(கனடா கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 12)
கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
அதாகப்பட்டது மகாஜனங்களே இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியக்குடிமக்கள் யாவரும் இனிமேல் இந்திய ரூபாய்களிலேயே இலங்கையில் கொடுக்கல் வாங்கல்களைச் செய்யலாம் என்று இத்தால் அறிவிக்கப்படுகிறது…………டும்……டும்.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திய வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் இலங்கையில் நடத்திய கலந்துரையாடல் ஒன்றில் தலைமைக் கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது. இதே டும் டும் மை கடந்த வருடம் ஜுலை மாதம் இந்தியாவின் மத்திய வங்கியும் கொட்டியிருந்தது. அதாவது இந்திய ரூபாவை இலங்கையுடன் இடம் பெறும் வர்த்கக் கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்த அனுமதிக்கப்படுள்ளதாகவும் இலங்கைப்பிரஜைகள் பத்தாயிரம் அமெரிக்க டொலர்கள் (826823 இந்திய ரூபா) பெறுமதியான இந்திய ரூபா தாள்களை தம்வசம் வைத்திருக்கலாம் எனவும் இலங்கையர்கள் இந்தியாவுக்குப் பயணங்கள் மேற்கொள்ளும் போது ஐயாயிரம் டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபா நாணயத்தைக் கொண்டு செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து இதுபற்றிய உத்தியோக பூர்வ செய்திகள் எதனையும் வாசித்ததாக நினைவில் இல்லை. இப்போது தான் இலங்கையின் மத்தியவங்கி ஆளுநர் இலங்கைக்கு வரும் இந்தியப்பிரஜைகள் இந்திய ரூபாவிலேயே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறார். இதுவரை விசேட இடங்கள் தவிர்ந்த ஏனைய பொதுவெளியில் இலங்கை ரூபாவைத்தவிர வேறெந்த நாணயமும் சட்டரீதியிலான புழக்கப்பணமாக அனுமதிக்கப்படவில்லை. இப்போது இந்திய ரூபாவை புழக்கப்பணமாக ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுளதாகவே கொள்ளலாம்.
இந்திய மத்திய வங்கியின் அறிக்கையில் இலங்கை கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இந்திய ரூபாவை வர்த்தகக் கொடுக்கல்-வாங்கல்களில் பயன்படுத்த முடியும் என அறிவிப்பதாகவும் கூறப்பட்டது. அத்துடன் இலங்கை ரூபாவை இந்திய ரூபாவுக்கு மாற்றி அதைக்கொண்டு ஏனைய நாடுகளின் நாணயங்களில் வர்த்கக் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. இது டொலர் நெருக்கடியில் பாதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கு சற்று ஆறுதல் தருவதாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
2021 2022 காலப்பகுதியில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகத்தின் பெறுமதி 6.81 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. அது மட்டுமன்றி இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் மிகக் கணிசமான எண்ணிக்கையில் இந்தியக் குடிமக்களே வந்து செல்கின்றனர். அதே போல் இலங்கையில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையினர் இந்தியாவுக்குச் செல்கின்றனர். ஆகவே இந்திய ரூபாவை நேரடியாகப் பயன்படுத்தலாம் என்ற ஏற்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களையும் பயணிகள் போக்குவரத்தையும் அதிகரிக்க உதவும்.
வர்த்தக் கொடுக்கல் வாங்கல்களில் இந்திய ரூபாவைப் பயன்படுத்தலாம் என்ற ஏற்பாடு இலங்கைக்கு மாத்திரம் வழங்கப்பட்ட ஒரு ஏற்பாடோ அல்லது சலுகையோ அல்ல இலங்கை உட்பட பொத்சுவானா, பிஜி, ஜேர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, மலேஷியா, மொரிஷியஸ், மியன்மார், நியூஸிலாந்து, ஓமான், ரஷ்யா, சிஷெல்ஸ், சிங்கப்பூர், தன்சானியா, உகண்டா மற்றும் இங்கிலாந்து ஆகிய பதினெட்டு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தஜிகிஸ்தான் கியூபா லக்ஸம்பேர்க் மற்றும் சூடான் ஆகிய நான்கு நாடுகள் இதில் இணைந்து கொளவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது.
