை நசுக்க ஆளும் தரப்பினர் பயன்படுத்தினர்.அவ்வேளையில்தான் பெரும்பாலான தென்னிலங்கை மக்கள் தங்கள் ஆட்சியாளர்களுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் வழங்கிய கொடூர முகத்தைக் கண்டனர்.
- PTA க்கு எதிராக தென்னிலங்கை.
அரகலயா‘ மீதான ஒடுக்குமுறைக்குப் பின்னர்,தென்னிலங்கை மக்கள்,அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் விரைவில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்க வேண்டுமென குரல் எழுப்பத் தொடங்கினர்.
2023 இல் நடந்த சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சகம் PTA இல் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டது; இது அரசியலமைப்பு ரீதியாக அளிக்கப்பட்ட உரிமைகளை மீறியது மற்றும் சட்டம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய பாரபட்சமான விதிகளைக் கொண்டுள்ளது என்றும் பரிந்துரைத்தது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கொடூரத்தை 44 வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்தபோது கண்டு கொள்ளாத தென்னிலங்கையின் பெரும்பாலான மக்களும் பாதுகாப்பு அமைச்சும் தென்னிலங்கை சிங்கள மக்கள் மீது பாய்ந்தபோது விழித்தெழுகின்றனர்.
ஆனால் ‘தாச்சியில் இருந்து அடுப்பில் விழுந்த‘ கதையாக தென்னிலங்கை மக்களை மாத்திரமல்ல ஒட்டு மொத்த இலங்கை மக்களையும் ‘திறந்த வெளிச் சிறைச்hலைக்குள்‘ தள்ளும் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட முன்மொழிவை ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் முன்வைத்துள்ளது என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்ட முன்மொழிவுக்கமைய
- ஒரு நபர் அல்லது குழு, உண்மையான பயங்கரவாதச் செயல்களைத் தவிர, ‘அத்தியாவசிய சேவைகள் அல்லது பொருட்கள் அல்லது ஏதேனும் அத்தியாவசியமான உள்கட்டமைப்பு அல்லது தளவாட வசதிகளுக்கு கடுமையான இடையூறு அல்லது சேதத்தை ஏற்படுத்தினால்.
- சேவை அல்லது வழங்கல்‘, ‘தவறாக அல்லது சட்டவிரோதமாக, இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு எந்த அரசாங்கத்தையோ அல்லது ஒரு சர்வதேச நிறுவனத்தையோ. எந்த ஒரு செயலையும் செய்யவோ அல்லது செய்வதிலிருந்து விலகியிருக்கவோ‘கட்டாயப்படுத்துவது பயங்கரவாத குற்றமாகும்.
- அதாவது, ஒரு தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் செய்தாலும் அல்லது தெருவில் போராட்டம் நடத்தினாலும், ‘அத்தியாவசிய சேவைகள் அல்லது பொருட்களுக்கு கடுமையான இடையூறு விளைவித்தாலும்‘,
- ‘அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் நோக்கத்துடன்‘ அதன் உறுப்பினர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வழங்க வேண்டும். மசோதாவின்படி அது பயங்கரவாதச் செயலாக இருக்கலாம்.
எனவே, உண்மையான பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக,
- கடுமையான பொருளாதார நெருக்கடியில் இன்னும் தத்தளிக்கும் சாதாரண மக்களின் கிளர்ச்சிகளை எதிர்கொள்வதே இந்த மசோதாவின் நோக்கம் என்று ஒருவர் யூகிப்பது நியாயமானது.
- கருத்து வேறுபாடு பயங்கரவாதம் அல்ல என்பதில் அதிகாரிகள் தெளிவாக இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோதும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள போராட்ட களமான “கோட்டகோகம”விற்கு ஆதரவு தெரிவித்ததையும், போராட்ட இடத்திற்கு உதவிகளை வழங்குவதற்காக குழுவொன்றை அவர் நியமித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்ததையும் நினைவுகூர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தென்னிலங்கை நினைவறுத்துகின்றது.