ஆகவே இருபதிற்கும் மேற்பட்ட நாடுகள் இந்திய ரூபாவை தமது வெளிநாட்டு வர்த்தகத்தில் பயன்படுத்த ஆர்வம் காட்டியுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. உலக வர்த்தகத்திலே சுமார் 88 சதவீதம் அமெரிக்க டொலரிலேயே நடைபெறுகிறது. உலகளாவிய ரீதியில் 60 சதவீதமான வைப்புகளும் கடன்களும் அமெரிக்க டொலரிலேயே இடம் பெறுகின்றன. சர்வதேச வெளிநாட்டு நாணயச் சொத்து ஒதுக்குகளில் 59சதவீதம் அமெரிக்க டொலரிலேயே பேணப்படுகின்றன. ஆகவே உலகின் முதன்மை நாணயமாக ஐக்கிய அமெரிக்க டொலரே உள்ளது. அதன் மூலம் அமெரிக்கா உலக நாடுகளைக் கட்டுப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அமெரிக்கா தனது எதிராளிகளுக்கு எதிராக தனது நாணயத்தை பயன்படுத்துவது ரகசியமான ஒன்றல்ல. உதாரணமாக கடந்த ஆண்டு ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமித்த போது அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ரஷ்யாவின் வெளிநாட்டுச் சொத்து ஒதுக்குகளில் அரைப்பங்களவிலான 640 பில்லியன் டொலர்களை ரஷ்யா பயன்படுத்த முடியாதவாறு உறைய வைத்துள்ளன.
அதேபோல SWIFT-Society for Worldwide Interbank Financial Telecommunication என அழைக்கப்படும் உலகலளாவிய வங்கிகளுக்கிடையிலான நிதிசார் தொலைத்தொடர்பாடலுக்கான சமூகத்தின் ஊடாக ரஷ்யா வர்த்க செலுத்தல்ககைச் செய்வதிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் ஆப்கானிஸதான், ஈரான், வெனிசுவேலா, போன்ற நாடுகளின் டொலர் வடிவிலான சொத்துகளை அமெரிக்கா இலக்கு வைத்து வருகின்றமை புதிதான விடயமல்ல. உலகின் முதன்மை நாணயமாக டொலர் இருப்பதனாலேயே அது சாத்தியமாகிறது. இதனால் ரஸ்யா போன்ற பெரிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ள இந்தியா, ஜேர்மனி போன்ற நாடுகள் தமது எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவைப் பெரிதும் நம்பியுள்ளன. அமெரிக்காவின் ரஷ்யா மீதான தடைகளும் நெருக்குவாரங்களும் இந்நாடுகளில் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன. அமெரிக்க டொலருக்குப் பதிலாக இந்திய ரூபாவைப் பயன்படுத்த முடியுமாயின் டொலரில் தங்கியிருப்பதைக் குறைக்கலாம். இந்திய ரூபாவை வர்த்தகத்தில் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவாக்குவதே அதன் தேவையாக உள்ளது.
குறிப்பாக ஆசிய வட்டகையில் இந்திய ரூபாவைப் பிரபலப்படுத்துவதே முக்கியமான நோக்கமாக இருக்கிறது. ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ள நாடுகளை நோக்குமிடத்து அவை உலகின் எல்லாப்பகுதிகளிலும் அமைந்துள்ளன. அமெரிக்காவுடனும் மேற்குலக நாடுகளுடனும் முரண்பட்டுள்ள நாடுகள் வர்த்தகத்தில் ஈடுபட இதனை ஒரு மாற்று வழியாக அந்நாடுகள் பயன்படுத்தும். குறிப்பாக மேலே சொல்லப்பட்ட நாடுகளில் ரஷ்யாவே கூடிய அக்கறையுடன் இந்திய ரூபாவில் வர்த்தகம் செய்வதில் ஆர்வம் காட்டுவதாகக் இந்தியப்பத்திரிகைச் செய்தியொன்று கூறுகிறது. ஆகவே அமெரிக்கா இந்தியாவின் இந்த நகர்வை எவ்வாறு நோக்கும் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.
இந்திய ரூபாவை சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்தப்படும் ஒரு வெளிநாட்டு நாணயமாக அறிவித்த பின்னர் அதன் மூலம் கொடுக்கல்-வாங்கல்களும் தீர்ப்பனவகளும் செய்யப்படவேண்டுமாயின் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 18 நாடுகளிலும் உள்ள வங்கிகள் இந்தியாவில் உள்ள வங்கிகளில் SRVA என அழைக்கப்படும் Special Rupee Vostro Account ரூபாக் கணக்குகளை ஆரம்பிக்க வேண்டும். ஏற்கெனவே 60 வெளிநாட்டு வங்கிகள் இந்திய வங்கிகளில் அவ்வகை VOSTRO கணக்குகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டு விட்டது. இவ்வகையில் 60 ரஷ்யவங்கிகள் இக்கணக்குகளை ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது. இலங்கையின் மூன்று வங்கிகள் மும்பையில் உள்ள இந்தியன் வங்கியில் அக்கணக்குகளை ஆரம்பிக்க ஆனுமதி வழங்கப்பட்டது.
அண்மையில் இலங்கையின் செலான் வங்கி அக்கணக்கை ஆரம்பித்துள்ளது. இலங்கை வங்கி கணக்கை ஆரம்பித்து கோடுக்கல்-வாங்கல்களை ஆரம்பித்து விட்டதாகவம் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. இவ்வாறு இலங்கையில் உள்ள வங்கிகள் இந்தியாவில் இந்திய ரூபாவில் கணக்குகளை ஆரம்பிக்கும் போது இந்தியாவின் பார்வையில் அது VOSTRO கணக்கு ஆகும். VOSTRO என்பதன் அர்த்தம் எங்களிடம் உள்ள உங்கள் பணம் என்பதாகும். ஆனால் அதே கணக்கு இலங்கையின் பார்வையில் NOSTRO கணக்கு என அழைக்கப்படும். NOSTRO என்பதன் அர்த்தம் உங்களிடம் உள்ள எங்கள் பணம் என்பதாகும். அதேபோல இலங்கை மற்றும் இந்தியா தவிர்ந்த மூன்றாவது நாடொன்றின் பார்வையில் உதாரணமாக வங்காள தேசத்தின் பார்வையில் அதே கணக்கு LORO கணக்கு என அழைக்கப்படும். LORO என்பதன் அர்த்தம் உங்களிடம் உள்ள அவர்களின் பணம் என்பதாகும்.
இப்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்படுவதாகக் கருதுவோம். அதற்கான செலுத்தல் இந்தியாவில் உள்ள வங்கியில் இலங்கையைச் சேர்ந்த வங்கியின் VOSTRO கணக்கில் வரவு வைக்கப்படும். இப்போது இந்தியாவிலிருந்து இறுக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான செலுத்தல்களை அதே கணக்கில் அருந்து மேற்கொள்ள முடியும். அதேபோல இந்தியாவில் உள்ள வங்கிகளும் இலங்கையில் VOSTRO கணக்குகளைத் திறப்பதன் மூலம் இந்திய ரூபாவிலான கொடுக்கல்வாங்கல்களை திறம்பட மேற்கொள்வதுடன் இலங்கை ரூபாவை இந்திய ரூபாவுக்கும் இந்திய ரூபாவை இலங்கை ரூபாவுக்கும் கொடுக்கல் வாங்கல் செலவுகள் இன்றி நேரடியாக மாற்றிக்கொள்ள முடியும். முன்னர் சட்டரீதியாக இலங்கை ரூபாவை இந்திய ரூபாவுக்கு மாற்ற வேண்டும் என்றால் முதலில் இலங்கை ரூபாவை ஐக்கிய அமெரிக்க டொலருக்கு மாற்றி டொலரை இந்திய ரூபாவுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு கமிஷன் வேறு கொடுத்து அழவேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் பயணம் செய்வோர் இந்த மாற்றல்கள் ஊடாக தமது பணத்தில் ஒரு பகுதியை இழக்க நேரிடும் அதைத் தவிர்க்க கள்ளச் சந்தையில் இந்திய ரூபாவை மாற்றிக் கொண்டு செல்வதுண்டு. ஆனால் இந்தியாவிலிருந்து மீளவரும் போது இந்திய கரன்சி சற்று கூடுதலாக கொண்டுவரப்பட்டால் அங்குள்ள விமான நிலையக் காக்காய்கள் அதனைக் பிடுங்கிக் கொண்டு அனுப்பிய சம்பவங்களும் உண்டு. இப்போது வெளிவந்துள்ள உத்தியோக பூர்வ அறிக்கைகளின் படி 5000 டொலருக்கு சமமான பெறுமதியுள்ள இந்திய ரூபாவை கொண்டு செல்லவும் கொண்டு வரவும் சாத்தியப்பட வேண்டும். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது என்பது போல எழுத்தில் எவ்வாறு இருந்தாலும் நமது வாலாக்கள் எப்படி நடப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியா ரூபா மட்டுமல்ல, இந்தியாவும் இலங்கைக்கு எப்போதும் உதவியாகவே இருக்கும் என்பதை கொழும்பில் ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள் உணர வேண்டும். இந்திய ரூபாயில் வர்த்தம் செய்வது என்பது இலங்கை இப்போது இருக்கக் கூடிய கடும் பொருளாதார நெருக்கடியில் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஆனால் அரசியல் நிலைப்பாடு போன்று சொல்வதொன்று செய்வதொன்று என்றும் ஒருவருக்கும் வாலையும் மற்றவரும் தலையையும் என்று காட்டும் நிலைப்பாடு மற்றும் சுத்துமாத்து வேலைகளை பொருளாதார விடயத்திலும் இலங்கை கையாளுமாயின் ஆப்பை பிடுங்கிய குரங்கின் கதையாகிவிடும் என்பதை மனதில் கொள்வது நல்லது. “இவன் ரொம்ப நல்லவன்….எவ்வளவு அடித்தாலும் தாங்குவான்” என்கிற நிலைப்பாட்டை எடுத்து, அவன் திருப்பியடித்தால் கதை கந்தல்தான்.
ஊதுகிற சங்கை ஊதியாகிவிட்டது. இனி பிழைத்துக்கொள்வது மகனே உனது சாமர்த்தியம்.
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 1 – 10
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 11
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 12
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 13
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 14
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 15
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 16
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 17
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 18