- எதிரியை குறிவைக்கும் ‘பயங்கரவாதம்’
‘பயங்கரவாதம்‘ என்ற சொல்லுக்கு எப்போதும் அரசியல் அர்த்தம் உண்டு. அது எப்போதுமே அதைப் பயன்படுத்தும் நபரின் எதிரியை குறிவைக்கிறது. எனவே, ‘ஒரு மனிதனின் பயங்கரவாதி மற்றொரு மனிதனின் சுதந்திரப் போராளி‘ என்ற பழமொழி அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
அரசுக்கும் அரச எதிர்ப்புக் குழுவுக்கும் இடையிலான மோதலில், அரசாங்கம் சில சமயங்களில் அந்தக் குழு பயங்கரவாதத்தைச் செய்வதாகக் குற்றம் சாட்டுகிறது.
அதே நேரத்தில் அந்தக் குழு அரசாங்கத்தை அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டதாக குற்றம் சாட்டும்.
- பயங்கரவாதத்திற்குவரையறை இல்லை.
பயங்கரவாதத்திற்கு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை இல்லை.
ஆயினும்கூட, நீங்கள் விரும்பாத அல்லது உங்கள் நலன்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாக செயல்படும் ஒவ்வொரு மனிதனையும் நீங்கள் பயங்கரவாதி என்று அழைக்கலாம் என்று அர்த்தமல்ல.
ஆனால் மார்ச் 22 அன்று அரசாங்கம் முன்வைத்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் அப்படித்தான் தெரிகிறது என்றும் தென்னிலங்கை ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சுட்டிக் காட்டுகின்றது.
‘சண்டே டைம்ஸ்‘ கட்டுரையாளர் கிஷாலி பின்டோ–ஜெயவர்தன,
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் { ATA }அதன் முன்னோடியான PTA ஐ விட மோசமான அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஜனாதிபதியின் கரங்களில் மேலும் அதிக அதிகாரங்களைக் குவிக்கின்றது என்று குறிப்பிடுகின்றார்.
- உரிமைகள் பறிபோவதை அனுமதிக்கக் கூடாது
இலங்கை மக்கள் தம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினாலோ அல்லது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளினாலோ தமது உரிமைகள் பறிபோவதை அனுமதிக்கக் கூடாது.அதேவேளையில் மக்கள் தமது உரிமைகள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தென்னிலங்கை தற்போது குரல் எழுப்பத் தொடங்கியுள்ளது.தென்னிலங்கையிலும் தென்னிலங்கை ஊடகங்களிலும் இதுவே பேசுபொருளாக உள்ளது. தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் இந்த விவகாரம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
We, the citizens, need be alert to prevent an erosion of our rights
whether by our elected representatives or
those elected by our elected representatives.
தென்னிலங்கையின் இந்த சுலோகத்துடன் இலங்கை மக்கள் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் அரசியல் அபிலாiஷகளையும் அங்கீகரித்து பயணிக்க முன்வரவேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்வதன்மூலமே நாடும் மக்களும் மீட்சிபெற முடியும்.
மொத்தத்தில் தென்னிலங்கை மக்கள் சுதந்திர இலங்கையில் தாம் சுதந்திரம் இல்லாத ‘மாய சுதந்திர‘த்திற்குள் வாழ்ந்தோம்.அதற்காகவே ‘சிஸ்டம் சேன்ஜ்‘ கோரினோம். இன்று ‘சிஸ்டம் சேன்ஜ்‘ இல்லை.
ஆனால் இன்று இலங்கையில் நாம் ஜனநாயகத்தின் முடிவை காண்கிறோமா? என்று தென்னிலங்கை மக்கள் குரல் எழுப்பி நிற்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.
தமிழர் விவகாரத்தைக் காட்டி 75 வருடங்கள் தென்னிலங்கை மக்களை இருட்டுக்குள் தள்ளிய சிங்கள ஆளும் வர்க்கம் இன்று இணைந்து கைகோர்த்து நின்று தமிழ் மக்களைப் போன்று சிங்கள மக்களையும் நாதியற்ற மக்களாக ஆக்கியுள்ளது என்பதை உணர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளை அங்கீகரித்து கைகோர்த்துப் பயணிக்க தென்னிலங்கை முன்வரவேண்டும்.
ஒட்டு மொத்த இலங்கையும் மீட்சிபெற இந்தப் பயணமே வழிவகுக்கும்.